வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

ஜல்லிக்கட்டுக்காக களம் குதிக்கும் நடிகர்கள்… 20ம் தேதி உண்ணாவிரதம், ஷூட்டிங் ரத்து!

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வரும் 20ம் தேதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவித்துள்ளது. இதுதொடர்பான செய்தியாளர் சந்திப்பில் நடிகர் சங்கத்தின் துணைத் தலைவர் பொன்வண்ணன் கூறியதாவது: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வரும் 20ம் தேதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும். நடிகர் சங்க வளாகத்தில் நடைபெற உள்ள இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழ் உணர்வோடு அனைத்து நடிகர், நடிகைகளும் கலந்து கொள்ள உள்ளனர்.
தமிழ் இன உணர்வை வெளிப்படுத்தும் போராட்டமாக இந்த உண்ணாவிரதம் நடக்கும். இந்தப் போராட்டத்தில் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் பெப்சியும் கலந்து கொள்ளவிருக்கிறது. அன்று படப்பிடிப்புகளை ரத்து செய்யக் கோரி தயாரிப்பாளர் சங்கத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். நடிகை திரிஷா பீட்டா தொடர்பான ஒரு விளம்பரத்தில் நடித்திருக்கிறார். என்றாலும் நாம் அவரை கொச்சைப்படுத்த தேவையில்லை. அதே போன்று மாணவர்களின் போராட்டம் தன்னெழுச்சியானது. அவர்களுக்கு பின்னால் நாங்கள் உறுதுணையாய் நிற்போம். அவர்களின் போராட்டம் இன்னும் பல நிலைகளில் விரிவடைய வேண்டும் என்று பொன்வண்ணன் கூறினார். இதற்கிடையே, வரும் 20ம் தேதி அன்று படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் சங்கமும் அறிவித்துள்ளது.

ஏற்கனவே, நடிகர்கள் சூர்யா, ராகவாலாரன்ஸ், கார்த்தி, விக்ரம், விஜய் என பலரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். ராகவாலாரன்ஸ் போராட்ட களத்திற்கே சென்று ஆதரவு தெரிவித்தார். மெரீனா போராட்ட களத்தில் இருப்பவர்களுக்கு உணவு, தண்ணீர் போன்ற பல்வேறு உதவிகளை லாரன்ஸ்தரப்பு செய்தது… விஜய் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு வீடியோ வெளியிட்டார். பல சினிமா பிரபலங்களும் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பட விழாக்களை தள்ளி வைத்தார்கள்.

 

310 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன