வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

சினிமாவை வாழவைக்க நமக்குள் ஒற்றுமை அவசியம் – நடிகர் ஆரி ஆவேசம்

படத்தின் இசையமைப்பாளர் ரோஷன் ஜேக்கப் பேசுகையில்,
இப்படத்திற்காக முதலில் 2 பாடல்கள் தான் என்று முடிவு செய்தோம். பிறகுதான் 3 பாடல்களை சேர்த்து 5 பாடல்கள் இசையமைத்தோம். கிரிக்கெட், கபடி, மற்றும் காதல் என்று மூன்றும் சேர்ந்த கலவையாக இப்படம் இருக்கும்.
டூரிங் டாக்கீஸ் படத்தின் இயக்குனர் இஷாக் பேசுகையில்,
அபிலாஷ் எனக்கு சிறுவயது முதலே எதிரி. சிறுவயதில் நான் வீட்டிற்கு வரும் நேரத்தில் ‘மைடியர் பூதம்’ நெடுந்தொடர் ஓடிக்கொண்டிருக்கும். அத்தொடரில் ‘மூசா’ கதாபாத்திரத்தில் அபிலாஷ் நடித்திருப்பார். நான் சினிமாவிற்கு வந்தபிறகு நானும் அபிலாஷூம் ஒரே அறையில் தங்கியிருந்தோம். எனக்கு ஒரு நல்ல நண்பர். நான் இயக்கிய ‘நாகேஷ் திரையரங்கம்’ படத்தில் அவரை வில்லனாக அறிமுகப்படுத்தினேன். ஆனால், ‘தோனி கபடி குழு’ படத்தில் அவர் கதாநாயனாக நடிக்கிறார். இப்படத்தை சம்பந்தபட்டவர்களைவிட நான்தான் அதிகமாக பார்த்திருக்கிறேன்.
படத்தின் கதாநாயகி லீமா  பேசுகையில்,
தலைப்புப் போலவே, படமும் வித்தியாசமாக இருக்கும். மேலும், இப்படத்தின் மூலம் கபடியைப் பற்றியும் அதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் நிறைய அறிந்து கொண்டேன்.
தேசிய விருது பெற்ற நடிகர் அப்புக்குட்டி பேசுகையில்,
பிற விளையாட்டுக்களை விட கபடியை கற்றுக் கொண்டால் தான் நடிக்க முடியும். எனக்கு அந்த அனுபவம் ‘வெண்ணிலா கபடி குழு’ வில் கிடைத்தது. கிரிக்கெட்டை விட கபடியில் தான் நம் நாட்டிற்கு அதிக பதக்கங்களை வென்றிருக்கிறோம். கிரிக்கெட்டிற்கும், கபடிக்கும் உள்ள வேற்றுமையைக் கூறும் படமாக இது இருக்கும். அபிலாஷின் சிறுவயது கனவு நனவாகியிருக்கிறது. சினிமாவில் வாய்ப்பு கேட்கும் அத்தனை பேராலும் நடிகராக முடியாது. வாய்ப்பு தேடும் அனைவருக்கும் வாய்ப்புக் கிடைக்க வேண்டும். அப்படி கிடைத்த வாய்ப்பை நிலைநிறுத்த அனைவரும் உழைக்க வேண்டும். ஆரியை 12 வருடங்களாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். இன்னமும் தனது உடலை அப்படியே வைத்திருக்கிறார். ஒரு நடிகரால் தான் இது முடியும்.
இணை தயாரிப்பாளர் கே.மனோகரன் பேசுகையில்,
இப்படம் உருவாக அடித்தளம் அமைத்தது நானாக இருந்தாலும் முடித்தது நந்தகுமார் தான். இக்கதையைக் கூற இயக்குநர் ஐயப்பன் ஆறு மாத காலமாக என்னைப் பின் தொடர்ந்தார்.
படத்தின் கதாநாயகன் அபிலாஷ் பேசுகையில்,
சிறுவயதில் ‘மைடியர் பூதம்’ நெடுந்தொடரில் ‘மூசா’ கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். அதன்பிறகு 8 வருடங்கள் வாய்ப்புக்காக பல இடங்களிலும் முயற்சி செய்தேன். இஷாக் மூலம் தான் ‘நாகேஷ் திரையரங்கம்’ படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. என்னைப் போலவே பல காலமாக வாய்ப்பு தேடிக்கொண்டிருந்தவர்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நல்ல கருத்துக்களையும், கதைகளையும் மக்கள் எப்போதும் ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கையில் இப்படத்தை எடுத்திருக்கிறோம். இயக்குநர் தன் குழந்தை பிறந்ததற்குக் கூட செல்லாமல் இப்படத்திற்காக கடினமாக உழைத்திருக்கிறார். தயாரிப்பாளரும் எங்களுக்குத் தேவையானதை முழுமையாக செய்துக் கொடுத்தார். அதேபோல், தெனாலியின் தந்தை படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் வேளையில் இறந்துவிட்டார். ஆனால், அவர் நடித்து முடித்துவிட்டுத்தான் இறுதிச் சடங்கிற்குச் சென்றார்.
படத்தின் இயக்குநர் ஐயப்பன் பேசுகையில்,
இயக்குநர் A.வெங்கடேஷிடம் 5 படங்களில் பணிபுரிந்திருக்கிறேன். இப்படத்தின் கதையை முடிவு செய்த பிறகு எனது நண்பரான இப்படத்தின் தயாரிப்பாளரிடம் உதவி கேட்கச் சென்றேன். அவர் படத்தின் கதையைக் கேட்டுவிட்டு முன்பணம் கொடுத்தார். இப்படத்தை நான் தான் தயாரிப்பேன். அதுமட்டுமல்லாமல், இப்படத்தை வெளியிடும் செலவையும் நான் செய்கிறேன் என்றார். இப்படம் வாடிக்கையாக வரும் கதையாக இல்லாமல் முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது என்றும் கூறினார். மேலும், எவ்வளவு விரைவாக இப்படத்தை எடுக்க முடியுமோ அவ்வளவு விரைவாக இப்படத்தை எடுக்க வேண்டும் என்றார். அதுபோல, நான்கு மாதத்திலேயே இப்படத்தை எடுத்து முடித்தோம். பிறகு நடிகர், நடிகைகள் மற்றும் மற்ற கதாபாத்திரங்களுக்கு புதுமுகங்களுக்கே வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என்று கூறினார். அபிலாஷ் மற்றும் லீனா இருவரும் கதையைக் கேட்டவுடனேயே ஒப்புக் கொண்டனர். லீனா ‘மதராசபட்டிணம்’ படத்தில் ஆர்யாவிற்கு தங்கையாக நடித்திருப்பார்.
ஒரு ஊரில் ஏற்படும் பிரச்சனையைத் தீர்க்க கிரிக்கெட்டா? கபடியா? இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நம் நாட்டிற்கு வருமானம் ஈட்டும் கிரிக்கெட்டா? அல்லது மண்ணின் வீர விளையாட்டான கபடியா? எதைத் தேர்வு செய்கின்றனர் என்பதே படத்தின் கதை.
இப்படத்திற்காக கள்ளக்குறிச்சி, பாதூர் போன்ற கபடி விளையாடும் ஊர்களுக்குச் சென்று அதன்படி ‘செட்’ அமைத்தோம். மற்றும் படப்பிடிப்பும் நடத்தினோம்.
நடிகர் ஆரி பேசுகையில்,
நம் பாரம்பரிய விளையாட்டை முதன்மைப்படுத்தி எடுத்திருக்கும் இப்படத்தைச் சார்ந்த அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.
சென்னைக்கு ஒன்று நேர்ந்தால் மட்டும்தான் அனைவரும் குரல் கொடுக்கின்றனர். எங்கெங்கிருந்தெல்லாமோ நிவாரண உதவி குவிகிறது. சென்னையைத் தாண்டி புற இடங்களில் ஏதாவது நேர்ந்தால் அதை யாரும் கண்டுகொள்வதில்லை. அப்படி உதவி சென்று சேர்ந்திருந்தால் இன்று ஒரு விவசாயி தற்கொலை செய்துக் கொண்டிருக்கமாட்டார் என்று கூறினார். அரசியல்வாதிகள் அவர்கள் கடமையைச் சரியாக செய்தாலே நமக்கு வேலை இருக்காது என்றும் குற்றம் சாட்டினார்.
மேலும், சினிமாவை வாழவைக்க வேண்டும் என்றும், திரையரங்கத்தில் ஆன்லைன் பதிவுக்கு வசூலிக்கும் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்றும், சிறிய படங்களுக்கு மாலை மற்றும் இரவு காட்சிகளை அதிகப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
393 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன