வெள்ளிக்கிழமை, மார்ச் 29
Shadow

தீரன் அதிகாரம் ஒன்று விமர்சனம்

 

1995 முதல் 2005 வரை, போலீசுக்கே மிகப் பெரிய சவாலாக இருந்த பவாரியா வழக்கின் மறு உருவாக்கம் இது. வடநாட்டில் இருந்து தமிழ்நாட்டுக்கு லாரி லோடு கொண்டு வருபவர்களில் ஒரு குழுவினர், போகும்போது சென்னை புறநகரில் தனித்து இருக்கும் வீடுகளில் புகுந்து, அங்கிருப்பவர்களை கொடூரமாகத் தாக்கி கொன்றுவிட்டு, நகைகளைக் கொள்ளையடித்துச் செல்கிறார்கள். போலீசுக்கே சவாலாக இருக்கும் இந்தக் குற்றங்களுக்கு எந்த தடயமும் கிடைப்பதில்லை. சம்பவங்களும், சாவும் அதிகரிக்கிறது. இளம் தலைமுறை காவல்துறை அதிகாரி தீரன் திருமாறன் (கார்த்தி), இந்த குற்றவழக்கைக் கையிலெடுத்து துப்பறிகிறார். ஒரு சிறிய துப்பு கிடைக்கிறது. அதைப் பின்தொடர்ந்து வடநாடு சுற்றி, ராஜஸ்தான் பாலைவனம் வரை தன் டீமுடன் பயணப்படுகிறார். போலீசுக்கு அரசால் வழங்கப்படும் சிறு உதவி, சென்ற இடமெல்லாம் கிடைக்கும் அவமானம், அலட்சியம், எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு, உயிரைப் பணயம் வைத்து எப்படி அந்தக் கொடூர கொள்ளையர்களை கார்த்தி பிடிக்கிறார் என்பது கிளைமாக்ஸ்.

போலீஸ் கதைகள் பலநூறு வந்திருக்கிறது. நிச்சயம் இந்தப் படம் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. போலீசாரின் வீரதீர பராக்கிராமங்களைச் சொல்லாமல், அவர்களின் யதார்த்த வாழ்க்கையையும், வெளியில் தெரியாமல் போகும் தியாகத்தையும் பேசியிருக்கிறது. “மற்றவர்களுக்கு 8 மணி நேர வேலை. போலீசுக்கு மட்டும் 20 மணி நேர வேலை” என்று, போலீஸ் தரப்பு நியாயத்தையும் பேசுகிறது. “கெட்டவங்க கிட்டே இருந்து நல்லவங்களை பாதுகாக்க வேண்டிய போலீஸ், நல்லவங்க கிட்டே இருந்து கெட்டவங்களை பாதுகாக்கிறது” என்று விமர்சிக்கவும் செய்திருக்கிறது. காவல்துறையைச் சுற்றி நடக்கும் அரசியல், ெமத்தனம், வசதியின்மை, அதிகாரப்போக்கு, எல்லாவற்றையும் வெறும் சம்பவமாகப் பார்க்கும் மனோபாவம் போன்றவற்றையும் பேசியிருக்கிறது. அதன்வாயிலாக, தீரன் தலைமையிலான ஒரு போலீஸ் டீமின் வீரத்தையும், தியாகத்தையும் காட்டியிருக்கிறது.

கார்த்தி, படம் முழுவதும் தீரனாக நிமிர்ந்து நிற்கிறார். மனைவி ரகுல் பிரீத் சிங்கிடம் அதீத நெருக்கம் காட்டுவதிலாகட்டும், போலீஸ் அதிகாரிகளுக்கு அடிபணியும் அதே நேரத்தில் நியாயத்தை தைரியமாக எடுத்து வைப்பதிலாகட்டும், கொடூர கொலைகாரர்களை ஈவிரக்கமின்றி கையாளுவதிலாகட்டும், கார்த்‘தீ’யாக மாறியிருக்கிறார். அப்பாவிப் பெண், அதீத அன்புமிக்க மனைவி என, இரண்டையும் கச்சிதமாகத் தரம்பிரித்து நடித்திருக்கிறார் ரகுல் பிரீத் சிங். கொடூர வில்லனாக, குலைநடுங்க வைக்கிறார் ரோஹித் பதக். ஹீரோவுக்கு ஒரு நேர்மையான போலீஸ்காரர் குடும்பம் பின்னணியாக இருப்பது போல்;  கொலை செய்வதையும், கொள்ளை அடிப்பதையும் பெருமையான குலத்தொழிலாகச் செய்யும் ஒரு கூட்டத்திற்கான வரலாற்றுப் பின்னணியும் இருப்பது பகீர் உண்மை. போலீசை உயர்த்திப் பிடிக்கும் படமாக இருந்தாலும், அதனுள் இருக்கும் உள்ளீடு அரசியலையும் பேசியிருப்பது இயக்குனரின் நடுநிலையைக் காட்டுகிறது.

தஞ்சாவூர் தெருக்களின் கார்த்திகை தீப அழகைக் காட்டுவதிலும், ராஜஸ்தான் பாலைவன கிராமத்தின் வன்மத்தைக் காட்டுவதிலும், நிறைய மெனக்கெட்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன். ஜிப்ரானின் பின்னணி இசை, கதையின் அழுத்தத்தை ரசிகனுக்குக் கடத்துகிறது. பாடல்கள் தேவையில்லை. அதனால் அது கவரவில்லை. ஒரு போலீஸ் வழக்கை திரைக்கதையாக்கும் போது, கொஞ்சம் மிகைப்படுத்துதல் தவிர்க்க முடியாததுதான். அதற்காக, போலீஸ் அதிகாரிகளின் குடும்பமே வில்லன் கும்பலால் பாதிக்கப்படுவதாக, வலுக்கட்டாயமாகக் கதையில் இணைப்பது துருத்திக்கொண்டு தெரிகிறது. வடநாட்டில் தீரன் தன் குழுவினருடன் போராடுவது சரி. இக்கட்டான கட்டத்திலுமா உள்ளூர் போலீஸ் படை உதவாது? இப்படி சில கேள்விகள் எழுந்தாலும், தீரன் அதிகாரம் ஒன்று, போலீஸ் படங்களில் நன்று.

213 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன