செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 23
Shadow

பைரி விமர்சனம் 3/5

 

 

தமிழ் சினிமாவில் புறாப்பந்தயத்தை வைத்து வெளியாகும் முதல் படம் பைரி

நாகர்கோவில் ஏரியாவில் 19-ஆம் நூற்றாண்டில் புறாப்பந்தயம் இருந்ததாகவும் அதன் தொடர்ச்சியாக இப்போதும் புறாப்பந்தயம் நடப்பதாகவும் கதை அமைத்துள்ளார் இயக்குநர். ஹீரோ டீம் பங்கேற்கும் புறா பந்தயத்தில் ஏற்படும் பிரச்சனைகள் சிக்கல்கள், அதன் மூலம் எழும் பல்வேறு முடிச்சுகள் என ஒரு விறுவிறு திரைக்கதை அமைத்துள்ளார் அறிமுக இயக்குநர் ஜான் கிளாடி

நாகர்கோவில் தான் படத்தின் கதைக்களம். ஊரை சுற்றி இருக்கும் இளைஞர்கள் அனைவரும் புறா ரேஸ் விடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். மதுரைக்கு எப்படி ஒரு ஜல்லிக்கட்டோ, அதேபோல் அந்த பகுதி மக்களுக்கு புறா ரேஸ் விடுவது என்பது அவர்களின் மூச்சாக இருக்கிறது.

புறாவை தங்களது உயிராக எண்ணி ஒவ்வொருவரும் வளர்த்து வருகின்றனர். அதில் என்னென்ன ஜாதி உள்ளது. அவற்றை எப்படியெல்லாம் பேணி பாதுகாத்து ரேஸூக்கு தயார் செய்வது என்று ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்துசெய்து வருகின்றனர்.

அப்படி, விஜி சேகருக்கு மகனாக இருக்கும் நாயகன் சையத், இஞ்சினியரிங் படித்துவிட்டு புறா வளர்ப்பதில் ஆர்வம் உள்ளவராக இருக்கிறார். அம்மாவின் எதிர்ப்பையும் மீறி, தனது வீட்டு மொட்டை மாடியில் புறா வளர்த்து வருகிறார்.

புறாவை பறக்க விடுவதில் இவருக்கும் பக்கத்து வீட்டுக்காரருக்கும் அவ்வப்போது பிரச்சனை ஏற்படுகிறது. தனது புறாவிற்கு ஒன்னென்றால் கொலை செய்யும் அளவிற்கு கோபம் வருகிறார் நாயகன் சையத்திற்கு.

அந்த ஏரியா இளைஞர்களை நல்வழிப்படுத்த ஒரு தலைவனாக வருகிறார் ரமேஷ் ஆறுமுகம்.

இந்நிலையில், அப்பகுதியில் புறா ரேஸ் விடுவதற்கான காலம் வருகிறது. இதனை ரமேஷ் ஆறுமுகம் நடத்துகிறார். அப்பகுதியில் சில கொலைகளை செய்து பெரும் ரெளடியாக சுற்றி வருகிறார் வினு லாரன்ஸ். புறா ரேஸ் விடும் சமயத்தில் வினு லாரன்ஸுக்கும் சையத்திற்கும் மோதல் ஏற்படுகிறது.

இந்த மோதல் கத்தி குத்தில் சென்று நிற்கிறது.,

இறுதியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதையாக வந்து நிற்கிறது.

ஹீரோவாக நடித்துள்ள சயத் மொய்தீன் நாகர்கோவில் மண்ணின் மைந்தனாகவே வாழ்ந்துள்ளார். வெடுக்கென்று வரும் கோபத்தையும் நண்பர்கள் மேல் வரும் பாசத்தையும் தன் நடிப்பு மூலம் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். ஹீரோவின் நண்பராக இயக்குநர் ஜான் கிளாடி நடித்துள்ளார். எதார்த்தம் மீறாத அவரது நடிப்பு ஈர்க்கிறது.

ராஜலிங்கத்திற்கு நண்பனாக நடித்திருந்த இயக்குனர் ஜான் கிளாடி. தான் ஒரு சிறந்த இயக்குனர் என்பதையும் தாண்டி ஒரு நல்ல நடிகன் என்பதையும் நிரூபித்திருக்கிறார்.

அடுத்ததாக, ரமேஷ் ஆறுமுகம்… ஊருக்கு ஒருவர் இவரை போல் இருந்து விட்டால் எந்த பிரச்சனையும் இனி எட்டிப் பார்க்காது என்பதற்கு ரமேஷ் பண்ணையார் போன்று ஒரு ஆள் வேண்டும் என்று ஏங்க வைக்கும் அளவிற்கு தனது நடிப்பைக் கொடுத்திருக்கிறார் ரமேஷ் ஆறுமுகம்.

சுயம்பு என்ற வில்லன் கதாபாத்திரத்தில் தோன்றிய வினு லாரன்ஸ் படத்திற்கு மிகப்பெரும் பலம். அவரது உடல் மொழி, பேச்சு மொழி என அனைத்தும் படத்திற்கு பெரும் துணையாக நிற்கிறது. ஊரில் இருக்கும் ரெளடி எல்லாம் இப்படிதாம்யா இருப்பான் என்று சொல்லும் அளவிற்கு தனது கேரக்டரை பக்காவாக செய்து முடித்திருக்கிறார் வினு லாரன்ஸ்.

படத்தை வேறோர் தளத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார் கேமராமேன். மிகவும் நெருக்கடி மிகுந்த தெருக்களில் கூட அவரது கேமரா பிசகாமல் சென்று சுழன்றுள்ளது. அருண்ராஜாவின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்… ஆனால் பின்னணி இசையில் கொஞ்சம் கவனித்திருக்க வேண்டும்… காதை பதம் பார்க்கும் அதீத சத்தம் பல நேரங்களில் எரிச்சலை தருகிறது..

பட்த்தின் அதீத ஓட்ட்த்திற்கு இணையாக அடிக்கடி வில்லுப்பாட்டு வலம் வருவது புதுசு… திரைக்கதைக்கு பலம் சேர்க்கிறது.

ஆனால் அதே நேரம் சென்சார் செய்யவேண்டிய காட்சிகள் அதிகம்… ஒரு குறிப்பிட்ட வட்டார வழக்கு மொழி பேசுவதால் எல்லா பகுதியிலும் அதை புரிந்து கொள்ள முடியாது. சாதிய வன்ம குறியீடுகள் அதிகம்… பட்த்தின் திரைக்கதை வேகமும் மிக அதிகம்… இவை எல்லாம் அளவாக இருந்திருந்தால் பைரி பேசப்படும்.

 

மதிப்பீடு 3/5.

 

 

 

 

66 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன