காலா படம் அறிவிக்கப்பட்ட தேதியில் வெளிவருமா என எதிர்பார்க்கப்படும் நிலையில், படத்துக்கான தணிக்கை விவரம் வெளியாகியுள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 2.0 படம் முதலாவதாக வெளிவருமென எதிர்பார்க்கப்பட்ட வேளையில், காலா படம்தான் முதலாவதாக வெளிவரவிருக்கிறது என்று சொல்லும்விதமாக காலா படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்தார் படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான தனுஷ்.
இதையடுத்து வெளியான காலா டீசரும் படத்துக்கான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. ஆனால், படம் அறிவிக்கப்பட்ட தேதியில் வெளியாகுமா என்பது இன்றளவும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. ஏனெனில் தயாரிப்பாளர்கள் சங்க வேலைநிறுத்தப் போராட்டம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. எனவே தயாரிப்பாளர்கள் சங்கப் போராட்டம் முடிவை எட்டிய பிறகே அறிவிக்கப்பட்ட ஏப்ரல் 27ஆம் தேதி காலா படமானது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் காலா படத்துக்குத் தணிக்கையில் ‘யு/ஏ’ சான்றிதழ் கிடைத்திருக்கிறது. ஆனால், தணிக்கை அதிகாரிகள் படத்தின் பல இடங்களில் கட் செய்திருப்பதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் தணிக்கை அதிகாரிகள் பல இடங்களில் கட் செய்திருப்பதற்கு, படத்தை எப்படியாவது ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதற்காகப் படத்தின் தயாரிப்பாளரான தனுஷும் இயக்குநர் ரஞ்சித்தும் மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் சம்மதித்திருப்பதாக சென்சார் வட்டாரத் தகவல் கூறுகிறது.
தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை காத்திருப்பதாகப் படத்தை வெளியிடும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் அறிவித்திருப்பதால், அறிவிக்கப்பட்ட தேதியில் காலா வெளியாகுமா அல்லது மாற்று வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படுமா என்பது விரைவில் தெரிந்துவிடும்.
