ஞாயிற்றுக்கிழமை, மே 31
Shadow

பெண் நிருபரிடம் மன்னிப்பு கேட்டார் கவர்னர் புரோஹித்!

பெண் பத்திரிக்கையாளர் கன்னத்தில் தட்டியதற்காக வருத்தத்துடன் மன்னிப்பு கோரினார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.

அருப்புகோட்டை கல்லூரி மாணவிகளை பேராசிரியர் பாலியல் ரீதியாக தவறான முறையில் நடக்க கட்டாயப்படுத்தியதாக புகார் எழுந்து அவர் கைது செயப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் நேற்று மாலை கிண்டியில் உள்ள ராஜ் பவனில்  செய்தியாளர்களை  சந்தித்தார். அப்போது பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர் நிறைவு பகுதியில் பெண் நிருபர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்காமல் அவரது கன்னத்தை தட்டியுள்ளார். ஆளுநரின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

இந்நிலையில் தனது செயலுக்கு மன்னிப்பு கோரியுள்ள ஆளுநர்,  “பெண் பத்திரிக்கையாளாரின் கேட்ட கேள்வி நல்ல கேள்வியாக இருந்ததால் அதனை பாராட்டும் விதமாக கன்னத்தை தட்டினேன், எனது பேத்தியாக நினைத்து தான் கன்னத்தை தட்டினேன்” எனவும்  நானும் 40 வருடங்களாக பத்திரிக்கையாளன் தான் என தெரிவித்துள்ளார்.மேலும் அவரின் உணர்வு பாதிக்கப்பட்டிருந்தால் அதற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.

ஆளுநரின் மன்னிப்பை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் பத்திரிக்கையாளர், நான் உங்களிடம் கேட்ட ஒரு கேள்விக்கு நீங்கள் பாராட்டுவதற்காகவே செய்ததாக கூறும்  உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும் உங்கள் மன்னிப்பை ஏற்றுக்கொள்கிறேன் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் அவரது ஆடியோவில் உள்ள ஒருசில பேச்சுகளின்படி இந்த விவகாரத்தில் கவர்னர் சம்பந்தப்பட்டிருப்பதாக ஒருசில எதிர்க்கட்சி தலைவர்கள் தங்கள் சந்தேகத்தை தெரிவித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களிலும் இதுகுறித்த வதந்திகள் பரவி வருவதால் செய்தியாளர்களை சந்தித்து கவர்னர் பன்வாரிலால் புரோஹித் விளக்கம் அளித்து வருகிறார்.

நிர்மலாதேவி விவகாரத்தில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்று தான் தமிழக மக்களுக்கு உறுதி அளிப்பதாகவும், நிர்மலாதேவி யார் என்றே தனக்கு தெரியாது என்றும், அவரது முகத்தை கூட தான் பார்த்ததில்லை என்றும், தனக்கு பேரன்கள் இருக்கும் நிலையில் தன்மீது வீண்பழி சுமத்த வேண்டாம் என்றும் நிர்மலா தேவி விவகாரத்தில் என்னை இழுப்பது தவறானது, ஆதாரமற்றது, முட்டாள்தனமானது என்றும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் செய்தியாளர்களிடையே தெரிவித்தார்.

மேலும் சட்டவிதிகளின்படியே ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டதாகவும், பல்கலைக்கழக விவகாரங்களில் மாநில அரசு, தலையிட முடியாது என்பதால் தான் விசாரணை கமிஷனை அமைத்ததாகவும் அவர் கூறினார். இந்த விசாரணை கமிஷன் ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் தனது அறிக்கையை தாக்கல் செய்யும் என்றும், அதன் பின்னர் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றுவதா? வேண்டாமா? என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்தார்,

273 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன