
மீராகதிரவன் இயக்கிய விழித்திரு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தன் பெயரை பேசும் போது சொல்ல மறந்து விட்டார் என நடிகை தன்ஷிகாவை அதே மேடையில் டி.ராஜேந்தர் கடுமையான வார்த்தைகளில் விமர்சித்தார்.
நடிகை தன்ஷிகா மன்னிப்பு கேட்டும் இயக்குனர் டி.ராஜேந்தர் தொடர்ந்து தன்ஷிகாவை விமர்சித்ததால் அவர் அழுது கொண்டே மேடையில் இருந்து இறங்கி போனார்.

இந்த சம்பவம் கடும் எதிர்ப்பை டி.ராஜேந்தருக்கு ஏற்படுத்தி உள்ளது. மேடை நாகரீகம் பற்றி பேசும் டி.ஆர். நாகரீகமே இல்லாமல் நடந்து கொண்டார் என்றும் டி.ஆர்.வருத்தம தெரிவிக்க வேண்டும் என்றும் பலர் கருத்து தெரிவிக்கிறார்கள்.

இது குறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவரும், நடிகர் சங்க செயலாளர் விஷால் வெளியிட்ட அறிக்கை:
ஒரு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தன் பெயரை சொல்லவில்லை என்பதற்காக இயக்குநர் டி.ராஜேந்தர் நடிகை தன்ஷிகாவை வன்மையாக கண்டித்ததும் தன்ஷிகா மன்றாடி மன்னிப்பு கேட்டும் கூட டிஆர் அவரை மன்னிக்காமல் தொடர்ந்து காயப்படுத்தியதையும் அறிந்தேன்.

டி.ராஜேந்தர் அவர்கள் ஒரு மூத்த கலைஞர். பன்முக வித்தகர். மேடையில் ஒரு நடிகை பேசும்போது ஒருவரது பெயரை மறப்பது என்பது இயல்பானதே… நானே சில மேடைகளில் அருகில் அமர்ந்திருந்தவர் பெயரை மறந்திருக்கிறேன். டிஆர் அவர்கள் சுட்டிக் காட்டிய பின்னர் சாய்தன்ஷிகா அவரது காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார். அப்படி மன்னிப்பு கேட்கும் தன் மகள் வயதையொத்த சாய்தன்ஷிகாவை பெருந்தன்மையாக மன்னித்திருக்கலாம். ஆனால் மென்மேலும் அவரைக் காயப்படுத்திய செயலை டிஆர் போன்ற ஒரு படைப்பாளியிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை.
திரையுலகில் ஒரு பெண் நடிகையாவது எத்தனை சிரமம் என்பது அனைவருக்கும் தெரியும். எனக்கு சாய்தன்ஷிகாவை நன்றாக தெரியும். அவரை அறிந்தவர்கள் அவர் அப்படி வேண்டுமென்றே அவமரியாதை செய்யும் குணம் கொண்டவர் அல்ல என்பதையும் அறிவர். அவர் மன்னிப்பு கேட்டும்கூட தொடர்ந்து காயப்படுத்தும் வகையில் வார்த்தைகளை பயன்படுத்திய டிஆர் அவர்களுக்கு நான் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன்.

