ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே தனியார் பள்ளி ஒன்றில் 15 வயது மாணவி ஒருவர் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். பரமக்குடி வைகை நகர் பகுதியை சேர்ந்தவர் சிகாமணி (வயது 44). இவர் பரமக்குடி நகராட்சி அ.தி.மு.க.கவுன்சிலராக உள்ளார்.
இவரும், அவரது நண்பரான மாதவன் நகரை சேர்ந்த ராஜா முகமதுவும் (36) சேர்ந்து காரில் அந்த மாணவியை ஏற்றி சென்றுள்ளனர்.
பின்பு சிவகங்கை மாவட்டம் மானாமதுரை செல்லும் வழியில் உள்ள ஒரு மகாலுக்கு மாணவியை அழைத்து சென்றனர்.
அங்கு வைத்து அந்த மாணவியை சிகாமணி, ராஜா முகமது மற்றும் பரமக்குடி புது நகரை சேர்ந்த பிரபாகரன் (42) ஆகிய 3 பேரும் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுபோன்று பலமுறை அந்த மாணவியை இவர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
மேலும், சிகாமணி அலுவலகத்தில் பணியாற்றி வரும் பரமக்குடி புது நகரை சேர்ந்தவர்களான கயல்விழி (45), அன்னலட்சுமி என்ற உமா (34) ஆகியோரும் அவர்களுக்கு உடந்தையாக இருந்துள்ளனர்.
இது குறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரையிடம் புகார் அளித்தனர்.
அவரது உத்தரவின் பேரில் பரமக்குடி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
பின்னர் சிகாமணி, பிரபாகரன், ராஜா முகமது ஆகியோர் மீது போக்சோ சட்டத்திலும், கயல்விழி, அன்னலட்சுமி என்ற உமா ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களை போலீசார் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
அதன் அடிப்படையில் மேலும் சிலருக்கு இதில் தொடர்பு இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில் பாலியல் வழக்கில் சிக்கி கைதாகி உள்ள பரமக்குடி நகராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர் சிகாமணியை கட்சியிலிருந்து நீக்கி எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில், கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்,
கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், ஜி. சிகாமணி, (பரமக்குடி நகரக் கழக அவைத் தலைவர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.