செவ்வாய்க்கிழமை, மே 19
Shadow

போதை பொருள் கும்பலுடன் தொடர்பு: நடிகர்-நடிகைகளிடம் நாளை விசாரணை

 

 

போதை பொருள் கும்பலுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்பட்ட வழக்கில் தெலுங்கு நடிகர் – நடிகைகளிடம் நாளை முதல் விசாரணை நடத்தப்படுகிறது.
ஐதராபாத் நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு போதை பொருள் கும்பல் சிக்கியது. விசாரணையில் அவர்களுடன் தெலுங்கு நடிகர் – நடிகைகளுக்கு தொடர்பு இருப்பது அம்பலமானது.

அவர்களின் செல்போன் எண்கள் போதை பொருள் கும்பலிடம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக நடிகர்கள் ரவிதேஜா, நவ்தீப், தருண், நந்து, தனிஷ், சுப்பராஜு, நடிகைகள் சார்மி, முமைத்கான், இயக்குனர் பூரிஜெகனாத், ஒளிப்பதிவாளர் ஷியாம் கே நாயுடு, கலை இயக்குனர் ஜின்னா ஆகியோருக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சிறப்பு விசாரணை குழு நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நிலையில் நடிகர் – நடிகைகளிடம் விசாரணை நாளை தொடங்குகிறது.
யார் – யார் எந்த தேதியில் ஆஜராக வேண்டும் என்று போலீசார் நேற்று வெளியிட்டனர். அதன்படி நாளை இயக்குனர் பூரி ஜெகநாத் ஆஜராக உத்தரவிட்டு உள்ளனர்.

20-ந் தேதி நடிகை சார்மி, 21-ந் தேதி முமைத்கான், 22-ந் தேதி சுப்பராஜு, 23-ந் தேதி ஷியாம் கே நாயுடு, 24-ந் தேதி ரவிதேஜா, 25-ந் தேதி ஜின்னா, 26-ந் தேதி நவ்தீப், 27-ந் தேதி தருண், 28-ந் தேதி நந்து, 29-ந் தேதி தனிஷ் ஆகியோர் ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்.

இவர்களிடம் விசாரணை முடிந்த பிறகு மேலும் பல திரையுலக பிரமுகர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர்.

தெலுங்கு பட உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிற இந்த விவகாரம் மெல்ல நகர்ந்து தமிழ் திரையுலகிலும் பரபரப்பை கூட்டியிருக்கிறது. தெலுங்கில் இந்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ள பலருக்கு தமிழில் நிறைய திரையுலக நண்பர்கள் இருக்கிறார்கள். இவர்களில் சிலர் பிரபலங்களின் வாரீசுகளாக இருக்கிறார்கள். வீக் எண்ட் பார்ட்டிகளும், கும்மாளங்களும் தெலுங்கு, இந்தியை தாண்டி தமிழில் ரொம்பவே அதிகம் என்பதற்கு சமீபத்திய பாடகி ஒருவரின் திடீர் பரபரப்புகளே சாட்சி.
தன்னிலை மறந்த நிலையில் ஆபாசங்களை அரங்கேற்றும் ஒரு கூட்டம் இருக்கிறார்கள் என்று அந்த பாடகி பல படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி ஏற்படுத்தியிருந்தார். இந்த விவகாரத்தையும் போதை பொருள் தடுப்பு பிரிவு இப்போது கையில் எடுத்திருக்கிறது. அந்த பாடகி வெளியிட்ட படங்களும், வீடியோக்களும் எடுக்கும்போது கண்டிப்பாக அதில் இருந்தவர்கள் மதுபோதையிலோ, அதைவிட வீரியமிக்க போதை பொருட்களையோ பயன்படுத்தியிருக்கவேண்டும் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள். எனவே, தெலுங்கில் சிக்கிய போதை ஆசாமிகளிடம் விசாரித்து முடித்த கையோடு அந்த ஸ்பெஷல் டீம் தமிழ் சினிமாவிலும் கால் பதிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த தகவல் தமிழ் சினிமாவில் பலருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கோடங்கி

 

338 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன