மலையாள சினிமாவில் நடிகராக அடியெடுத்து வைக்கும் சேரன்
அனுராஜ் மனோகர் இயக்கத்தில் டொவினோ தாமஸ் உடன் புதிய மலையாள படமான ‘நரிவேட்டா’வில் நடிக்கிறார்
‘பாரதி கண்ணம்மா’, ‘பொற்காலம்’, ‘வெற்றி கொடி கட்டு’ என விருதுகள், பாராட்டுகள், வெற்றிகளை குவித்த திரைப்படங்களை இயக்கிய சேரன், ‘ஆட்டோகிராப்’ மூலம் நடிகராக தன் பயணத்தை தொடங்கி நடிப்பிலும் தனது திறமையை நிரூபித்து தொடர்ந்து முத்திரை பதித்து வருகிறார்.
இந்நிலையில், தனது தொய்வில்லாத திரைப் பயணத்தின் அடுத்த முக்கிய மைல்கல்லாக, மலையாள சினிமாவில் நடிகராக அடியெடுத்து வைக்க உள்ளார் சேரன்.
பெரிதும் பாராட்டப்பட்ட ‘இஷ்க்’ மலையாள வெற்றி படத்தை இயக்கிய அனுராஜ் மனோகர் இயக்கும் புதிய திரைப்படத்தில் முன்னணி மலையாள நடிகர் டொவினோ தாமஸ் உடன் முக்கிய வேடத்தில் சேரன் நடிக்கிறார்.
‘நரிவேட்டா’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் அனுராஜ் மனோகரின் இயக்கத்தில் உருவாகும் இரண்டாவது படைப்பு என்பது குறிப்பிடத்தக்கது. ஜூலை 26 முதல் படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடைபெற உள்ளது.
மலையாள திரையுலகில் அடியெடுத்து வைப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த சேரன், “முதல் முறையாக மலையாள திரைப்படத்தில் நடிப்பது மிக்க மகிழ்ச்சி. அனுராஜ் மனோகரின் கதையும், அதில் எனது பாத்திரமும் என்னை வெகுவாக கவர்ந்தன. டொவினோ தாமஸ் உடன் நடிப்பது கூடுதல் சந்தோஷம்,” என்றார்.