அம்பானி மகனின் திருமணத்தை முன்னிட்டு மும்பை நகரின் முக்கிய சாலைகள் மூடப்படவுள்ளது பொதுமக்களிடையே எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகனான ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சென்க்கும் வரும் ஜூலை 12 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.
அதனை முன்னிட்டு கடந்த மார்ச் மாதம் திருமணத்துக்கு முந்தைய விழா, குஜராத் மாநிலத்தின் ஜாம் நகரில் நடத்தப்பட்டது.
இந்த விழாவுக்கு கிரிக்கெட் நட்சத்திரங்கள், திரை பிரபலங்கள், அரசியல் வாதிகள், தொழிலதிபர்கள், உலக நாடுகளின் தலைவர்கள் போன்றோர் அழைக்கப்பட்டு இந்த விழாவில் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில், மும்பையின் முதன்மை வட்டாரத்தில் ஹோட்டல் அறைக் கட்டணங்கள் கிடுகிடுவென உயர்ந்துள்ளன.
திருமணம் நடைபெறவுள்ள பந்த்ரா குர்லா காம்ப்ளெக்ஸ் பகுதியில் உள்ள இரு பிரதான ஹோட்டல்களில் அறைகளுக்கான முன்பதிவு முடிந்துவிட்டதாக பயண, ஹோட்டல் இணையப்பக்கங்களில் தெரியவந்துள்ளது.
மேலும், தற்போது அம்பானி மகனின் திருமணத்தை முன்னிட்டு மும்பை நகரின் முக்கிய சாலைகள் மூடப்பட்டது பொதுமக்களிடையே எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமண விழா வரும் 12-ம் தேதி ஜியோ வேல்டு சென்டரில் நடைபெறுகிறது
இதற்கு முக்கிய விருந்தினர்கள் வருவார்கள் என்பதால், பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸில் இருக்கும் ஜியோ வேல்டு சென்டருக்கு செல்லும் சாலைகள் அனைத்தும் 12-ம் தேதியில் இருந்து 15-ம் தேதி வரை மூடப்பட்டு இருக்கும் என்று மும்பை போலீசார் கூறியுள்ளனர். ஆனால், அந்த சாலைகள் மும்பை மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் சாலைகள் என்பதால் மும்பை போலீசாரின் இந்த அறிவிப்புக்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தனியார் நிகழ்ச்சிக்காக அரசின் சாலைகள் மூடப்படுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்