ஞாயிற்றுக்கிழமை, மே 31
Shadow

ஏவி.எம்.சரவணன் எழுதிய ‘நானும் சினிமாவும்’ என்ற நூல் வெளியீடு!

பழம்பெரும் தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன்  எழுதிய ‘நானும் சினிமாவும்’ என்ற நூல்  வெளியிடப் பட்டது.

திரையுலகில் ‘அடக்கம்’, ‘அமைதி’, ‘அன்பு’ மூன்றுக்கும் உதாரணமாக காட்டப்படுபவர் தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன் . எப்போதும் வெள்ளை சட்டை, வெள்ளை பேண்ட்டில் கைகளை கட்டியபடியே அடக்கத்தின் மறு உருவமாக இருக்கும் ஏவி.எம்.சரவணன்  ஏவி.எம். நிறுவனத்தை ஸ்தாபித்த அமரர் ஏவி மெய்யப்பன் – இராஜேஸ்வரி அம்மையாரின் மகன்களில் ஒருவராவார்.

ஏவி.எம். சரவணன் 1939-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3-ம் தேதியன்று பிறந்தார். கல்லூரி படிப்பை படிக்காமலேயே அதற்கு முன்னதாக தனது 18-வது வயதிலேயே ஏவி.எம். ஸ்டூடியோவில் வேலைக்கு வந்துவிட்டார். மிகச் சரியாக 1958-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9-ம் தேதியன்று ஏவி.எம்.சரவணன் அவர்கள் ஏவி.எம். நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். இன்று 2018 ஏப்ரல் 9-ம் தேதியன்று ஏவி.எம்.சரவணன் அவர்கள் சினிமா துறைக்கு வந்து 60 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிது. திரைத்துறையில் மணி விழா கண்டிருக்கும் ஏவி.எம்.சரவணன், ஏவி.எம். ஸ்டூடியோ நிர்வாகம், படத் தயாரிப்பு, விநியோக உரிமை, தியேட்டர்களில் படங்களை வெளியிடுவது என அனைத்து துறைகளிலும் பணியாற்றினார்.

1958-ம் ஆண்டு ஏவி.எம். தயாரித்த ‘மாமியார் மெச்சிய மருமகள்’ படத்தில் துவங்கி இன்றுவரை தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும், 125 படங்கள் தயாரிக்க துணை நின்றிருக்கிறார்.

சென்னை மாநகர ஷெரிப்பாக 2 வருடங்கள் பதவி வகித்தார். இந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் (FPAI), அகில உலக திரைப்படத் தயாரிப்பாளர் சங்க துணைத் தலைவராகவும் (FIAAP) பதவி வகித்துள்ளார்.

தமிழக அரசு வழங்கும் கலைமாமணி விருது, ராஜா சாண்டோ விருது, சத்யபாமா பல்கலைக் கழகம் வழங்கிய டாக்டர் பட்டமும் பெற்றிருக்கிறார்.

ஏவி.எம். சரவணன் ள் இதுவரையிலும் ‘முயற்சி திருவினையாக்கும்’, ‘மனதில் நிற்கும் மனிதர்கள் (4 பாகங்கள்)’, ‘ஏவி.எம். 60 சினிமா’ ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார்.

இப்படி பல அனுபவங்கள் பெற்றுள்ள ஏவி.எம் சரவணன், சமீபத்தில் தினந்தந்தி தினசரியில் ‘நானும் சினிமாவும்’ என்ற தலைப்பில் தொடர் எழுதி வந்தார். அந்தத் தொடரை தொகுத்து ‘நானும் சினிமாவும்’ என்ற நூலாக  வெளியிட்டது தினத்தந்தி பதிப்பகம்.

இந்த நூலை நடிகர் சிவகுமார் அவர்கள் வெளியிட, பத்மஸ்ரீ டாக்டர் நல்லி குப்புசாமி செட்டி பெற்றுக் கொண்டார்.

இந்த விழாவில் கவிப் பேரரசு வைரமுத்து, வசனகர்த்தா ஆரூர்தாஸ், ஆனந்தா பிக்சர்ஸ் சுரேஷ், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி, இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், டைட்டன் ரகு, பத்திரிகையாளர் நடராஜன், டாக்டர் மயிலப்பன், ராஜா வெங்கட்ராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இவர்களுடன் ஏவி.எம். சரவணன் மற்றும் அவரது குடும்பத்தினரான திருமதி.லட்சுமி சரவணன், நித்யா குகன், உஷா சரவணன், சித்தார்த், ஹரினி சித்தார்த் ஆகியோரும் கலந்து கொண்டார்கள். மேலும் ஏவி.எம். நிறுவனங்களின் அனைத்து ஊழியர்களும் இந்த விழாவில் பங்கு பெற்றார்கள்.

விழாவிற்கு வந்திருந்தவர்களை திரு எம்.எஸ்.குகன், அருணா குகன், அபர்ணா குகன், மக்கள் தொடர்பாளர் பெருதுளசி பழனிவேல் ஆகியோர் வரவேற்றார்கள்.

Share this:

340 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன