
உலக தமிழ் வம்சாவளி அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் உலக தமிழர் திருநாள் விழா கொண்டாடப்படுவது வழக்கம். 3ம் ஆண்டாக சென்னையில் உலக தமிழர் திருநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு உலக தமிழ் வம்சாவளி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் தலைமை தாங்க நார்வே ந £ட்டின் ஓசுலே மாநகர மேயர் கம்சாயினி குணரத்னே, இலங்கை கல்வி அமைச்சர் ராத கிருஷ்ணன், இலங்கை எம்பிக்கள் சிவலிங்கம், சிவமோகன், குமரி அனந்தன், அமெரிக்க தொழில் அதிபர் டாக்டர் பழனி,ஜி.பெரியசாமி, விஐடி பல்கலைக்கழக வேந்தர் விஸ்வநாதன், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ், தொழிலதிபர் இளம்பாரி கருணாகரன், கவிஞர் ரவிபாரதி, ஹிப்ஆப் தமிழா ஆதி, பாடகர் வேல்முருகன், ஆவணபட இயக்குனர் ஆபிரகாம் லிங்கன், நடிகர் ஜெகன் உட்பட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
3 வயதில் இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்து நார்வே நாட்டுக்கு சென்று வாழ்ககையில போராடி இன்றைக்கு ஓசுலே மாநகரத்தின் பெண் மேயராக பதவி வகிக்கும் தமிழ் பெண் கம்சாயினி குணரத்னேவுக்கு சாதனை தமிழன் விருதை இயக்குனர் இமயம் பாரதிராஜா வழங்கி கவுரவித்தார்.
அதன்பிறகு இயக்குனர் பாரதிராஜா பேசும்போது: தமிழ் மீது பற்று வைத்து இந்த விழா நடப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. அதிலும் குறிப்பாக பல நாடுகளில் இருந்து தமிழ் சார்ந்தவர்களை அழைத்து விழாவில் கவுரவிப்பது சந்தோஷத்தை தருகிறது. மொழியை மறக்காமல் இருக்க இதுபோன்ற விழாக்கள் அவசியம். சாதனை தமிழன் விருதுக்கு புலம் பெயர்ந்து வெற்றி பெற்றவர்கள் மிக பொறுத்தமானவர்கள். எதற்காக சொல்கிறேன் என்றால் வாழ்க்கையில் மிகவும் போராட்டத்தோடு பிறந்த இடத்தில் இருந்து புலம் பெயர்ந்து வேறு நாட்டிற்கு போகும்போது பல அடக்கமுறைகளை எதிர்கொண்டு முட்டி மோதி முளைத்து விருட்சமாகிறவர்களுக்கு சாதனை தமிழன் விருது தருவது மிகவும் சரி. நம்ம ஊர் ஆள் பேச்சு இடையே எப்படியும் ஆங்கிலம்கலந்துதான் பேசுவான். புலம் பெயர்ந்தவர்கள் எங்கு போனாலும் நல்லதமிழில் பேசுவார்கள். ஒருமுறை எனக்கு தேசிய விருது கொடுத்தார்கள். அப்போது அந்த விழாவுக்கு என் அம்மாவை அழைத்து சென்றேன். விருது தருகிற மத்திய அரசு அதிகாரிகள் மரபு அது இது என்று பல சட்ட திட்டங்களை சொன்னார்கள்… நான் அதை எதையும் பொருட்படுத்தாமல் என் தாயார் தான் அந்த விருதை வாங்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தேன். இன்னொரு முறை தேசிய விருது கமிட்டியில் என்னை தலைவராக நியமித்து விட்டார்கள். விழா மேடையில் ஜனாதிபதி, துறை அமைச்சர் எல்லாரும் இருக்கிறார்கள். எனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் கஷ்டப்பட்டு பேசி ஒரு கட்டத்தில் ‘இப் யூ அலோ மீ ஐ கேன் ஸ்பீக் மை மதர் லேங்வேஜ்’ என்று சொல்லிவிட்டு யோசிக்காமல் தமிழில் பேசி அமர்ந்தேன். ஆனால், புலம் பெயர்ந்தவன் எந்த நாட்டுக்கு போனாலும் தமிழ் மொழியையும், தமிழ் கலாச்சாரத்தையும் கைவிடாமல் காப்பாற்றிக் கொண்டிருக்கிறான். உண்மையில் சொல்லப்போனால் புகுந்த வீட்டுக்கு விசுவாசமாகவும், பிறந்த வீட்டுக்கு பெருமையையும் தேடித்தருவது புலம் பெயர்ந்தவர்கள்தான் என்பதில் மாற்றுக் கருத்து எதுவும் இல்லை.
இன்னும் தமிழன் உயர்ந்த இடத்திற்கு வரணேண்டும் என்பதற்காக அனைவரும் இணைந்து செயல்படவேண்டும்.
இவ்வாறு இயக்குனர் பாரதிராஜா பேசினார்.
