சனிக்கிழமை, ஏப்ரல் 27
Shadow

தண்டனைக் கைதியான சசிகலா சிறையில் சீருடை அணியவில்லை: மகளிர் ஆணைய தலைவி தகவல்

சொத்து குவிப்புவழக்கில் சிறைத்தண்டனை விதிக் கப்பட்ட சசிகலா, பெங்களூரு சிறையில் தொடர்ந்து சிறப்பு சலுகைகள் அனுபவித்து வருவது மீண்டும் தெரிய வந்துள்ளது. சிறையை பார்வையிட்ட தேசிய மகளிர் ஆணைய தலைவியே இதை ஒப்புக்கொண்டுள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறை விதிமுறைகளை மீறி அவருக்கு சிறையில் தனி சமையலறை, சிறப்பு சொகுசு வசதிகள் செய்யப்பட்டு இருப்பதாகவும் அதற்காக ரூ.2 கோடி லஞ்சம் வழங்கப்பட்டு இருப்பதாகவும் கர்நாடக முன்னாள் சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா கூறியது கர்நாடகம் மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி உயர் மட்ட விசாரணை நடத்தப்பட்டபோதிலும், அந்த அறிக்கை வெளியிடப்படவில்லை. இந்தநிலையில் முதல்வர் சித்தராமையா உத்தரவின் பேரில் தான் அனைத்து வசதிகளும் சசிகலாவுக்கு செய்து தரப் பட்டதாக, சிறைத்துறை டி.ஜி.பி.யாக இருந்த சத்திய நாராயணா கூறினார். ஒரு குற்றவாளிக்கு, கைதிக்கு முதல்வரே உடந்தையாக இருப்பதால் அவர் மீது கவர்னரே சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கர்நாடக பா.ஜனதா தலைவர் எட்டியூரப்பா வலியுறுத்தி உள்ளார். ஆனால் அப்படி எந்த உத்தரவையும் நான் பிறப்பிக்கவில்லை என்று சித்தராமையா மறுத்தார்.

இந்தநிலையில் சசிகலா தொடர்ந்து சிறையில் சலுகைகள் அனுபவித்து வருவது உண்மை தான் என்று அந்த சிறையை நேரில் பார்வையிட்ட தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா சர்மா கூறினார். சிறையில் சசிகலா, கைதி களுக்கானசீருடை அணியவில்லை. தண்டனைக் கைதிகள் சீருடை அணியவேண்டும் என்ற போதிலும், வழக்கமாக அவர் அணிகிற உடை தான் அணிந்திருந்தார் என்று ரேகா கூறினார்.

சாதாண உடையில் தான் சசிகலாவும், இளவரசியும் உள்ளார்களா? என்ற கேள்விக்கு ரேகா சர்மா “ஆம்” என பதில் அளித்தார் என இந்தியா டுடே செய்தி செய்தி வெளியிட்டு உள்ளது.

இதுதொடர்பாக சிறைத்துறை அதிகாரிகளிடம், தண்டிக்கப்பட்ட கைதிகள் எப்படி சாதாரண ஆடை அணிய அனுமதிக்கலாம்? என்று கேட்டதற்கு, சசிகலா சிறையில் உயர் வகுப்பில் உள்ளார், அங்கு அவர்கள் தங்களுடைய சொந்த ஆடைகளை பயன்படுத்தலாம் என விளக்கம் அளித்தனர். சசிகலாவிடம் இந்த ஆடைகளை யார் தந்தது என்று கேட்டதற்கு அவர் மவுனம் சாதித்தார், இதனால் சசிகலா இருந்த சிறை அறைக்குள் சென்று ரேகா சோதனையிட்டார். அப்போது, ஒரு பையில் பல்வேறு வகையான வண்ண, வண்ண ஆடைகள் இருந்ததாக தெரிகிறது. இது பற்றி சசிகலாவிடம் 5 நிமிடம் ரேகா சர்மா விசாரித்தார்.

இதற்கு சசிகலா ஆங்கிலத்தில் பேசி பதில் அளித்தார். ‘அனைத்து வசதிகளும் நன்றாக உள்ளது. கம்ப்யூட்டர் மற்றும் கன்னடம் கற்றுக்கொள்கிறேன்’ என்று சசிகலா கூறியதாக தெரிகிறது.

ஏற்கனவே இதே குற்றச்சாட்டை ஓராண்டுக்கு முன்பே சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா கூறினார். திடீர் ஆய்வின்போது சல்வார் கமீஷ், சேலைகள் தான் அணிந்து இருந்தனர் என்று கூறியிருந்தார்.

கைதிகளுக்குள் எந்த வித பாகுபாடும் காட்டக்கூடாது என்று சிறைத்துறை விதிகளில் கூறப்பட்டிருந்த போதிலும்,அதை சிறையில் கடைப்பிடிக்கவில்லை என்று ரூபா ஏற்கனவே கூறியிருந்தார்.இப்போதும் அதே சலுகைகள் தொடர்ந்து சசிகலாவுக்கு அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

165 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன