சனிக்கிழமை, மே 30
Shadow

‘பத்மாவத்’ எதிர்ப்பு ; பா.ஜ.க., ஒட்டுமொத்த நாட்டையும் கொழுந்து விட்டு எரிய வைக்கிறது- ராகுல்காந்தி

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், ராஜஸ்தான் மாநிலம் சித்தூர்கர் பகுதியை ஆண்ட ராஜபுத்ர ராணி பத்மாவதியின் வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம், `பத்மாவத்’. இந்த திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளதால், தங்கள் மாநிலங்களில் அந்தப் படத்தை வெளியிட முடியாது’ என்று மத்தியப்பிரதேசம், அரியானா, ராஜஸ்தான் மற்றும் குஜராத் அரசுகள் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தன.
இதனிடையே, ‘பத்மாவத்’ திரைப்படத்துக்குத் தடை விதிக்க முடியாது’ என்று சுப்ரீம் கோர்ட்  உத்தரவு பிறப்பித்தது. பல்வேறு தடைகளை உடைத்து `பத்மாவத்’ திரைப்படம் இன்று இந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் வெளிவருகிறது. இதனை எதிர்த்து மத்தியப்பிரதேசம், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளது.
பத்மாவத் படத்திற்கு எதிரான போராட்டத்தின் போது அரியானா மாநிலம், குர்கிராமில் பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த வாகனத்தின் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது
அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் ஆளும் பாரதீய ஜனதா  அரசு சட்ட ஒழுங்கை நிலைநாட்ட தவறிவிட்டது என காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. அப்பாவி குழந்தைகள், பயணிகள் தாக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என கண்டனம்  தெரிவித்துள்ளது.
இந்த நிலையில்  பத்மாவத் பட ரிலீசுக்கு எதிராக நாடு முழுவதும் வெறுக்கதக்க வகையில் நடந்து வரும் கலவரத்திற்கும், தீவைப்பு சம்பவங்களும்  பாரதீய ஜனதா தான்  காரணம் என காங்கிரஸ்  தலைவர் ராகுல் குற்றம்சாட்டி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்களை எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது. வன்முறையும், வெறுப்புணர்வும் சமூகத்தை பலவீனப்படுத்தும் ஆயுதங்கள். வன்முறையையும், வெறுப்புணர்வையும் பயன்படுத்தி  பாரதீய ஜனதா ஒட்டுமொத்த நாட்டையும் கொழுந்துவிட்டு எரிய வைக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
371 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன