நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில், கடந்த வாரம் கட்சியின் கொடியை அறிமுகம் செய்து கொடியை ஏற்றி வைத்தார். அப்போது அவர், 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடு இருக்கும் எனவும் தங்கள் கட்சி கொள்கை மற்றும் கோட்பாடுகள் முறையாக முதல் அரசியல் மாநாட்டில் அறிவிக்கப்படும் என கூறியிருந்தார்.
இந்நிலையில், முதல் அரசியல் மாநாட்டை மதுரை, திருச்சி, ஈரோடு அல்லது சேலம் ஆகிய மாநகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டு அதற்கு அனுமதி வழங்க காவல்துறையிடம் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், அங்கு நடத்துவதற்கான அனுமதி வழங்கப்படாத காரணத்தால், விழுப்புரம் மாவட்டம் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வி.சாலை பகுதியில் மாநாடு நடத்துவதற்கு கடந்த வாரம் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநாடு நடத்துவதற்கான அனுமதி கோரி மனு அளித்திருந்தார்.
அந்த மனுவில், தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடத்த 85 ஏக்கர் நிலத்தை வாடகைக்கு எடுத்துள்ளதாகவும், மேலும், மாநாட்டுக்கு வருபவர்களின் வாகனங்களை நிறுத்துவதற்காக சுமார் 70 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி உள்ளதாகவும், ஐந்து ஏக்கர் நிலமானது இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தொடர்ந்து மாநாடுக்காக குறிப்பிட்ட இடத்தில் காவல்துறை அதிகாரிகள், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்திருந்த நிலையில், அனுமதி வழங்குவதில் இழுபறி நிலையே நீடித்து வந்தது.
இதற்கிடையே, விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் கடந்த பத்து நாட்களாக விடுமுறையில் இருந்ததால் விவகாரம் தொடர்பாக முடிவெடுப்பதில் தாமதம் ஏற்பட்டு உள்ளதாகவும், மாநாட்டுக்கு அனுமதி கேட்டுள்ள அந்த மனு தொடர்ந்து பரிசீலனையில் இருப்பதாகவும், விழுப்புரம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமால் தகவல் தெரிவித்தார்.
மேலும், விடுமுறை முடிந்து இன்று மாலைக்குள் விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் பணிக்கு திரும்பிய பிறகே முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தொடர்ந்து மாநாடு நடைபெறும் இடத்திற்கு சென்ற அரசு அதிகாரிகள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் ஆகியோர் மாநாடு நடத்த அனுமதி கூறும் வி.சாலையில் பகுதியானது, சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 300 மீட்டர் தொலைவிலேயே உள்ளது. அருகிலேயே விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அமைந்துள்ளதால், வார இறுதி நாட்களில் இச்சுங்கச்சாவடியில் அதிகப்படியான வாகனங்கள் கடந்து செல்லும் சூழ்நிலையில், மாநாடு நடைபெறும் பட்சத்தில் மிகப்பெரிய போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என நினைக்கின்றனர்.
அதுமட்டுமின்றி, 5 கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம் எனவும் இதேபோன்று உளுந்தூர்பேட்டை எறையூர் அருகே மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மாநாடு நடத்திய போது, உளுந்தூர்பேட்டை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு வாகன நெரிசல் ஏற்பட்டு மிகவும் சிரமத்திற்கு உள்ளானதாகும், அதனை கருத்தில் கொண்டு மேற்கண்ட வி சாலை பகுதியில் மாநாடு நடத்துவதற்கான அனுமதி மறுக்கப்படும் எனவும் தெரிவிக்கின்றனர்.
மேலும், வரும் 23-ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள மாநாட்டுக்கான நேரம், முக்கிய பிரமுகர்களின் விவரங்களை ஐந்து நாட்களுக்குள் அளிக்குமாறு தமிழக வெற்றிக் கழகத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், தவெக மாநாட்டிற்கு வி.சாலை பகுதியில் அனுமதி மறுக்கப்பட்டால், மாநாட்டிற்கான தேதி மாற்றம் தொடர்பாக பிரபல புதுவை மாநில ஜோதிடரை அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அணுகியதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், அக்டோபர், நவம்பர் மழைக்காலம் என்பதால் அந்த மாதங்களில் மாநாடு நடத்துவது உகந்தது அல்ல எனவும் மாநாட்டிற்கான தேதி இந்த மாதத்திற்குள் கிடைக்கவில்லை என்றால் ஜனவரி மாதத்திற்கு மேல் மாநாடு தள்ளிப்போகவும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.