வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

சிவலிங்கா விமர்சனம்..!

சக்திவேல் வாசு மற்றும் அவரது அப்பா சந்தானபாரதி இருவரும் பிரியாணி மாஸ்டர்கள். நடிகை சாராவும் அவரது அப்பாவான ராதாரவியும் சைவ உணவு மாஸ்டர்கள். இந்த இரு குடும்பமும் எந்தவொரு நிகழ்ச்சியிலும் ஒன்றாகவே சமைப்பார்கள். இந்த நெருக்கமானது, சக்திவேல் வாசுவுக்கும், சாராவுக்கும் இடையே காதலை உண்டாக்கியது.

ஆனால், இவர்களுடைய காதல் சாராவின் அப்பாவுக்கு பிடிக்கவில்லை. சக்தி சமைப்பதோடு மட்டுமில்லாமல் புறா ஒன்றயும் பாசமாக வளர்த்து வருகிறார். இந்நிலையில், வெளியூருக்கு சமையல் வேலையாக ரெயிலில் சென்று கொண்டிருக்கும்போது, மர்ம நபர் ஒருவர் சக்தியை ரெயிலில் இருந்து கீழே தள்ளி கொலை செய்துவிடுகிறார். இந்த கொலையில் ரெயில்வே போலீசாருக்கு எந்த துப்பும் கிடைக்காததால் சக்தி தற்கொலை செய்துகொண்டார் என்று சொல்லி வழக்கை முடிக்கிறது.

ஆனால், சாராவோ இது தற்கொலை இல்லை, கொலை என்று போலீசில் புகார் கொடுக்கிறார். இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி வசம் செல்கிறது. சிபிசிஐடியில் பெரிய போலீஸ் அதிகாரியாக இருக்கும் ராகவா லாரன்ஸுக்கும், ரித்திகா சிங்கிற்கும் திருமணம் நடைபெறுகிறது. திருமணம் முடிந்த கையோடு, சக்தி கொலை வழக்கு லாரன்ஸ் வசம் செல்கிறது. அவர் இதைப்பற்றி விசாரிப்பதற்காக தனது மனைவியுடன் வேலூரில் இருக்கும் ஒரு பங்களாவில் குடியேறுகிறார்.

அங்கு தங்கியதும் அவ்வவ்போது சில அமானுஷ்ய விஷயங்கள் நடந்து இவர்களை பயமுறுத்துகிறது. இந்நிலையில், அந்த வீட்டில் திருட வந்த வடிவேலு, ராகவா லாரன்சிடம் மாட்டிக் கொள்கிறார். தான் சிபிசிஐடி என்பது வெளியில் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக வடிவேலுவையும் அங்கேயே தங்க வைக்கிறார் லாரன்ஸ்.

இந்நிலையில், ரித்திகா சிங் செயல்பாடுகளில் சில மாற்றங்கள் தெரியவே, இதை பார்க்கும் வடிவேலு, லாரன்சிடம் சொல்ல, அவர் நம்ப மறுக்கிறார். ஒருகட்டத்தில் ரித்திகாவின் உடம்பில் ஏதோ ஆவி புகுந்து இருப்பது லாரன்ஸ் மற்றும் வடிவேலுக்கு தெரியவர, அந்த ஆவி கொலை செய்யப்பட்ட சக்தியின் ஆவிதான் என்பதை தெரிந்துகொள்கிறார்கள்.

சக்தியின் ஆவி ரித்திகா சிங்கின் உடம்பில் புகுந்துகொண்டு, தன்னை கொன்றவர்களை பழிவாங்க துடிக்கிறது. அந்த ஆவியின் ஆசையை நிறைவேற்றினால்தான் தன்னுடைய மனைவியை காப்பாற்ற முடியும் என்ற நிலையில், ராகவா லாரன்ஸ் அதன்பிறகு என்ன முடிவெடுத்தார்? சக்தியை கொலை செய்தது யார்? அவரை எதற்காக கொன்றார்கள்? சக்தியின் கொன்றவர்களை ராகவா லாரன்ஸ் எப்படி கண்டுபிடித்தார்? என்பதை திகில் கலந்து சொல்லியிருக்கிறார்கள்.

லாரன்ஸ் படத்தின் வழக்கமான பேய், பயம், டான்ஸ், குத்தாட்டம், மத செண்ட்டிமெண்ட், அதிரடி ஆக்‌ஷன். பஞ்ச் டயலாக் கலந்ததால் பி.வாசு படமாக பார்க்க முடியவில்லை.

ரித்திகா சிங் தாராள கவர்ச்சியால் அவர் நடிப்பு மிஸ் ஆகிறது. கவர்ச்சி நடிகைகளுக்கு சவால் விட்டு ஆடைகளை குறைத்து ஆட்டம் போட்டிருக்கிறார்.

சக்தி தனக்கு கொடுத்ததை அவரால் முடிந்த அளவு சிறப்பாக கொடுத்திருக்கிறார்.
ஆவேச கத்தல்,, ஒருவர் உடலில் ஆத்மா புகுந்து கொள்ளும் காட்சிகளை தவிர்த்து புதுசாக யோசித்திருந்தால் பேசப்பட்டிருக்கும்.

தமன் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம். பின்னணி இசையும், சர்வேஸ் முராரேயின் ஒளிப்பதிவு படத்திற்கு மேலும் திகில் ஊட்டியிருக்கிறது.

303 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன