செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 23
Shadow

டிஆர் தலைமையில் ‘தமிழ் நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்’வருகிற டிசம்பர்5ம் தேதி அறிவிப்பு?!

 

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு பல மாதங்களாக தேர்தல் நடைபெறாமல் சமீபத்தில்தான் தேர்தல் நடந்தது. முரளி ராமசாமி தலைமையில் ஒரு அணியும், டி.ஆர். தலைமையில் ஒரு அணியும் சிலர் சுயேட்சைகளாகவும் போட்டியிட்டனர். கடந்த மாதம் 22ம் தேதி தேர்தல் நடைபெற்றது.

பின்னர் நடந்த வாக்கு எண்ணிக்கையில் டிஆர் தோல்வியை தழுவினார். முரளி ராமசாமி வெற்றி பெற்றார். அதோடு, சுயேட்சையாக தேர்தலில் நின்ற கதிரேசன் வெற்றி பெற்றார்.

இந்த சூழலில், இந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பலரும் தயாரிப்பாளர்களுக்கு அன்பளிப்புகள் கொடுத்தும், கள்ள வாக்குகள் செலுத்தியும் வெற்றி பெற்றார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

 

அதோடு, தோல்வி அடைந்தவர்கள் பதிவாளர் அலுவலகத்தில் தேர்தல் முறையாக நடைபெற வில்லை என புகார் அளித்தார்கள்.

 

அதேநேரம், தனியாக ஒரு அமைப்பை தொடங்க திட்டமிட்டார்கள். இதற்காக டிஆர் தலைமையில் அவசர கூட்டங்கள் நடைபெற்றன. இதன் அடிப்படையில் புதிய அமைப்பு உருவாக முடிவு செய்யப்பட்டு அதற்காக பெயரும் தேர்வு செய்யப்பட்டது. ‘தமிழ் நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்’ என்ற பெயரில் புதிய அணியை உருவாக்கி அதற்கு டிஆர் தலைமை ஏற்கவும், தயாரிப்பாளர்கள் சந்திரபோஸ், ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் இருவரும் செயலாளர்களாகவும், மூத்த தயாரிப்பாளர் கே.ராஜன் பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். இது தவிர செயற்குழு உறுப்பினர்களாக பலரும் தேர்வாகியிருக்கிறார்கள்.

 

இந்த தமிழ் நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முதல் நடவடிக்கையே சங்கத்தின் உறுப்பினர்களுக்காக நிதி ஆதாரத்தை உயர்த்துவது. அதற்காக சிம்புவிடம் கால்ஷீட் பெறப்பட்டுள்ளது. சங்கத்தின் வளர்ச்சி நிதிக்காக சிம்புவும் ஒரு பைசா கூட சம்பளம் வாங்காமல் நடித்து கொடுக்க சம்மதம் சொல்லியிருக்கிறார்.

சிம்பு இப்போது மாநாடு படத்தில் நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பு பாண்டியில் நடந்து வருகிறது. அந்த படப்பிடிப்பு முடிந்ததும் தயாரிப்பாளர்கள் பாதுகாப்பு சங்கம் தயாரிக்கும் பட ஷூட்டிங்கில் சிம்பு கலந்து கொள்கிறாராம்.

இந்த சங்கத்தின் தொடக்க விழா அறிவிப்பு, நிதி திரட்டும் புதுப்பட அறிவிப்பு அனைத்தும் வருகிற டிசம்பர்5ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது

 

சிம்புவின் புதிய படத்தை பிரபல தனியார் தொலைக்காட்சியில் கொடுத்து குறிப்பிட்ட நிதியை பெற்று தயாரிப்பாளர்கள் பாதுகாப்பு சங்கத்தில் வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதிலும், தொடர்ச்சியாக படங்கள் தயாரித்து கொண்டிருக்கிறவர்களுக்கு மட்டுமே வாக்களிக்கும் உரிமை உட்பட பல்வேறு அதிரடி தீர்மானங்களும் நிறைவேற்ற திட்டமிட்டிருக்கிறார்கள்.

 

ஏற்கனவே, தயாரிப்பாளர்கள் சங்கம் செயல்படாமல் முடங்கியிருந்த நேரத்தில் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என இயக்குனர் பாரதிராஜா தலைமையில் ஒரு அணி பிரிந்து புதிய சங்கம் தொடங்கினார்கள்.

இப்போது நடந்த தேர்தலில் முரளி தலைமையில் ஒரு அணி தேர்வாகி அவர்களின் பதவி ஏற்பு விழா அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் பதவி ஏற்பு விழா நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் டிஆர் தலைமையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் பாதுகாப்பு சங்கம் என்ற பெயரில் புதிய அமைப்பு உருவாகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

இன்று நடைபெறும் பதவி ஏற்பு விழாவில் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், டிஆர் தலைமையிலான தொடங்க உள்ள புதிய அமைப்பின் உறுப்பினர்கள் கலந்து கொள்வார்களா புறக்கணிப்பார்களாக என்பது கேள்விக்குறியாக உள்ளது.

 

எது எப்படியோ தமிழ் சினிமாவில் எத்தனை அமைப்புகள் வந்தாலும் அதன் செயல்பாடுகள் தான் அந்த அமைப்பையும், அதன் உறுப்பினர்களையும் பாதுகாக்கும்.

 

-கோடங்கி

758 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன