வியாழக்கிழமை, மே 16
Shadow

“வடக்குப்பட்டி ராமசாமி” படத்தில் பெரியார் குறித்த சர்ச்சை சந்தானம் விளக்கம் அளிப்பார் – எஸ்கேப் ஆன இயக்குனர்

வடக்கு பட்டி ராமசாமி பட டிரைலரில் பெரியார் குறித்த அவதூறு சர்ச்சை தமிழகம் முழுவதும் எழுந்த நிலையில் அதன் இயக்குனர் திடீரென பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது, “படத்தில் இடம் பெற்ற அந்த வசனம் தந்தை பெரியாரை அவமதிக்கும் வசனமல்ல. காட்சிக்காகச் சேர்க்கப்பட்ட ஒரு வசனம்தான் அது. படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அதற்குரிய விளக்கத்தை சந்தானம் கண்டிப்பாகக் கொடுப்பார்.

பக்தியை வைத்து பணம் சம்பாதிக்கும் சிலரைப் பற்றிய கதைதான் இந்தப் படம். 70களில் நடக்கும் கதை. அப்போது ‘மெட்ராஸ் ஐ’ என்ற கண் நோய் பரவியது. அதை வைத்தும் படத்தின் திருப்புமுனை காட்சிகளை அமைத்துள்ளோம். ஒரே கட்டமாக 63 நாட்களில் படத்தை முடித்தோம்.

எனது முந்தைய படமான ‘டிக்கிலோனா’ படம் எதிர்காலத்தைப் பற்றிய ஒரு படமாக அமைந்தது. அதனால், அடுத்த படத்தை கடந்த காலத்தைப் பற்றிய ஒரு படமாக எடுக்க வேண்டும் என இப்படத்தை எடுத்துள்ளேன்.

எனது இரண்டு படங்களின் தலைப்பும் கவுண்டமணி அவர்களிடமிருந்து எடுக்கப்பட்ட தலைப்புகள்தான். இந்தப் படம் கலகலப்பான ஒரு படமாக இருக்கும்,” என்றார்.

இந்த படத்தில் ஏற்பட்ட சர்சையால் இப்படத்தை வெளியிட ஒப்பந்தம் செய்த உதயநிதி முன்பு அங்கம் வகித்த ரெட் ஜெயண்ட் மூவிஸ் தற்போது வெளியேறி விட்டது. இந்த நிலையில் இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் பினாமி நிறுவனம் என சொல்லப்படும் ‘ரோமியோ பிக்சர்ஸ்’ சார்பாக ராகுல் இப்படத்தை வெளியிட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

பெரியார் புகழ் பாடும் கொள்கை கோட்பாடு உள்ளவர்கள் சினிமாவில் அதை கடைபிடிக்க மாட்டார்களா? தெரிந்தே பெரியாரை அவமரியாதை செய்த சந்தானத்திற்கு உதயநிதி ஸ்டாலின் கை கொடுப்பது ஏன்?

இவ்வளவு சர்ச்சை எழுந்த நிலையில் தான் பதிவிட்ட வீடியோவை மட்டும் நீக்கிவிட்டு சந்தானம் அமைதியாகிவிட்டார். பகிரங்க மன்னிப்பு அல்லது வருத்தம் கூட இது வரை தெரிவிக்காத சந்தானத்தின் செயல் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

54 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன