அதே கண்கள்… விளம்பரமில்லா வெற்றி..!

கலையரசன் நடிப்பில் சிவி.குமார் தயாரிப்பில் சமீபத்திய வெளியான படம் ‘அதேகண்கள்’.
தமிழ் சினிமாவில் சமீபகாலமாக படங்கள் தயாரிப்பதை விட ரிலீஸ் செய்ய செலவிடும் தொகை ஒரு பட தயாரிப்பை மிஞ்சும் அளவுக்கு மாறியுள்ளது.
அந்த அளவுக்கு செலவு செய்தாலும் ரசிகர்களுக்கு ஏற்ற கதையில்லாமல் போனால் கோடிகளில் விளம்பரம் செய்தாலும் பட ரிசல்ட் படுத்துக் கொள்ளும்.
சூப்பர் ஸ்டார் படம் தொடங்கி அறிமுக நடிகர்கள் படம்வரை இதுதான் இன்றைய கோலிவுட் நிலை.
அதிலும் குறிப்பாக பட ரிலீஸ் நேரத்தில் டிவி விளம்பரம், ரேடியோ விளம்பரம், பேப்பர் விளம்பரம், இணையதள விளம்பரம் இவை தவிர ‘மிரட்டல் விளம்பரம்’(இதுதனி ரகம்). இப்படி பல முனைகளில் படத்தை விளம்பரப்படுத்தி அதற்காக பல கோடிகளை செலவு செய்தால் மட்டுமே படத்தை ரிலீஸ் செய்ய முடிகிறது.

தமிழ் சினிமாவில் சமீபத்திய தயாரிப்பாளர்கள் எல்லாம் படம் தொடங்கும்போதே பட பிரமோஷன் எனப்படும் விளம்பரத்திற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை பட்ஜெட்டோடு சேர்த்தே போடுகிறார்கள். கடைசியில் இத்தனை விளம்பரங்கள் செய்தும் படத்தில் இருக்க வேண்டிய கதை இல்லாமல் போவதால் ரசிகர்கள் படத்தை பார்க்க வராமல் போவதால் படம் தோற்று போகிறது. சமீபத்தில் ரிலீஸ் ஆன படம் ரிலீஸ் ஆன 2 நாட்களில் 100 கோடி வசூல் என்றார்கள். உண்மையில் வாங்கிய, ரிலீஸ் செய்த அனைவருக்குமே 30 முதல் 40 சதவீத நஷ்டத்தில் படம் பெட்டிக்குள் முடங்கியது என்ற உண்மை எத்தனை பேருக்கு தெரியும். ஆனால், இன்றைக்கும் அந்த படத்திற்காக பல கோடிகளில் விளம்பரங்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. தெரிந்தே நஷ்டத்தில் நடக்கிறார்கள்.

அதேநேரம், எந்த விளம்பரங்களும் பெரிதாக இல்லாமல் நடிகர்களும் பெரிய ஸ்டார்களாக இல்லாமல் இருந்தாலும் கதையும், படத்தின் காட்சியமைப்புகளும், எடுத்த விதமும் சிறப்பாக அமைகிற படங்களை ரசிகர்கள் வெற்றி பெற வைக்கிறார்கள். அதை தயாரித்த, ரிலீஸ் செய்த அனைவருக்கும் லாபத்தை எடுக்கிறார்கள்.
இதற்கு சமீபத்திய உதாரணம், கலையரசன் நடிப்பில் வெளிவந்த ‘அதே கண்கள்’. இந்த படத்திற்காக பெரிய அளவில் ரேடியோ விளம்பரம் இல்லை, டிவி விளம்பரம் இல்லை, இணையதள விளம்பரங்கள் இல்லை, மிரட்டல் விளம்பரங்கள் இல்லை…. ஆனால், கதையும், அதன் வேகமும் நன்றாக இருந்ததால் படம் தயாரிப்பாளர் சி.வி.குமாருக்கு வெற்றியை பெற்றுத் தந்திருக்கிறது.
விளம்பரங்களுக்கும், தேவையற்ற பரபரப்புகளுக்கும் மட்டும் பணத்தை செலவு செய்யாமல் கதையிலும், காட்சிகளிலும் கவனம் செலுத்தியதால் ‘அதே கண்கள்’ படம் ரசிகர்கள் கண்களில் நிலையாக நின்றதால் வெற்றி பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. சபாஷ் சி.வி.குமார்…
கோடங்கி
