வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

கொடூர கொலையாளிக்கு தூக்கு ஆணவ கொலைக்கு எதிராக கடலூர் நீதிமன்றம் வரலாற்று தீர்ப்பு!

 

கொடூர கொலையாளிக்கு தூக்கு ஆணவ கொலைக்கு எதிராக கடலூர் நீதிமன்றம் வரலாற்று தீர்ப்பு!

 

வன்னியர் பெண் கண்ணகியை காதலித்து திருமணம் செய்துக் கொண்டதற்காக கண்ணகியையும் அவர் கணவர் தலித் சமூகத்தச் சேர்ந்த முருகேசனையும் துள்ளத் துடிக்க படுகொலை செய்த கொலையாளிகள் மற்றும் துணைநின்ற காவலர்களுக்கு இன்று தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.

A2 கண்ணகியை படுகொலை செய்த அவரின் அண்ணன் மருதுபாண்டிக்கு தூக்கு தண்டனையும், A1-A15 (குற்றவாளிகள் அனைவருக்கும் ஆயுள் தண்டனை (இதில் A4 & A9 விடுதலை செய்யப்பட்டனர்)

ஆயுள் தண்டனைப் பெற்ற A14 தமிழ்மாறன் அப்போது காவல் உதவி ஆய்வாளராக இருந்து குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்தவன், தற்போது காவல் உதவி கண்காணிப்பாளராக இருந்து ஓய்வு பெற்றவன். மற்றும் A15 செல்லமுத்து காவல் உதவி ஆய்வாளராக இருந்து குற்றச் செயலுக்கு உடந்தையாக இருந்தவன், தற்போது காவல் ஆய்வாளராக இருக்கிறான். இவர்கள் இருவரும் படுகொலை குற்றவாளிகள் என தீர்ப்பளித்து ஆயுள் தண்டனை பெற்றுள்ளனர். எனவே குற்றவாளிகளில் 13 பேரும் தண்டனைப் பெற்றுள்ளனர். ஒருவன் உயிர் துறக்கிறான்., மற்றவர்கள் வாழ்க்கையைத் துறக்கிறார்கள்.

A4 & A9 முருகேசனின் சித்தப்பா ஐயாசாமி மற்றும் குணசேகரன் ஆகியோர் மீது பொய்யாக வழக்கு சோடிக்கப்பட்டதால் விடுதலை செய்யப்படுகிறார்கள்.

 

  1. துரைசாமி ( A1 )
    2. மருதபாண்டியன் ( A2 )
    3. ரங்கசாமி ( A3 )
    4. அய்யாசாமி ( A4 )
    5. கந்தவேலு ( A5 )
    6. ஜோதி ( A6 )
    7. வெங்கடேசன் ( A7 )
    8. மணி ( AS )
    9. குணசேகரன் ( A9 )
    10. தனவேல் ( A10 )
    11. அஞ்சாப்புலி ( A11 )
    12. ராமதாஸ் ( A12 )
    13. சின்னதுரை ( A13 )
    14. தமிழ்மாறன் ( A14 )
    15. செல்லமுத்து ( A15 )

ஆணவக் கொலையின் முழு விபரம் : கடலூர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை  24.09.2021 தீர்ப்பு வழங்கியது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகிலுள்ள குப்பநத்தம் புதுக்காலனியைச் சேர்ந்த சாமிக்கண்ணு மகன் முருகேசன் (25). தலித் சமுதாயத்தைச் சேர்ந்த இவர் பி.இ (கெமிக்கல்) பட்டதாரி. அதேப்பகுதியில் வசித்த மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த துரைசாமி மகள் கண்ணகி (22) என்ற பெண்ணை காதலித்து கடந்த 5-5-2003 அன்று பதிவு திருமணம் செய்துக் கொண்டனர். மேலும்,அவரவர் வீட்டில் தனித்தனியாக வசித்து வந்தனர். இந்த விவகாரம் வெளியில் தெரிந்த நிலையில் கண்ணகியை விழுப்புரத்திலுள்ள உறவினர் வீட்டில் விட்டுவிட்டு வந்துள்ளார், இத்திருமணத்தினால் தங்களது கௌரவம் பாதிக்கப்பட்டதாக உணர்ந்த பெண்ணின் பெற்றோர் 8-7-2003 அன்று வண்ணாங்குடிகாட்டிலுள்ள மயானத்தில் முருகேசன்-கண்ணகி ஆகியோரது வாய், காதில் விஷத்தை ஊற்றி கொலை செய்து பின்னர் உடலை தனித்தனியாக எரித்துள்ளனர்.

இச்சம்பவம் ஊடகங்கள் மூலமாக வெளிவந்த நிலையில் முருகேசனின் பெற்றோர் விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்போது, காவல்துறை ஆய்வாளராக இருந்த மா.செல்லமுத்து (66) (தற்போது துணை கண்காணிப்பாளராகி ஓய்வு பெற்றவர்), உதவி ஆய்வாளராக இருந்த பெ.தமிழ்மாறன் (51) (ஊழல் வழக்கில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்) ஆகியோர் ஆணவக் கொலையை மூடி மறைக்கும் நோக்குடன் செயல்பட்டதோடு, முருகேசன், கண்ணகி தரப்பில் தலா 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து வழக்கை முடித்தனர்.

இந்த வழக்கினை சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமென சாமிக்கண்ணு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். அதனடிப்படையில், வழக்கு விசாரணை மேற்கொண்ட சிபிஐ 9-3-2009 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. அதில், கண்ணகி-முருகேசன் ஆகியோரை ஜாதிய வன்கொடுமையால் கண்ணகி குடும்பத்தினர் ஆணவப் படுகொலை செய்ததாக குறிப்பிட்டனர். இதற்கு உடந்தையாக முருகேசன் உறவினர்கள் 2 பேரும், அப்போதைய காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் ஆகியோரும் இருந்ததாக குறிப்பிட்டிருந்தனர்.

இந்த வழக்கு கடலூர் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் தினசரி விசாரணை நடத்தும் வகையில் எஸ்.சி, எஸ்.டி சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி எஸ்.உத்தமராசா வெள்ளிக்கிழமையன்று தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கினை சிபிஐ விசாரிக்கவும், வழக்கில் பல்வேறு திருப்பங்களை ஏற்படுத்தவும் பல்வேறு அரசியல் கட்சியினர், மனித உரிமை ஆர்வலர்கள் அமைப்பினர் தொடர்ந்து போராடி வந்ததால் தீர்ப்பினை எதிர்பார்த்து ஏராளமானவர்கள் நீதிமன்றத்தில் கூடினர். காலையில், நீதிபதி தனது தீர்ப்பின் முதற்பகுதியை வாசித்தார். அதில், முருகேசனின் உறவினர்கள் செ.அய்யாசாமி (61), பா.குணசேகரன் (59) ஆகியோர் மிரட்டப்பட்டு சம்பவ இடத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். எனவே, அவர்களுக்கு இக்கொலையில் சம்பந்தம் இல்லாததால் அவர்களை விடுதலை செய்வதாக அறிவித்தார்.

மீதமுள்ள 13 பேரும் குற்றவாளிகள் என்று அறிவித்தார். அதன்பின்னர் சுமார் 2 மணி நேரத்திற்குப் பிறகு ஒவ்வொருவருக்குமான தண்டனை விபரத்தை அறிவித்தார்.

அதில், ஆணவக் கொலைக்கு முக்கிய காரணமாக விளங்கிய பெண்ணின் சகோதரர் து.மருதுபாண்டியன் (49) என்பவருக்கு சாகும் வரையில் தூக்கிலிடும் மரண தண்டனையும், ரூ.4.65 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்புக் கூறினார்.

பெண்ணின் தந்தை சி.துரைசாமி (68), அவரது மகன் ரெங்கசாமி (45), உறவினர்களான கோ.கந்தவேலு (54), கோ.ஜோதி (53), இரா.மணி (66), இரா.தனவேல் (49), வை.அஞ்சாபுலி (47), கா.ராமதாஸ் (52), ந.சின்னதுரை (50) ஆகியோருக்கு கொலை மற்றும் பல்வேறு பிரிவுகளின் கீழ் தலா 3 ஆயுள் தண்டனையும், தலா ரூ.4.15 லட்சம் அபராதமும் விதித்தார். தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார். மேலும், அப்போதைய காவல் ஆய்வாளர் மா.செல்லமுத்து (66), உதவி ஆய்வாளர் பெ.தமிழ்மாறன் (51) ஆகியோருக்கு எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனையும் தலா ரூ.1.15 லட்சம் அபராதமும் விதித்தார். மேலும், இருவரும் தலா ரூ.3 லட்சத்தை பாதிக்கப்பட்ட முருகேசன் குடும்பத்தினருக்கு வழங்கவும் உத்தரவிட்டார்.

தமிழக்தையை உலுக்கிய ஆணவக் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த 15 பேரில் இரண்டு பேரை விடுதலை செய்தும், ஒருவருக்கு மரண தண்டனையும், காவல்துறையைச் சேர்ந்த இரண்டு பேர் உள்பட 12 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பு வழங்கினார். இந்த தீர்ப்பினை முன்னிட்டுட கடலூரில் நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். விருத்தாசலம் பகுதியிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

 

 

 

234 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன