‘ஊழலை எதிர்த்த அன்றிலிருந்தே அரசியலில்தான் இருக்கிறேன்.. நான் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்தாலும் கூட ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளேன். எனினும், அரசியல் கட்சிகளோடு இணைந்து செயல்பட சாத்தியம் இல்லை என்று ஐஏஎஸ் அதிகாரி சகாயம் கூறியுள்ளார்.

‘மாறுவோம் மாற்றுவோம்; என்ற தலைப்பில் இயற்கை விவசாயப் புரட்சிக்கு வித்திட்ட தமிழர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று (மார்ச் 11) நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஐஏஎஸ் அதிகாரி சகாயம், இயக்குநர் அமீர், நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஆரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதில், ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம், நடிகர் சிவகார்த்திகேயன், விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன், இயக்குநர்கள் மோகன் ராஜா, அமீர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய இயக்குநர் அமீர் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் அரசியலுக்கு வரவேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
இதன்பின்னர் பேசிய, சகாயம் “சாதாரணமாக மதுரைக்கு வர வேண்டும், திருச்சிக்கு வர வேண்டும் என்பது போல அரசியலுக்கு வரச் சொல்லுகிறார்கள். அரசியலில் ஊழல் எவ்வளவு ஆழமாக வேரூன்றி உள்ளது என்று எனக்குத் தெரியும். இதை அறுத்தெறிய வேண்டும் என்றால் மாபெரும் வல்லமை உள்ளவர்களால்தான் முடியும். அத்தகைய வல்லமையை சமூகத்திடமிருந்துதான் பெற முடியும். ஆனாலும் நிச்சயமாக என்னுடைய சமூகம் விழிப்பு பெறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
இன்றைக்குக்கூட நான் அரசியலுக்கு வர வேண்டும் என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், நான் என்றைக்கு ஊழலை எதிர்க்க ஆரம்பித்தேனோ அன்றிலிருந்து அரசியலில் இருக்கிறேன் என்றுதான் பொருள். நான் அதிகாரியாக இருக்கலாம். சட்டத்திட்டங்க ளுக்கு உட்பட்டுச் செயல்பட வேண்டும் என்பது வேறு. ஆனால், என்றைக்கு ஒரு மனிதன் அரசு இயக்கத்தில் உள்ள ஊழல்களை எதிர்க்கிறானோ அன்றைக்கே அவன் அரசியலில்தான் இருக்கிறான் என்றுதான் பொருள். அது தேர்தல் அரசியலா என்பது என்னுடைய சமூகம் முடிவு செய்யும். என்னுடைய சமூகம் விழித்தெழுகிறபோது அது நிச்சயமாக இதுகுறித்து முடிவு செய்யும்.. நான் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்தாலும் கூட ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளேன். எனினும், அரசியல் கட்சிகளோடு இணைந்து செயல்பட சாத்தியம் இல்லை ” என்று பேசியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் சகாயம் பதிலளித்தார். அப்போது, “கிரானைட் முறைகேடு குறித்த விசாரணையின்போது ஓர் இரவு சுடுகாட்டிலேயே தங்கினீர்களே, அப்போது பயமாக இல்லையா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு, “எனக்குச் சுடுகாட்டில் படுக்கப் பயமில்லை. ஆனால், இந்த சுதந்திர நாட்டில் இருப்பதற்குத்தான் பயமாக இருக்கிறது” என்று சகாயம் பதிலளித்தார்.
