செவ்வாய்க்கிழமை, மே 21
Shadow

பெப்சி தலைவர் பதவியை இழக்கிறார் ஆர் கே செல்வமணி..! – கோடங்கி

தமிழ் திரையுலகில்  ஒவ்வொரு சங்கத்திலும் ஏதாவது ஒரு சிக்கல் இருந்து கொண்டே இருக்கும்.
இந்த விவகாரம் கொஞ்சம் வித்தியாசமானது…

தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கம் பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் இருந்த நிலையில் சங்கத்தின் பெயர் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் அதே பெயரை பரமகுடியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் விண்ணப்பித்து பெற்றார்.

இதன் காரணமாக ஏற்கனவே இயக்குனர் விக்ரமன் தலைவராகவும், R.K.செல்வமணி செயலாளராக இருந்த இயக்குனர் சங்கம் செயல்படுவதில் சிக்கல் ஏற்பட்டது.

இது தொடர்பாக வழக்கு ஒன்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் சினிமா தொழிலாளர் சம்மேளனமான பெப்சி அமைப்பின் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

ரத்தான இயக்குனர் சங்கத்தின் சார்பில் பெப்சி தலைவர் பதவிக்கு R.K.செல்வமணி போட்டியிட்டார். அப்போது அந்த வேட்புமனுவை ஏற்க கூடாது ரத்து செய்யப்பட்ட சங்கத்தில் உறுப்பினராக இருந்த யாருக்கும் ஓட்டு போடவோ, தேர்தலில் போட்டியிடவோ தகுதி இல்லை என்று இயக்குனர் கார்த்திகேயன் என்பவர் புகார் மனு அளித்தார்.

ஆனால் அந்த புகார் மீது தேர்தல் அதிகாரி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த சூழலில் இயக்குனர் R.K.செல்வமணி பெப்சி தலைவர் பதவியை கைப்பற்றினார்.

இதை எதிர்த்து இயக்குனர் கார்த்திகேயன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

இந்த சூழலில் ரத்தான இயக்குனர் சங்கத்தின் சார்பில் உயர் நீதி மன்றத்தில் ஒரு இடைக்கால செயல்பாட்டுக்கு அனுமதி கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அதில் “உறுப்பினர்கள் கல்வி உதவி, மருத்துவ உதவி உட்பட பல பணிகள் தடை பட்டிருப்பதால் ரத்து செய்யப்பட்ட சங்கத்தை செயல்படுத்திக் கொள்ள இடைக்கால தீர்வு வழங்கும் படி நீதிபதியிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டது.
இந்த வேண்டுகோளுக்கு வழக்கு தொடர்ந்த இயக்குனர் கார்த்திகேயனும் ஆட்சேபம் தெரிவிக்காததால் ரத்து செய்யப்பட்ட இயக்குனர் சங்கம் செயல்பட இடைக்கால அனுமதி வழங்கி விசாரணையை ஜூலை முதல் வாரத்தில் தள்ளி வைத்தார்.
இந்த சூழலில் ரத்து செய்யப்பட்ட சங்கம் மீண்டும் இடைக்கால தீர்வில் செயல்பட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை பெப்சி தலைவர் பதவி வழக்கில் ஒரு ஆவணமாக இயக்குனர் கார்த்திகேயன் தாக்கல் செய்தார்.

அதன்படி பெப்சி தேர்தல் நடந்த நேரத்தில் இயக்குனர் சங்கம் ரத்து செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே ரத்தான சங்கம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இயக்குனர் R.K.செல்வமணி பதவி தலைவரானது செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த வழக்கு விசாரணை ஜூலை 1ம் தேதி வருகிறது. தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் இயக்குனர் R.K.செல்வமணிக்கு எதிராக இருப்பதால் பெப்சி தலைவர் பதவி பறிபோகும் சூழல் உருவாகி உள்ளது.

இந்த சூழலில் ரத்தான இயக்குனர் சங்கம் மீண்டும் தேர்தல் நடத்துவது தொடர்பாக பேச பொதுக்குழு கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நீதிமன்ற தீர்ப்புக்கு பின் தமிழ் சினிமா சங்கங்களில் பெரும் சலசலப்பு ஏற்படும் என்றே தெரிகிறது.

– கோடங்கி

419 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன