பல தரப்பினரும் பாதிக்கப்பட்ட நிலையில் சினிமா சங்கங்கள் தொடர்பாக நேற்று நடை பெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டியதை தொடர்ந்து கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நடைபெற்று வந்த சினிமா ஸ்ட்ரைக் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
டிஜிட்டல் கட்டணத்தைக் குறைத்தல், கேளிக்கை வரி நீக்கம், டிக்கெட் கட்டணம், ஆன்லைன் பதிவுக் கட்டணம் மற்றும் பார்க்கிங், தின்பண்டங்களின் விலை குறைப்பு உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் திரைத்துறையினரின் வேலைநிறுத்தப் போராட்டம் கடந்த 47 நாட்களாக நடைபெற்று வந்தது.
முன்னதாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களுடனும், திரையரங்கு உரிமையாளர்களுடனும் கியூப் நிறுவனம் எந்தவித உடன்பாட்டுக்கும் வரவில்லை.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டால் மட்டுமே தீர்வு காண முடியும் எனவும் கூறப்பட்டது. அதை தொடர்ந்து கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பதற்கும், வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் அமைச்சர் கடம்பூர் ராஜு தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் திரையரங்கு உரிமையாளர்கள், திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர்கள், டிஜிட்டல் நிறுவன நிர்வாகிகள், அமைச்சர்கள் வேலுமணி, வீரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.அதை தொடர்ந்து பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டது.

இந்நிலையில் இன்று நடைபெறும் திரைத்துறை அமைப்பினர் மற்றும் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு புதிய படங்கள் வெளியீடு மற்றும் படப்பிடிப்பு வேலைகளை துவங்குவது குறித்து முடிவு செய்யப்படும் எனவும் இது குறித்த அறிவிப்பு இன்றிரவு வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
