புதன்கிழமை, ஏப்ரல் 24
Shadow

தம்பிதுரைக்கு முதல்வர் ஆசை இருந்தது – TTV தினகரன்

திருச்சி வடக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக அலுவலகம் திறப்பு விழா திருவானைக்காவலில் நடைபெற்றது. புதிய அலுவலகத்தை கட்சியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக சில கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம். அவை எந்தெந்த கட்சிகள் என்பதை இப்போது கூற மாட்டேன். பா.ஜ.க.வுடன் தி.மு.க. கூட்டணி சேர்ந்தால் காங்கிரசுடன் நாங்கள் சேருவோம் என்று கூற முடியாது. நான் ஏற்கனவே தேசிய கட்சிகளோடு கூட்டணி வைக்கமாட்டேன் என்று கூறி இருக்கிறேன். அதில் உறுதியாக இருக்கிறேன்.

தி.மு.க., மெகா கூட்டணி என எதை அமைத்தாலும் மக்களிடம் எடுபடாது. தி.மு.க. இப்போது உள்ள கூட்டணியை கூட மாற்றலாம். இதை அவர்கள் ஏற்கனவே செய்திருக்கிறார்கள். தி.மு.க. பயப்படுகிறது.

திருவாரூர் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தவுடன் நாங்கள் களத்தில் உடனே குதித்து விட்டோம். ஆனால் மு.க. ஸ்டாலின் தேர்தலை ரத்து செய்தவுடன் போட்டி போட்டு வரவேற்று அறிக்கை விட்டார். பாராளுமன்ற தேர்தலில் உறுதியாக நாங்கள்தான் வெற்றி பெறுவோம்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது நான் உறுதியாக வெற்றி பெறுவேன் என்று கூறினேன். அதே போன்று மிகப்பெரிய வெற்றி பெற்றேன். இப்போதும் பாராளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. மிகப்பெரிய வெற்றி பெறும்.

கொடநாடு விவகாரத்தில் உண்மையை சி.பி.ஐ. கண்டுபிடிக்க வேண்டும். இதில் மர்மம் உள்ளது. இந்த வி‌ஷயத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும். பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி சேர்ந்தால் டெபா சிட் கூட கிடைக்காது.தமிழகத்தில் ஜெயலலிதா, கருணாநிதி மறைவிற்கு பிறகு அனைத்து கட்சிகளுமே புதிய கட்சிகள் போல் தான் உள்ளது.

பாராளுமன்ற தேர்தலில் மெகா கூட்டணி அமைக்க மு.க.ஸ்டாலின் வெளி மாநிலம் சென்று உள்ளார். உள்ளூரில் விலை போகாததால் வெளி மாநிலத்தில் மார்க்கெட்டிங் செய்கிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி எப்படியாவது நாற்காலியை காப்பாற்றினால் போதும் என்ற நிலையில் உள்ளார்.

கொடநாடு விவகாரத்தில் அவர் பயப்படுவதற்கான காரணம் என்ன? இந்த ஆட்சி ஏஜெண்ட் ஆட்சி. பாரதிய ஜனதா கட்சியின் ஏஜெண்டாக செயல்படுகிறது. இதை மக்கள் தூக்கி எறிவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, பா.ஜ.க.வை பற்றி விமர்சனம் செய்வது தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு தினகரன் பதில் அளித்து கூறியதா வது:-

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தம்பிதுரைக்கு அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராக வேண்டும், முதல்- அமைச்சராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. முதலில் பன்னீர்செல்வத்தை முதல்- அமைச்சர் ஆக்கியதும் ஏமாற்றம் அடைந்தார். பிறகு சசிகலாவை பொதுச் செயலாளராக்கி எடப்பாடி பழனிச்சாமியை முதல்- அமைச்சர் ஆக்கியதும் மீண்டும் ஏமாற்றம் அடைந்தார்.

எனவே இனியும் முதல்வர் ஆக முடியாத விரக்தியில் தம்பிதுரை உளறி வருகிறார். இதனால் பா.ஜ.க. மீது குற்றச்சாட்டுக்களை கூறி விமர்சித்து வருகிறார்.தமிழகத்தில் அவர் ஒரு பேச்சு பேசுகிறார். பா.ஜனதாவை விமர்சிக்கிறார். ஆனால் டெல்லி சென்றால் அங்கே பா.ஜனதா மந்திரிகளுடன், எம்.பி.க்களுடன் இணக்கமாக இருக்கிறார். இதன் மூலம் அவர் நாடகம் ஆடுகிறார் என்றார் தினகரன்.

434 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன