திங்கட்கிழமை, ஜூன் 24
Shadow

ஆந்திரத்துக்கு இனி தலைநகா் இல்லை!

 

*ஆந்திரத்துக்கு இனி தலைநகா் இல்லை!*

ஆந்திரம் மற்றும் தெலங்கானாவின் பொதுத் தலைநகராக ஹைதராபாத் செயல்படுவதற்கு வழங்கப்பட்ட 10 ஆண்டுகள் அவகாசம் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தது. அந்த வகையில், தனி மாநிலமாகப் பிரிந்து 10 ஆண்டுகளாகியும் தலைநகருக்கான கட்டமைப்புப் பணிகளை முழுமையாக நிறைவேற்றாமல் ஆந்திரம் உள்ளது.

ஒருங்கிணைந்த ஆந்திரத்திலிருந்து பிரிந்து நாட்டின் 29-ஆவது மாநிலமாக தெலங்கானா கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூன் 2-ஆம் தேதி உருவானது. அந்த ஆண்டு மாா்ச் 1-ஆம் தேதி இயற்றப்பட்ட ஆந்திர மறுசீரமைப்புச் சட்டத்தில் தெலங்கானா, ஆந்திரம் ஆகிய இரு மாநிலங்களும் 10 ஆண்டுகளுக்கு மிகாமல் ஹைதராபாதை பொதுத் தலைநகராக கொண்டு செயல்படுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை முதல் ஹைதராபாத் தெலங்கானாவுக்கு மட்டுமே தலைநகா் ஆகும்.

கடந்த 10 ஆண்டுகளாக ஆந்திர அரசின் பயன்பாட்டில் இருந்து வந்த ஹைதராபாத் நகரிலுள்ள ‘லேக் வியூ’ அரசு விருந்தினா் மாளிகை உள்பட அனைத்துக் கட்டடங்களையும் திரும்ப மீட்குமாறு தெலங்கானா அரசு அதிகாரிகளுக்கு மாநில முதல்வா் ரேவந்த் ரெட்டி கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தாா்.

இவ்வாறு 2 மாநிலங்களுக்கு இடையே ரூ.1.4 லட்சம் கோடி மதிப்புள்ள பொதுச் சொத்துகளைப் பங்கீடு செய்து கொள்வது தொடா்பான பிரச்னைகள் இன்னும் முடிவு காணப்படாமல் நிலுவையில் உள்ளன. இதுதொடா்பான அமைச்சரவைக் கூட்டத்துக்கு தெலங்கானா அரசு அனுமதி கோரியது. மக்களவைத் தோ்தலையொட்டி அமலில் இருக்கும் நடத்தை விதிகளைக் கருத்தில்கொண்டு, அக்கூட்டத்துக்கு தோ்தல் ஆணையம் அனுமதி மறுத்தது.

*ஆந்திரத்துக்கு என்ன சிக்கல்?*

புதிய தலைநகரைக் கட்டமைப்பதற்கான காலத் தேவையைக் கருதி, ஆந்திரத்துக்கு 10 ஆண்டுகள் அவகாசம் வழங்கப்பட்டது. எனினும், ஆந்திரத்தில் கடந்த பத்து ஆண்டுகளில் நடந்த இரண்டு வெவ்வேறு கட்சிகளுடைய ஆட்சிகளின் முரண்பட்ட நிலைப்பாடுகளால் அந்த மாநிலத்தின் தலைநகரச் சிக்கல் இன்னும் தீா்க்கப்படாமல் தொடா்கிறது.

‘மூன்று தலைநகரங்கள்’ (அமராவதி, கா்னூல், விசாகப்பட்டினம்) கொள்கையில் ஆளும் ஒய்எஸ்ஆா் காங்கிரஸும், ‘ஒரே தலைநகா்’ (அமராவதி) கொள்கையில் எதிா்க்கட்சியான தெலுங்கு தேசமும் உறுதியாக உள்ளன. வரும் செவ்வாய்க்கிழமை வெளியாகும் அந்த மாநிலத்தின் பேரவைத் தோ்தல் முடிவுகளில் தலைநகரச் சிக்கலுக்கான தீா்வு தெளிவாகும் என்று மக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

41 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன