வெள்ளிக்கிழமை, மார்ச் 29
Shadow

ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை!

ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை!

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பொது ஊரடங்கு அமலில் உள்ளது.

முதல் அலை ஓய்ந்த பிறகு கொரோனா ஊரடங்கு நடவடிக்கைகளில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டன. ஆனால் மக்கள் முறையானபடி தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்காததால் இந்த ஆண்டு தொடக்கத்தில் மிக கடுமையான கொரோனா 2-வது அலை தாக்கியது.

தமிழகத்தில் கடந்த மே மாதம் கொரோனா தொற்று பரவல் கட்டுப்படுத்த முடியாதபடி அதிகரித்தது. அந்த சமயத்தில்தான் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று தி.மு.க. ஆட்சியை பிடித்து இருந்தது.

மே மாதம் 2-வது வாரத்தில் தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை சுமார் 40 ஆயிரத்தை எட்டும் அளவுக்கு சென்றது. தினசரி உயிர்ப்பலி நூற்றுக்கணக்கில் இருந்தது.

இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய கடுமையான ஊரடங்கை மே மாதம் 10-ந் தேதி முதல் அமலுக்கு கொண்டு வந்தது. என்றாலும் மக்களின் அலட்சியம் காரணமாக கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது சவாலான பணியாக இருந்தது.

இதனால் தமிழகத்தில் முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தும்படி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி கடந்த மே மாதம் 24-ந் தேதி முதல் ஜூன் மாதம் 7-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அனைத்து அத்தியாவசிய பணிகள் தவிர மற்ற பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.

முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்ட பிறகு தமிழகத்தில் 2-வது அலையின் தாக்கம் குறைந்து கொரோனா வைரஸ் பரவலும் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ஜூன் 2-வது வாரத்துக்கு பிறகு சற்று நிம்மதி பெருமூச்சு விடும் வகையில் கொரோனா பாதிப்பு குறைந்தது. தற்போது கொரோனா பரவல் 2 ஆயிரத்துக்கும் கீழ் உள்ளது.
பெரும்பாலான மாவட்டங்களில் கொரோனா தாக்கம் தற்போது கணிசமான அளவுக்கு குறைந்துள்ளது. என்றாலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு 23-ந் தேதி காலை (திங்கட்கிழமை) 6 மணிக்கு நிறைவு பெறுகிறது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை 11 தடவை தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கை 23-ந் தேதியில் இருந்து மேலும் எத்தனை நாட்களுக்கு நீட்டிப்பு செய்வது என்பது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை (சனிக்கிழமை) ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள், மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகள் மற்றும் தமிழக அரசின் உயர் அதிகாரிகள் பங்கேற்கும் அந்த கூட்டத்தில் தமிழகத்தின் தற்போதைய கொரோனா நிலவரம் பற்றி தீவிரமாக ஆய்வு செய்யப்படுகிறது. கொரோனா தொற்று 4 மாவட்டங்களில் மிக அதிகமாக இருப்பதால் அந்த மாவட்டங்களில் அடுத்தக்கட்டமாக எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது பற்றி நாளைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட இருக்கிறது.

கொரோனா 3-வது அலை வரக்கூடும் என்ற அச்சம் இருப்பதால் தொற்றுப்பரவலை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது பற்றியும் நாளைய கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. மேலும் தற்போதைய வழிகாட்டு நெறிமுறைகளை மேலும் தீவிரப்படுத்துவதா அல்லது அதை தளர்வுபடுத்தலாமா என்பது பற்றியும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

செப்டம்பர் 1-ந் தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்து உள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன. இதுபற்றியும் அதிகாரிகளுடன் நாளை மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்கிறார்.

பள்ளிகள் திறக்கப்பட இருப்பதால், தியேட்டர்களையும் திறக்க வேண்டும் என்று தியேட்டர் அதிபர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். 50 சதவீத ரசிகர்களுடன் தியேட்டரை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளனர்.

இதுபற்றியும் நாளைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. அப்போது தியேட்டர்களை திறப்பதால் பாதிப்பு ஏற்படுமா? என்பது பற்றி தீவிரமாக விவாதிக்க உள்ளனர். எனவே தமிழகத்தில் தியேட்டர்கள் திறக்கப்படுவது பற்றிய முக்கிய முடிவு நாளை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

இதற்கிடையே பல்வேறு பகுதிகளிலும் சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் பெரும்பாலான பகுதிகளில் 99 சதவீத தளர்வுகள் அமலில் இருப்பதால் சுற்றுலா தலங்களையும் பார்வையாளர்களுக்கு திறந்து விட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

எனவே சுற்றுலா தலங்கள் அடுத்த வாரம் முதல் திறப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதே சமயத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகம் உள்ள மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை நீட்டிக்கவே வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பான அறிவிப்புகள் நாளை தெரிந்து விடும்.
171 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன