ஞாயிற்றுக்கிழமை, மே 31
Shadow

உச்சநீதிமன்றம் இறுதித்தீர்ப்பு வழங்கும் வரை ஆதார் எதற்கும் கட்டாயமில்லை!

மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பெற ஆதார் கட்டாயமாக்கப்பட்டு வந்த நிலையில், இனி எதற்கும் ஆதார் கட்டாயமில்லை என உச்ச நீதிமன்ற இன்று (மார்ச் 13) தீர்ப்பளித்துள்ளது.

மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களைப் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. அதன்படி, வங்கி கணக்கு, பான்கார்டு, செல்பேசி எண் உள்ளிட்டவற்றுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. செல்பேசி எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கும், வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கும் 31ஆம் தேதி கடைசி நாள் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

ஆதார் கட்டாயமாக்கப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு கடந்த மார்ச் 6ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது, அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால், “வங்கி கணக்கு உள்ளிட்டவையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை மத்திய அரசு ஏற்கனவே நீட்டித்தது. தேவைப்பட்டால் மீண்டும் நீட்டிக்கும்” எனத் தெரிவித்தார்.

மார்ச் 7ஆம் தேதி, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு , “கடைசி நேரத்தில் ஆதார் எண்ணை வங்கி கணக்குடனும், செல்பேசி எண்ணுடனும் இணைப்பதற்கான காலகெடுவை நீட்டித்தால் வங்கிகள், உள்ளிட்ட நிதித் துறை நிறுவனங்களுக்கு கடும் சிரமம் ஏற்படும். எனவே, ஆதார் இணைப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படுமா என்பதை தெளிவுபடுத்தும் வகையில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும்” என அறிவித்தது.

இந்நிலையில், இந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் இன்று இடைக்கால தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, ஆதார் வழக்கில் உச்சநீதிமன்றம் இறுதித்தீர்ப்பு வழங்கும் வரை ஆதார் எண்ணை வங்கி, செல்பேசி எண், பான் கார்டு என இணைக்க வேண்டியது கட்டாயமில்லை. ஆனால், சமூக நல உதவிகளைப் பெறுவதற்கும் மானிய உதவி பெறுவதற்கும் ஆதார் எண்ணை மத்திய அரசு கேட்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

253 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன