எலக்சன் – விமர்சனம் 3/5
நடிகர்கள் : விஜய் குமார், ப்ரீத்தி அஸ்ராணி, ரிச்சா ஜோஷி, ஜார்ஜ் மரியன், பாவெல் நவகீதன், திலீபன், நாஞ்சியால் சுகந்தி, ராஜீவ் ஆனந்த், குலந்துங்கன் உதயகுமார்
இசை : கோவிந்த் வசந்தா
ஒளிப்பதிவு : மகேந்திரன் ஜெயராஜ்
இயக்கம் : தமிழ்
தயாரிப்பு : ரீல் குட் பிலிம்ஸ் – ஆதித்யா
மிகப்பெரிய அரசியல் கட்சி ஒன்றின் தொண்டனாக இருக்கும் ஜார்ஜ் மரியன், இளம் வயது முதல் கட்சிக்காக கடுமையாக உழைத்தாலும் அவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. அவரது மகன் நாயகன் விஜய்குமாருக்கு அரசியல் மீது நாட்டம் இல்லை என்றாலும் தனது உறவினரின் தூண்டுதலால் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடிவு செய்கிறார். அப்பாவின் பேச்சையும் மீறி விஜய்குமார் உள்ளாட்சி தேர்தலில் களம் இறங்க, அதன் மூலம் அவருக்கும், அவரைச் சார்ந்தவர்களுக்கும் பல பிரச்சனைகள் வருகிறது. அந்த பிரச்சனைகளை சமாளித்து விஜய்குமார் தேர்தலில் வெற்றி பெற்றாரா?, இல்லையா? என்பது தான் ‘எலக்சன்’.
நாயகனாக நடித்திருக்கும் விஜய் குமார், அப்பாவி இளைஞனை விட அரசியல்வாதியாக நடிப்பதில் இன்னும் கூடுதலாக சிறந்த நடிப்பை அவரிடமிருந்து ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள் கோபம், காதல், தந்தை மீதான பாசம் என பல உணர்வுகளை வெளிப்படுத்தும் கதாபாத்திரம் என்றாலும் அளவாக நடித்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.
நாயகிகளாக நடித்திருக்கும் ரிச்சா ஜோஸி மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி இருவரும் கதையோடு பயணிக்கும் கதாபாத்திரத்தில் நேர்த்தியாக நடித்திருக்கிறார்கள். ப்ரீத்தி அஸ்ரானிக்கு அழுத்தமான வேடத்தில் நடிப்பதற்கு அதிக வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது. அதை அவர் சரியாக பயன்படுத்தி நேர்த்தியாக நடித்திருக்கிறார்.
கதைக்கு அச்சாணியாக இருக்கும் நடராஜின் தங்கை கணவராக கனி எனும் வேடத்தில் நடித்திருக்கும் பாவெல் நவகீதனின் நடிப்பு ‘தரமான சம்பவம்’.
அதேபோல் கட்சிக்கு விசுவாசமாக கடைசி வரை கட்சிக்காகவே உழைக்கும் உண்மையான தொண்டர்களை பிரதிபலிக்கும் நல்ல சிவம் கதாபாத்திரத்தில் ஜார்ஜ் மரியன் சிறப்பாக நடித்திருக்கிறார்.
வில்லனாக களம் இறங்கியிருக்கும் திலீபன், நாஞ்சியால் சுகந்தி, ரஜீவ் ஆனந்த், குலந்துங்க உதயகுமார் என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமாகவும், நேர்த்தியாகவும் நடித்திருக்கிறார்கள்.
அப்பாவியான சராசரி இளைஞன் ஒருவன் எப்படி குற்றப் பின்னணியுடன் அரசியல்வாதி ஆகிறான் என்பதுதான் படத்தின் கதை. கட்சிக்கு விசுவாசமாக உழைக்கும் அடிமட்ட தொண்டனின் வாரிசு அரசியலில் களமிறங்கினால்… எம்மாதிரியான அனுபவங்களை எதிர்கொள்கிறான் என்பதை உணர்வுபூர்வமான திரைக்கதை மூலம் விவரித்திருக்கிறார் இயக்குநர் தமிழ்.