அ.தி.மு.க. எம்.பி. சசிகலா புஷ்பாவுக்கு நேற்று முன்தினம் டெல்லியில் 2-வது திருமணம் நடைபெற்றது. அவர் எம்.பி.க்களுக்கு சட்ட ஆலோசகரான பி.ராமசாமியை திருமணம் செய்து கொண்டார். ராமசாமிக்கு, சசிகலா புஷ்பா 3-வது மனைவி என்ற தகவலை தர்போது தெரிவித்தார்.. அந்த திருமணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ‘எம்.பி.சசிகலா புஷ்பாவை 3 ஆவதாக திருமணம் செய்து கொண்டது ஏன்?’ என்பது குறித்து அவரது கணவரும் சட்ட ஆலோசகருமான ராமசாமி விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து ராமசாமி, “ என்னுடைய முதல் மனைவியும், மகனும் விபத்தில் இறந்து விட்டனர். நானும், என் மகளும் உயிர் பிழைத்தோம். இதனால் என் மகளை கவனிப்பதற்காக சத்யப்பிரியாவை 2-வதாக திருமணம் செய்தேன். அவருக்கு ஏற்கனவே திருமணம் நடந்ததை மறைத்து விட்டார். சத்யப்பிரியா என் மகளை கொடுமைப்படுத்தினார். அவருடைய தம்பி என் மகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார். இது தொடர்பாக டெல்லி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். நான் சிம்லாவில் பணியாற்றியபோதும் என் மகள் மீதான துன்புறுத்தல் தொடர்பாக சிம்லா போலீசிலும் புகார் அளித்துள்ளேன். பின்னர் சத்யப்பிரியாவை விட்டு விலகினேன். மகளின் பாதுகாப்புக்காக சசிகலா புஷ்பாவை மறுமணம் செய்ய விரும்பினேன்.

இதற்கிடையே, சத்யப்பிரியாவின் முதல் கணவர் திண்டுக்கல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து மனைவி தனக்கே சொந்தம் என்று வாதிட்டு உரிமை பெற்றார். இந்த உத்தரவை காட்டி தான் சசிகலா புஷ்பாவை நான் திருமணம் செய்துகொள்ள மதுரை கோர்ட்டில் உத்தரவு பெற்றேன். சசிகலா புஷ்பாவும் அவருடைய கணவரை சட்டப்படி விவாகரத்து பெற்றிருந்தார். எனவே, நானும், சசிகலா புஷ்பாவும் சட்டப்படி தான் மறுமணம் செய்து கொண்டோம்” என தெரிவித்தார்.
அதே சமயம் இதுகுறித்து சசிகலா புஷ்பா கூறுகையில், “நான் என் கணவர் லிங்கேஷ்வரனை விவாகரத்து செய்துவிட்டுதான் ராமசாமியை திருமணம் செய்துள்ளேன். தமிழக அரசு என் மீது தொடர்ந்த வழக்குகளை சமாளிக்க கடந்த ஓராண்டாக எனக்கு ராமசாமி ஆலோசனைகளை வழங்கி உதவி வந்தார். எனவே அவரது பிரச்சினைகள் அனைத்தும் எனக்கு தெரியும்.
மேலும் பேசிய அவர் சத்யபிரியா குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு அழுதுகொண்டே ஓடியதை நானும் டிவியில் பார்த்தபோது கஷ்டமாகத்தான் இருந்தது. அந்த குழந்தையை என்னிடம் வாங்கி கொடுங்கள், நான் வளர்க்கிறேன் என்று ராமசாமியிடம் பலமுறை சொல்லிவிட்டேன்.இதற்கு மேல் என்னால் ஒன்றும் செய்ய முடியாது. சத்யபிரியாவின் பின்னால் இருப்பது அரசியல். நான் தினகரன் அணியில் இருப்பதால் இந்த மாதிரியான நெருக்கடிகளை எனக்கு கொடுக்கின்றனர்”என்று சசிகலா புஷ்பா தெரிவித்தார்.
