புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

பாஜகவில் குஷ்பு ஏற்றம் வருமா? ஏமாற்றம் தருமா?

 

குஷ்பு பாஜகவில் சேர்ந்ததற்கு என்ன காரணம்? பரபரப்பு தகவல்கள்

நடிகை குஷ்பு 2010 ஆம் ஆண்டில் திமுகவில் சேர்ந்தார்.”நான் சரியான முடிவை எடுத்தேன் என்று நினைக்கிறேன், மக்களுக்கு சேவை செய்வதை நான் விரும்புகிறேன். பெண்களின் முன்னேற்றத்திற்காக நான் பணியாற்ற விரும்புகிறேன்” என்று அப்போது அவர் கூறியிருந்தார்.

இருப்பினும், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் அந்த கட்சியை விட்டு வெளியேறினார். அப்போது “திமுகவுக்கு கடின உழைப்பு ஒரு வழி பாதையாக உள்ளது” என்று கூறியிருந்தார்.

அதே ஆண்டு 2014 இல் சோனியா காந்தியை சந்தித்த பின்னர் காங்கிரசில் சேர்ந்தார். அப்போது அவர், “நான் இறுதியாக நான் சொந்த வீட்டில் இருப்பதாக உணர்கிறேன். இந்திய மக்களுக்கு நல்லது செய்து நாட்டை ஐக்கியப்படுத்தக்கூடிய ஒரே கட்சி காங்கிரஸ் தான்” என கூறினார்.

இன்று அவர் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி பாஜகவில் சேர்ந்துள்ளார். சென்னையிலிருந்து குஷ்பு நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். சென்னை விமான நிலையத்தில், `அவரிடம் நீங்கள் காங்கிரஸ் கட்சியில் இருக்கிறீர்களா?’ என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார். இந்தநிலையில், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பதவியிலிருந்து குஷ்பு நீக்கப்படுவதாக அந்தக் கட்சி அறிவிப்பு வெளியிட்டது

இந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக குஷ்பு, காங்கிரஸின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு எழுதிய கடிதம் வெளியானது.

அந்தக் கடிதத்தில் குஷ்பு, `காங்கிரஸ் கட்சியின் தேசியச் செய்தித் தொடர்பாளராகவும், கட்சியின் முக்கிய உறுப்பினராகவும் நாட்டுக்குச் சேவை செய்ய வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி. கடினமான சூழல்களில் பல்வேறு தளங்களில் நமது கட்சியின் பிரதிநிதியாகச் செயல்படுவதை நான் எப்போதுமே பெருமையாகக் கருதியிருக்கிறேன்.

2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியின் கடினமான சூழலில் நான் கட்சியில் இணைந்தேன். பணத்துக்காகவோ, புகழுக்காகவே நான் கட்சியில் இணையவில்லை. களத்திலிருக்கும் மக்களோடு எந்தவிதத் தொடர்பும் இல்லாத, மக்கள் அங்கீகாரம் இல்லாத சிலர் கட்சியின் உயர் பதவியில் அமர்ந்துகொண்டு கட்டளை பிறப்பிக்கிறார்கள்.

கட்சியின் நலனுக்காக உண்மையில் உழைக்கும் என்னைப் போன்றவர்களை அவர்கள் புறந்தள்ளுவதோடு, ஒடுக்கவும் செய்கிறார்கள். நீண்ட ஆலோசனைக்குப் பின்னர் கட்சியிலிருந்து விலகுவதாக நான் முடிவு செய்திருக்கிறேன். காங்கிரஸின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நான் விலகுகிறேன்.

இந்தச் சமயத்தில், ராகுல் காந்தி உள்ளிட்ட கட்சியின் ஒவ்வோர் உறுப்பினருக்கும் தனிப்பட்ட முறையில் நன்றி சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். உங்கள் மீதான மதிப்பு எப்போதும் அப்படியே இருக்கும்’’ என்று குஷ்பு குறிப்பிட்டிருக்கிறார்.

இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் கட்சியின் ஊடக பொறுப்பாளர் கோபண்ணா கூறுகையில், குஷ்பு பாஜகவில் சேருவதற்கு அவரது கணவர் சுந்தர் சி.தான் காரணம் என்றார். சுந்தர் மூலமாகவே குஷ்புவை பாஜக வளைத்ததாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, குஷ்பு சனிக்கிழமையன்று போட்ட ட்விட்டர் பதிவில், என்னுள் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நமது பார்வையில் புரிதல்கள், விறுப்பு வெறுப்புகள் காலத்துக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கின்றன. நமது சிந்தனைகளும் எண்ணங்களும் புதிய வடிவங்கள் பெறுகின்றன. மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது என குறிப்பிட்டிருந்தார். பார்ப்போம், இந்த மாற்றம் குஷ்புவுக்கு தரப்போவது ஏற்றமா அல்லது ஏமாற்றமா என்று.

452 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன