வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

மோ விமர்சனம்

நாயகன் சுரேஷ் ரவி மற்றும் அவரது நண்பர்களான ரமேஷ் திலக், தர்புகா சிவா ஆகியோர் இணைந்து நூதனமான முறையில் மற்றவர்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தி வருகிறார்கள். இவர்கள் சினிமாவில் துணை நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு முனிஸ்காந்தை வைத்து பேய் போல் மேக்கப் போட்டு ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் உலவ விடுகின்றனர். பின்னர், அங்கு பேய் இருப்பதாகவும் அதை விரட்டுவதாகவும் கூறி அந்த அடுக்குமாடி குடியிருப்பின் செகரட்டரியான செல்வாவை ஏமாற்றி பணம் பறித்து வருகிறார்கள்.

ஒருகட்டத்தில் சுரேஷ் ரவி மற்றும் அவர்கள் கூட்டாளிகளின் நாடகம் செல்வாவுக்கு தெரிய வருகிறது. இதனால், அவர் இவர்களை போலீசில் மாட்டிவிடப் போவதாக கூற, அவர்களோ பயந்து நடுங்குகிறார்கள். அவர்களின் பயத்தை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட செல்வா, தனக்கு தொழில்முறை போட்டியாளராக இருக்கும் மைம் கோபி வாங்கவிருக்கும் பாழடைந்த பள்ளியில் பேய் இருப்பதாக கூறி, அந்த பள்ளியை அவர் வாங்கவிடாமல் செய்யவேண்டும் என்று கட்டளையிடுகிறார்.

மைம் கோபிக்கும் கெட்ட சக்திகள் மீது நிறைய நம்பிக்கை இருக்கிறது. இதனால், இவர்கள் பேய் இருப்பதாக பயமுறுத்தினால் மைம் கோபி அந்த பள்ளியை வாங்கமாட்டார் என்பது தெரிந்தே செல்வா இந்த வேலையை இவர்களை வைத்து செய்யச் சொல்கிறார். சுரேஷ் ரவியின் கூட்டாளிகளும் வேறு வழியில்லாமல் இதற்கு ஒப்புக் கொள்கிறார்கள்.

இறுதியில் அந்த பாழடைந்த பள்ளிக்கு சென்ற நண்பர்களின் கதி என்னவாயிற்று? இவர்கள் திட்டம் பலித்ததா? என்பதே மீதிக்கதை.

சின்னத்திரையில் தொகுப்பாளராக வலம்வந்த சுரேஷ் ரவி இப்படத்தில் முழுநீள கதாநாயகனாக மாறியிருக்கிறார். கதைக்கு முக்கியத்துவமான படம் என்றாலும், இவரது கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகள் மற்றும் ரொமான்ஸ் காட்சிகளில் மட்டும் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும்.

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள இரண்டாவது பேய் படம். இப்படத்தில் அவரது கதாபாத்திரத்திற்கு பெரிய முக்கியத்துவம் இல்லாவிட்டாலும், தனது பங்கை சிறப்பாக செய்திருக்கிறார். முண்டாசு பட்டி படத்திற்கு பிறகு முனீஸ்காந்த் தனியொரு ஆளாக காமெடி செய்யும் வாய்ப்பு இப்படத்தில் கிடைத்திருக்கிறது. ஒருசில இடங்களில் இவரது காமெடி சிரிக்க வைத்தாலும், நிறைய இடங்களில் வலுக்கட்டாயமாக காமெடி திணிக்கப்பட்டிருக்கிறது.

ரமேஷ் திலக், தர்புகா சிவா, யோகி பாபு ஆகியோரும் படத்தின் காமெடிக்கு பக்கபலமாக இருந்திருக்கிறார்கள். செல்வா, மைம் கோபி ஆகியோர் தங்களது அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

ஆரம்பம் முதல் இறுதி வரை கதையை விட்டு வெளியே செல்லாமல் கதையோடு காமெடி காட்சிகளை கொடுத்த இயக்குனரை பாராட்டலாம். படத்திற்கு பெரிய பலமே இந்த காமெடிதான். ஜெப கூட்ட காட்சிகள், யோகி பாபு இங்கிலீஸ் பேசும் காட்சிகள், முனிஸ்காந்த் பேய் வேஷம் போடும் காட்சிகள், கிளைமாக்ஸ் காட்சிகள் ஆகியவை தியேட்டர்களில் சிரிப்பு சரவெடி. யோகி பாபுவுக்கு இன்னும் காட்சிகள் கொடுத்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

படத்தில் பாடல் இல்லையென்றாலும, பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார் இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி. அதேபோல், விஷ்ணு ஸ்ரீயின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்கபலமாக அமைந்திருப்பது சிறப்பு.

மொத்தத்தில் ‘மோ’ அமோகம்.

421 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன