வெள்ளிக்கிழமை, மார்ச் 29
Shadow

உள்குத்து பெயரில் மட்டுமே – விமர்சனம்


அன்பான அக்காவையும், மாமாவையும் கொடூரமாக கொல்லும் கந்து வட்டி கும்பலை அவர்களோடு ஒருவனாக பழகி பழி வாங்க நினைப்பதே உள்குத்து.
தலைப்பு ரொம்ப அழுத்தமாக இருக்கிறது.

அந்தளவுக்கு படம் இருக்கிறதா…

முட்டம் என்ற மீனவக் குப்பத்தின் கடற்கரையில் தனியாக அமர்ந்திருக்கும் ராஜாவை (தினேஷ்) அதே பகுதியில் பில்டப்பில் காலத்தை ஓட்டும் சுறா சங்கர் (பால சரவணன்) தன் வீட்டுக்கு அழைத்துவந்து வைத்துக்கொள்கிறார் அவரது தங்கை கடலரசியும் அவனது பாட்டியும் உள்ள அந்தச் சிறிய குடும்பத்தில் இணைகிறான் ராஜா.

அந்தப் பகுதியைச் சேர்ந்த காக்கா மணியும் (சரத்) அவரது மகன் சரவணனும் (திலீப் சுப்பராயன்) படகு செய்யும் தொழில் செய்துகொண்டே கந்து வட்டி தொழிலையும் செய்துவருபவர்கள். எதிர்பாராமல் அவர்களது ஆள் ஒருவரை அடித்துத் துவைக்கிறார் ராஜா. அதற்குப் பிறகு சரவணனையும் அடிக்கிறார். பிறகு தந்திரமாக காக்கா மணியுடன் நெருங்கி, சரவணனுடன் நண்பனாகி அவரைக் கொல்கிறார்.

பார்க்க சாதாரணமாக இருக்கும் ராஜாவின் பின்னணி என்ன, அவர் ஏன் இது போல செய்கிறார் என்பதே படத்தின் மீதிக் கதை


படம் தொடங்கியவுடனேயே பாடல், ஹீரோ, ஹீரோயினுக்கான பில்ட் அப், பாத்திர அறிமுகம் என்று தேவையில்லாத காட்சிகள் எதையும் வைக்காமல் நேரடியாகக் கதைக்கு வந்துவிடுவது பாராட்டுக்குரியது. மையக் கதையைச் சுற்றியே திரைக்கதை நகர்கிறது.

சாதாரணமாகத் தோற்றமளிக்கும் ராஜா ஏன் இப்படிச் செய்கிறார் என்ற கேள்வியை மெல்ல மெல்ல எழுப்பி, இடைவேளையில் அதை உச்சக்கட்டத்துக்குக் கொண்டுவருகிறார் இயக்குநர் கார்த்திக் ராஜு. தொடக்கத்தில் மட்டுமல்ல, படம் முழுவதிலுமே தேவையில்லாத காட்சிகள் மிகக் குறைவாக இருப்பதே படத்துக்கு ப்ளஸ். ஆனால், திரைக்கதையின் பயணம் அழுத்தமாகவோ, விறுவிறுப்பாகவோ இல்லை.
கதையில் கபடி காட்சிகள் புதுசு. அதிலும் ஆக்‌ஷன் காட்சிகளில் முதல் அடியே வில்லனுக்குத்தான் அதன் பிறகே மற்ற அடியாட்கள் அடிவாங்குவதும் தமிழ் சினிமாவில் புதுசு.


பால சரவணனின் நகைச்சுவை பெரிதாக எடுபடாதது படத்தின் பலவீனங்களில் ஒன்று. ஆனால், பிற்பாதியில் அதைச் சற்றுச் சரிசெய்கிறார் அவர். அதேபோல அவர் தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து செய்யும் காட்சிகளில் சிறிதும் நகைச்சுவையில்லை என்பது படத்தின் வேகத்தைக் குறைக்கிறது. .
படம் முழுவதும் மிகச் சுமாராகவே நடித்திருக்கிறார் அட்டகத்தி தினேஷ். பல இடங்களில் எந்தவித பாவங்களையும் காட்டாமல் ஏனோ தானோவென்று நிற்கிறார். அவரின் மேனரிசங்கள் அனைத்தும் அவரின் முந்தைய படங்களைத்தான் நினைவுக்கு கொண்டு வருகிறது.


மீண்டும் தினேஷுடன் ஜோடி சேர்ந்திருக்கும் நந்திதாவுக்குப் படத்தில் பெரிதாக வேலையில்லை என்றாலும் தோன்றும் இடங்களில் சிறப்பாக நடிக்கிறார்.தினேஷ் நந்திதா காதல் பெருசாக ஒன்னும் இல்லை. ஜான் விஜய், சரத் லோகிதஸ்வா, திலீப் சுப்பராயன், ஸ்ரீமன் ஆகியோரும் பொருத்தமான பாத்திரங்களில் தங்களுக்கு அளித்த வேலையை ஒழுங்காகச் செய்திருக்கிறார்கள்.
பி.கே.வர்மா ஒளிப்பதிவில் காட்சிகள் ரம்மியமாக இருக்கிறது. ஜஸ்டின் பிரபாகரன் இசையில் ‘குறுகுறு கண்ணால்’ பாடல் ரசிக்கும்படியாக உள்ளது. த்ரில்லர், ஆக்ஷன் படத்துக்கு உரிய கதையைக்கொண்ட இந்தப் படத்தை இன்னும்கூட விறுவிறுப்பாக நகர்ந்திருக்கலாம்
ரவுடியாக இருந்து எதைச் சாதித்தீர்கள் என்று படத்தின் இறுதியில் வரும் கருத்து ரசிக்கும்படி இருந்தாலும் கடைசியில் வில்லனை அவனின் கூட்டாளிகளை விட்டு போட்டுத்தள்ள சொல்லிவிட்டு போவதால் முந்தைய கருத்து எடுபடவில்லை. படத்தின் பெயரைப்போல இன்னும் காட்சிகளில் வசனங்களில் அழுத்தம் வைத்திருந்தால் கதையின் குத்து ரசிகர்கள் உள்ளே ஆழமாக பதிந்திருக்கும்.

உள்குத்து பெயரில் மட்டுமே..!

344 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன