ஞாயிற்றுக்கிழமை, மே 31
Shadow

சர்வதேச அளவில் நடக்கும் உணவுத் திருவிழாக்கள்!- மினி ஸ்பெஷல் ரிப்போர்ட்!

ஒவ்வொரு வருடமும் உலகம் முழுவதும் பலநூறு உணவுத் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. உலகின் புகழ் பெற்ற உணவுகளான பீட்சா, சாக்லெட்டில் தொடங்கி அந்தந்த பகுதிகளின் பாரம்பரிய உணவுகள் வரை அனைத்தையும் இத்திருவிழாக்களில் சுவைக்க முடியும். ஒவ்வொரு இடத்தின் பாரம்பரியத்திற்கு ஏற்ப நடத்தப்படும் இத்தகைய உணவுத் திருவிழாவிற்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வருகின்றனர். அப்படி நடைபெறும் பல உணவுத் திருவிழாக்களில் சிறந்தவை சிலவற்றைப் பற்றி சிறிய தொகுப்பு இதோ உங்களுக்காக!

மூன் திருவிழா

சீனாவில் புத்தாண்டிற்கு அடுத்ததாக மிக கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது மூன் திருவிழா. பாரம்பரியமாகக் கொண்டாடப்படும் இது சந்திரனுக்கு நன்றி சொல்லும் விதத்திலும், அறுவடையைக் கொண்டாடும் வகையிலும் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படுகிறது. சீனாவின் லூனார் காலண்டரின்படி எட்டாவது மாதத்தில் 15ஆம் நாள் மக்கள் அனைவரும் ஒன்றுகூடி கேக் வைத்து சந்திரனுக்கு வழிபாடு நடத்துகின்றனர். திருவிழாவின்போது தங்களுக்குப் பிடித்தவர்களுக்கு மூன் கேக் கொடுத்து வாழ்த்து தெரிவிக்கின்றனர். மேலும் விளக்குகள் ஏற்றியும், டிராகன் டான்ஸ் ஆடியும் மிகவும் விமர்சையாக மூன் திருவிழாவைக் கொண்டாடுகின்றனர்.

பீட்ஸா திருவிழா

சீஸ், சிக்கன், வெஜிடேரியன் என்று பல வகையான பீட்ஸாக்கள் இருக்கின்றன. பீட்ஸாவின் பெருமையை முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்றால் அதன் பிறப்பிடமான இத்தாலிக்குத்தான் செல்ல வேண்டும். இத்தாலியில் உள்ள நேப்பிள்ஸ் நகரில் ஆண்டுதோறும் பீட்ஸா திருவிழா கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் ஒருவார காலத்திற்கு பீட்ஸா திருவிழா மிக கோலா கலமாகக் கொண்டாடுகின்றனர். இந்த பீட்ஸா திருவிழாவில் வெவ்வேறு அளவில், வடிவங்களில் என எண்ணற்ற பீட்ஸாக்கள் கிடைக்கின்றன. அதே போல் பீட்ஸா தயாரிப்பவர்களும் தங்களின் திறமையைக் காண்பிக்கும் இடமாக இந்த விழா உள்ளது. யார் சிறந்த பீட்ஸா தயாரிப்பாளர் என்ற போட்டியும் நடக்கும்.

வெஜிடேரியன் உணவுத் திருவிழா

உணவுத் திருவிழா என்றாலே இறைச்சிகள் என்று கிடையாது. முழுக்க வெஜிடேரியன் உணவுகள் உள்ள உணவுத் திருவிழாக்களும் நடத்தப்படுகின்றன. பாங்காக்கில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் ஒன்பது நாட்களுக்கு வெஜிடேரியன் ஃபுட் ஃபெஸ்டிவல் நடத்தப்படுகிறது. ஒன்பது பேரரசின் கடவுள்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த உணவுத் திருவிழா கொண்டாடப்படுகிறது. நூடுல்ஸ்,கேக்ஸ் உள்ளிட்ட ஏராளமான வெஜிடேரியன் உணவுகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த உணவுத் திருவிழாவில் அதிக நறுமணப் பொருட்களைக் கொண்ட உணவுகளுக்கு அனுமதி கிடையாது. உணவுத் திருவிழாவின் ஒவ்வொரு நாள் இரவும் விளக்குகள், மெழுகுவர்த்திகள் ஏற்றியும், சீனாவின் பாரம்பரிய இசை மற்றும் நாடகங்கள் நடத்தியும் திருவிழாவைக் கொண்டாடுகின்றனர்.

கடல் உணவுத் திருவிழா

கடல் உணவுப் பிரியர்களுக்கு 1963 முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் ஸ்பெயினில் கடல் உணவுத் திருவிழா கொண்டாடப்படுகிறது. ஐரோப்பாவின் சிறந்த கடல் உணவுகளை இங்கு ருசிக்கலாம். அதனால் மக்கள் வருகைக்குப் பஞ்சமே இருக்காது. 2013ஆம் ஆண்டு முதல் தேசிய சுற்றுலாத் துறையின் முக்கியத் திருவிழாவாக கடல் உணவுத் திருவிழாவை ஸ்பெயின் அரசு அறிவித்தது. இந்த உணவுத் திருவிழா நடைபெறும் இடமே மிகவும் ரம்மியமானது. சுற்றிலும் நீரால் சூழப்பட்ட இடத்தில் உணவுத் திருவிழாவை நடத்துகின்றனர்.

சாக்லேட் திருவிழா

1922ஆம் ஆண்டு முதல் சாக்லெட் திருவிழா பாரீசில் நடைபெற்றது. அதன் பின்னர் ஒவ்வொரு வருடமும் உலகின் பல்வேறு நாடுகளில் சாக்லெட் திருவிழா நடத்தப்பட்டது. பாரீசில் அக்டோபர் மாதம் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட சாக்லெட்டுகள் கொண்டு சாக்லெட் புக் ஷாப், சாக்லெட் மேக்கிங் ஒர்க் ஷாப், பேஸ்ட்ரி ஷோ, சாக்லெட் அவார்ட் ஷோ, சாக்லெட்டால் தயாரிக்கப்பட்ட ஆடைகள் கொண்டு ஃபேஷன் ஷோ ஆகியவை நடத்தப்படுகின்றன. பார்வையாளர்களுக்கு சாக்லெட் தயாரிப்பு குறித்து விளக்கம் அளிக்கப்படுகிறது. லியோனிடாஸ், கைலியன் மற்றும் நெஸ்ட்லே ஆகிய நிறுவனங்கள் பாரீஸ் சாக்லெட் திருவிழாவில் கலந்துகொள்கின்றன.

333 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன