மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் அஞ்சலிக் கூட்டம் சென்னையிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் நேற்று மாலை நடந்தது. இதில் கலந்துகொள்வதற்காக போனிகபூர், மகள்கள் ஜான்வி, குஷி ஆகியோர் மும்பையில் இருந்து வந்து இருந்தனர். அங்கு ஸ்ரீதேவியின் உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. பக்தி பாடல்கள் பாடப்பட்டன. பிரார்த்தனையும் நடந்தது. இதில் தமிழ் திரையுலகினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தமிழகம் மட்டுமின்றி இந்திய திரைப்பட ரசிகர்களை கவர்ந்த நடிகை ஸ்ரீதேவி கடந்த மாதம் 24-ம் தேதி துபாயில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரின் மரணம் சினிமா ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. தமிழகத்தின் சிவகாசி அருகேயுள்ள மீனம்பட்டி கிராமம் தான் என்பதாலும், தமிழ் திரையுலகிலும், இந்தி திரையுலகிலும் கொடி கட்டி பறந்தவர் என்பதாலும், அவர் மரணம் அடைந்ததை பலராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் அவர் மரணத்தில் மர்மம் இருப்பதாக முதலில் சொல்லப்பட்டது. பிறகு அந்த பரபரப்பு அடங்கியது. இதன்பின் தனிவிமானம் மூலம் அவரது உடல் மும்பை கொண்டுவரப்பட்டு தகனம் செய்யப்பட்டது. அவரது கணவர் போனிகபூர், மகள்கள் ஜான்வி, குஷி ஆகியோர் ஸ்ரீதேவியின் அஸ்தியை கடந்த வாரம் சென்னை கொண்டு வந்து கடலில் கரைத்தனர்.
இதற்கிடையே, ஸ்ரீதேவி பல மொழிகளிலும் நடித்துள்ளதால், அவருக்கான அஞ்சலி நிகழ்ச்சிகளை முக்கிய நகரங்களில் நடத்த அவர் கணவர் போனி கபூர் முடிவு செய்துள்ளார். அந்த அடிப்படையில் அவர் இறந்து 16-ம் நாளான நேற்று சென்னையிலுள்ள க்ரவுன் ப்ளாசா ஹோட்டலில் மாலை ஆறு மணிக்கு அஞ்சலிக் கூட்டம் நடந்தது. இதில் தமிழ் திரைப்படத்துறையை சேர்ந்த பலரும் வந்து போனிகபூருக்கும், அவர்களுடைய இரு மகள்களுக்கும் ஆறுதல் கூறினார்கள். இதில் ஏ.ஆர்,ரகுமான், பாக்யராஜ் உட்பட சிலர் மனைவியுடன் வந்து கலந்து கொண்டனர்.

முன்னதாக, சென்னை சி.ஐ.டி நகரில் உள்ள ஸ்ரீதேவி வீட்டில் 16-ம் நாள் சடங்குகள் நடைபெற்றன. இதில், நடிகர் அஜித்குமார் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டனர். பொதுமக்களும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.
மேலும் ஸ்ரீதேவி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க சென்னையில் நேற்று அஞ்சலி கூட்டத்துக்கு நடிகர் சங்கம் ஏற்பாடு செய்து இருந்தது. இந்த கூட்டத்துக்கு நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமை தாங்கினார். நடிகர்கள் சிவகுமார், பாக்யராஜ், நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி, செயற்குழு உறுப்பினர்கள் ராஜேஷ், பசுபதி, அயூப்கான், பிரகாஷ், மனோபாலா, ஹேமச்சந்திரன், நடிகைகள் அம்பிகா, ஸ்ரீபிரியா, சத்யபிரியா, குட்டிபத்மினி, சிவகாமி உள்பட பலர் இதில் கலந்துகொண்டு ஸ்ரீதேவி உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
