
சென்னை திரைப்படவிழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை பெற்றது “சேத்துமான்”
இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் தமிழ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சேத்துமான்’ திரைப்படம் 19 வது சென்னை திரைப்படவிழாவில் சிறந்த திரைப்படத்திற்கான இரண்டாவது விருதை பெற்றுள்ளது.
இயக்குனர் பா.இரஞ்சித் தான் இயக்கும் படங்கள் மட்டுமல்லாமல் தனது நீலம் புரொடக்சன்ஸ் மூலம் காலம் கடந்து பேசப்படும் படங்களையும் வழங்கியுள்ளார். அந்த வகையில் அவரது தயாரிப்பில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’,
‘இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு’, ‘ரைட்டர்’ ஆகிய திரைப்படங்கள் விமர்சன மற்றும் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளது. அந்த வெற்றியை தொடர்ந்து நீலம் புரொடக்சன்ஸ் ’சேத்துமான்’ என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளது.

அறிமுக இயக்குனர் தமிழ் இயக்கியுள்ள “சேத்துமான்” திரைப்படம் படப்பிடிப்பு நிறைவுபெற்று வெளியீட்டிற்கு தயாராக இருக்கிறது.
எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய வறுகறி சிறுகதையை மையாக வைத்து ’சேத்துமான்’ திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்திற்கு பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். வசனத்தை எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதியுள்ளார்.
இந்த படத்தில் பிந்து மாலினி இசயமைப்பாளராகவும், CS பிரேம் குமார் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர்.
இந்த நிலையில் ‘சேத்துமான்’ திரைப்படம் 19 வது சென்னை திரைப்படவிழாவில் சிறந்த திரைப்படத்திற்கான இரண்டாவது விருதை பெற்றுள்ளது.
19 வது சென்னை திரைப்படவிழாவின் விருதுகள் நேற்று வழங்கப்பட்டது.
இதில் கலந்துகொண்ட படங்களில் மூன்று படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
முதல் பரிசு வசந்த் சாய் இயக்கத்தில் ” சிவரஞ்சனியும் சில பெண்களும்” படத்திற்கு வழங்கப்பட்டது.
இரண்டாம் பரிசு இரண்டு படங்களுக்கு வழங்கப்பட்டது.
இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் தமிழ் இயக்கத்தில் உருவாகியுள்ள “சேத்துமான் ” படத்திற்கும், கணேஷ் விநாயக் இயக்கத்தில் “தேன்” படத்திற்கும் இரண்டாம் பரிசுகள் வழங்கப்பட்டன.
