சனிக்கிழமை, ஏப்ரல் 20
Shadow

96 திரை விமர்சனம்

 

தமிழ் சினிமாவில் எப்போதாவதுதான் இப்படி ஒரு படங்கள் தலைகாட்டும்… அந்த படங்களை பார்க்கிற அத்தனை தலைகளும் தங்கள் கடந்த கால வாழ்க்கையை திரும்பி பார்க்க வைக்கும்… அப்படி ஒரு படம்தான் விஜய்சேதுபதி&த்ரிஷா நடித்திருக்கிற 96

பள்ளிப்பருவ காதல் கதையை அதுவும் நிறைவேறாத காதலை இத்தனை நீளமாக… அத்தனை அழகாக… கவிதையாக… படத்திலும், படம் பார்க்கிறவர்களையும் வெட்கப்பட வைத்து… யப்பா இயக்குனரே… இவ்ளோ நாளா எங்கய்யா இருந்த… என்று கேட்க வைத்திருக்கிறார் இயக்குனர் பிரேம்குமார்.

பள்ளிக்காதல் முடிந்து திடீரென காணாமல் போன ராமச்சந்திரன் தன் முன்பு 22 வருஷங்களுக்கு பிறகு தாடி மீசையுடன் 40ஐ தாண்டிய முதிர்ந்த வயசுடன் வந்து நிற்கும்போது… எதிரில் நிற்பது பள்ளியில் உருகி உருகி ஆசைப்பட்ட ஜானு என்பதை அறிந்து வெட்கப்படும் விஜய் சேதுபதி… அதை பார்த்து வயசை மறந்து படம் பார்க்கும் எல்லாருமே வெட்கப்படுகிறார்களே அது எப்படிய்யா… விஜய்சேதுபதி உன்னால மட்டும் முடியுது…

தமிழ் சினிமாவில் ஹீரோவை பார்த்து இதுவரை ஹீரோயின்கள் கேட்காத கேள்வி ‘யேய்… நீ வெர்ஜினா’ என த்ரிஷாவை கேட்க வைத்து அதற்கும் விஜய்சேதுபதி ஒரு ஷாக் வெட்கம் அடைவார் பாருங்க… அந்த சின்ன சினிமாட்டிக் மேஜிக் விஜய்சேதுபதியால் மட்டுமே பன்ன முடியும்…
ஒரு வரி கதையை இரண்டரை மணிநேரத்திற்கு மேல் இழுத்துக் கொண்டு போகாமல் நகர்த்திக் கொண்டு போவதோடு படம் பார்க்கிறவர்களே கூடவே பயணம் செய்ய வைக்கிற வித்தைக்காரன் இயக்குனர் பிரேம்குமார் என்றால் அதற்கு காரணமாக ஸ்கிரீனில் விஜய்சேதுபதியாக ரசிகனும், த்ரிஷாவாக அவர்களின் பள்ளிபருவ தோழிகளும்தான் இருப்பார்கள்.
அந்தளவுக்கு ஒவ்வொரு காட்சியிலும் அத்தனை அழகு… கவிதை… நினைவுகளை மீட்டெடுத்த வீணைதான் 96 படம்.


த்ரிஷா… ஏம்மா… தொடங்கின இடத்திலயே அப்படியே இருக்குற மாதிரி எப்படி அழகை மெயின்டென்ட் பன்ற… சின்ன சின்ன சேஷ்டைகளில் தொடங்கி கல்லூரிக்கு வந்தது தான் விரும்பிய ராமச்சந்திரன் என்பது தெரியாமல் திட்டி அனுப்பியதை நினைத்து கதறும்போதும்… எல்லாம் முடிந்து கல்யாணம் குழந்தை என்றானதால் முதிர்ந்த நிலையிலும் தான் விரும்பியவன் இன்னமும் கல்யாணம் செய்து கொள்ளாமல் இருப்பதை நினைத்து அவனுக்கு பெண் பார்க்க துடித்து… இயற்கையை வெறுத்து… பிரிவை தாங்க முடியாமல் உடைந்து அழுது… கடைசியில் வீட்டுக்கு கூப்பிடும் விஜய் சேதுபதியை பார்த்து ‘நான் அந்த மாதிரின்னு நெனச்சியாடா’ என்று த்ரிஷா ஷாக் கொடுத்து விட்டு ‘இந்திர லோக மேனகை,ஊர்வசி,ரம்பைகளை அதே டிரஸ்சில் அனுப்பினாலும் அவங்களை பத்திரமா பாத்துப்படா நீ’ என தன் காதலன் மீதான நம்பிக்கையை சொல்வதும் அத்தனை அழகு.

இங்கெல்லாம் தியேட்டரில் கிளாப்ஸ் அள்ளும் நிச்சயம்…


நமக்கும் இப்படி ஒரு காதலி கடைசிவரை நண்பியாக மாட்டாளா என எல்லாரையும் ஏங்க வைக்கிறது 96
22 ஆண்டுகளுக்கு பிறகு நண்பர்கள் ஒன்றுகூடும் இடத்திலேயே கிளைமாக்ஸ் என்ன என்பது தெரிந்து விடுகிறது… அதன்பிறகும் ஹீரோ, ஹீரோயின் இருவரை மட்டுமே வைத்து மீதி ஒரு மணிநேரத்தை எந்த நெருடலும் இல்லாமல் கவிதையாக கடத்தி செல்லும் இயக்குனரின் சினிமாட்டிக் மேஜிக் ரசிகனை கட்டிப்போட்டு விடுவதால் கிளைமாக்ஸ் தெரிந்தும் தன்னை அதில் பொருத்திப்பார்த்து லயிக்கிறான்…
பள்ளி நாளில் ஸ்கூலுக்கு வராத ஜானுவை தேடி அலைந்த போதும் 22 வருஷம் கழித்து வரப்போகிற ஜானுவுக்காக காத்திருந்த போதும் இருவருமே அந்த நடிப்பை அப்படி கொடுத்திருக்கிறார்கள்…
அதிலும் விஜய்சேதுபதியை த்ரிஷா தொட வரும்போது விஜய்சேதுபதி இதயம் துடிக்கும் சத்தம்… தியேட்டரில் பின்னணி இசையை நிறுத்தி விட்டு நிசப்தமாக இருந்தால் படம் பார்க்கிற அத்தனை பேரின் இதயங்களும் துடிக்கும் சத்தத்தை அடுத்தவர் கேட்க முடியும்… அப்படி ஒரு கவிதை காட்சிகள் அது…

96 படம் ஒரு சினிமா என்ற வட்டத்தை தாண்டி கோடிக்கணக்கான ஜானுக்களையும், ராமச்சந்திரன்களையும் மீண்டும் நினைவு படுத்தி… படுத்தி எடுக்கப்போவது மட்டும் நிச்சயம்…
ஒரு படம் ரிலீசுக்கு பிறகும் விவாதத்திற்கு உள்ளாகிறது என்றால் அது வெற்றிப்படம் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை…
‘தன் வீட்டில் தன் உடையில் தன் காதலி த்ரிஷா… திருமணமாகி கணவன் சிங்கப்பூரில்… கட்டிலின் மேலே அவள்… கீழே தரையில் விஜய்சேதுபதி…

திடீரென ‘ராம்… தூங்கிட்டியா… என்கிற த்ரிஷா மேல வா என்கிறார்…

இல்ல… நான் எப்பவும் தரையிலதான் படுப்பேன்… இதுதான் எனக்கு… சரியாவரும்… நீ தூங்கு… என்கிற விஜய்சேதுபதியிடம்…

அடச்சே… மேல வா… என த்ரிஷா அதட்ட…

ஒட்டுமொத்த தியேட்டரும்… மணிரத்னம் படமாகப்போகுமோ… இல்லை இல்லை…அடுத்து செல்வராகவன் பட சீன் தான் என யோசித்து வியர்த்து எச்சில் முழுங்கி ஸ்கிரீனை பார்த்துக் கொண்டிருக்க…

தரையில் படுத்திருக்கும் விஜய்சேதுபதியின் விரல்கள் மட்டும் கட்டிலின் பெட் ஓரத்தில் மெல்ல எட்டிப்பார்த்து தொட்டு தாளமிட்டபடி எழுந்திருக்கும்போது…

பொதுவாகவே சொல்வார்கள் பழம் நழுவி பாலில் விழும்… அது நழுவி நம் வாயில் விழாதா என காத்திருக்கும் பலரின் சிந்தனைக்கு செருப்படி கொடுத்ததுபோல
கட்டிலின் மேலே த்ரிஷா செல்போனில் விஜய்சேதுபதிக்கு பெண் தேடிக் கொண்டிருப்பார் பாருங்கள்… இயக்குனரின் திறமைக்கு ஒரு சபாஷ்…!

கலாச்சார சீர்கேடுகளை படமாக்கினால் லாபம் வரும் என தெரிந்தும் கலாச்சாரத்தை சீர்கெடுக்காமல் காதல் முதிர்ந்தாலும் நட்பாக தொடரும் என காட்சிப்படுத்திய இயக்குனரின் ரசனைக்கு வாழ்த்துக்கள்.

சின்னவயது த்ரிஷாவாக ‘ஜானு’ கேரக்டரில் நடித்துள்ள புதுமுகம் கௌரிகிருஷ்ணா தமிழ் சினிமாவுக்கு கிடைத்த புது வரவு. பள்ளிக்கூட சேஷ்டைகளில் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்துகிறார்.

சின்னவயது விஜய்சேதுபதியாக நடித்திருக்கிற ஆதித்யா பாஸ்கர் அப்படியே விஜய்சேதுபதியின் சின்னவயது சில்மிஷங்களை கண் முன் கொண்டுவருகிறார். தேர்ந்த நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் மகன் ஆதித்யா என்பது கூடுதல் தகவல். அப்பாவுக்கு தப்பால் பிறந்திருக்கிறார் மகன் ஆதித்யா.

சின்ன வயது தேவதர்ஷினியாக அவரது மகளே நடித்திருப்பதும், வழக்கமான தேவதர்ஷினியின் நடிப்பும் அருமை.
இவர்களோடு ஜனகராஜ், பக்ஸ், ஆடுகளம் முருகதாஸ் படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
புகைப்பட நிபுணரான விஜய்சேதுபதி வாழ்க்கையில் கார் பயணம் அந்த காரில் விஜய்சேதுபதிக்கும், த்ரிஷாவுக்குமான காட்சிகள் அட… காருக்குள் இப்படியும் காட்சிகள் வைக்க முடியுமா என சொல்லும் இயக்குனரின் சின்ன சின்ன ட்விஸ்ட் சபாஷ் பிரேம்குமார்.

 

96 படத்தை நகர்த்தும் முக்கிய பங்கு இசைஞானி இளையராஜாவின் அந்த கால பாடல்களுக்கு உண்டு. இந்த படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வஸந்தாவின் பின்னணி இசை நம்மை பல இடங்களில் தாலாட்டுகிறது… சில இடங்களின் கண்ணில் ஈரம் சொட்டுகிறது… மிக சில இடங்களில் அழ வைக்கிறது…

சண்முகசுந்தரம் ஒளிப்பதிவில் காட்சிகள் அத்தனையும் விரசமில்லாத கண்ணாடி. அது படுக்கையறையாக இருந்தாலும் பாத்ரூமாக இருந்தாலும்… வழியனுப்பும் போது காரின் கியர் மீது இருக்கும் த்ரிஷாவின் கை மீது தன் கை பட்டதும் பட்டென உதறும் விஜய்சேதுபதியின் சிலிர்ப்பு பின் அதே கை மீதே தன் கையை வைத்து கியர் போட்டு வண்டியை நகர்த்த… ரசிகனும் தன் வாழ்க்கையின் பள்ளி நாட்களை மனக்கண்ணில் ஓட்டிப்பார்க்கிறான்…

தயாரித்த நந்தகோபால், வெளியிட்ட 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித்குமார் இருவருக்கும் பேர் வாங்கித்தரும் படம் 96.
மொத்தத்தில் 96 உள்ளே ஒளித்து வைத்துள்ள நிறைவேறாத முதல் கன்னிய காதலை மீண்டும் அசைபோட வைத்து நினைவுகளை மீட்டெடுக்கும் வீணை…

-கோடங்கி

549 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன