ஒரு மர்மமான கொலை; அது மனிதரால் நிகழ்த்தப்பட்டக் கொலையா..? இல்லை அமானுஷ்ய சக்தியால் நடந்தக் கொலையா…? என்பதில் இருக்கும் குழப்பம்… இவைகளுக்கு விடை தேடிச் செல்லும் நாயகனின் பயணமே “அவள் பெயர் ரஜினி” திரைப்படத்தின் கதை.
நாயகனாக நடித்திருக்கிறார் காளிதாஸ் ஜெயராம். அவருடைய சகோதரியாக நமீதாப்ரமோத் நடித்திருக்கிறார். சகோதரி வாழ்வில் அதிர்ச்சிகரமான நிகழ்வு நடக்கிறது.அதுகுறித்து காவல்துறை விசாரிக்கிறது. ஆனால் எல்லா இடங்களிலும் காவல்துறையை முந்திச்சென்று துப்பறியும் வேடம் காளிதாஸ் ஜெயராமுக்கு. அதைச் சிரத்தையாகச் செய்திருக்கிறார். பாசப்பிணைப்பும் உண்மையை அறியும் தவிப்பும் சிறப்பு.
நமீதாப்ரமோத், பாதிக்கப்படுகிற பெண்ணாக நடித்திருக்கிறார். அவருடைய கண்களிலேயே பல உணர்வுகளை வெளிப்படுத்துகிறார். காவல்துறை விசாரிக்கும் காட்சிகளில் அவருடைய நடிப்பு அவ்வளவு எதார்த்தம்.
படத்தின் பெயரிலிருக்கும் ரஜ்னியாக நடித்திருக்கும் லட்சுமிகோபால்சாமி, நாயகியாக வரும் ரெபோமோனிகாஜான் ஆகியோரும் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.
4 மியூசிக்ஸ் இசையும் திரைக்கதைக்கு உதவிபுரிந்திருக்கிறது.படத்தொகுப்பின் மூலம் விறுவிறுப்பைக் கூட்ட முயன்றிருக்கிறார் தீபுஜோசப்.
அறிமுக இயக்குநர் வினில் ஸ்கரியா வர்கீஸ் எழுதி இயக்கியிருக்கிறார்.மையக்கதையும் மையக்கதாபாத்திரங்களுக்கும் இருக்கும் இடைவெளியால் திரைக்கதையோட்டத்தில் இருக்கும் தொய்வு பலவீனம்.
தப்பு செய்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்கிற உணர்வில் எழுதப்பட்ட கதைக்குள் பேய் முலாம் திகில் சாயம் எல்லாம் பூசி வித்தியாசம் காட்டியுள்ளார்.
மதிப்பீடு 2.5/5