ஞாயிற்றுக்கிழமை, மே 31
Shadow

சபரிமலையில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி !- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

 

கேரளாவிலுள்ள மேற்கு ‎மலைத் தொடர்களில் பத்தனம்தித்தா மாவட்டத்தில் உள்ள ஒரு புண்ணிய ஸ்தலம் சபரிமலை. மஹிஷி என்ற அரக்கியை கொன்ற பிறகு ‎சுவாமி ஐயப்பன் தியானம் செய்த இடமே சபரிமலை என ‎வழங்கப்படுகிறது. பதினெட்டு மலை களுக்கிடையே ஒரு ‎மலையின் உச்சி யில் 914 மீட்டர் உயரத்தில் சபரிமலை ஐயப்பன் கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு 10 முதல் 50 ‎வயதுக்குட்பட்ட பெண்கள் சமூக ரீதியாக இப்பயணத்தை ‎மேற்கொள்வதில்லை. மேலும் கோயிலுக்குள் செல்வதற்கு ‎அனுமதியும் வழங்கப்படுவதில்லை. சுவாமி ஐயப்பனை சார்ந்த ‎வரலாற்றுக் கதைகளில் வீட்டு விலக்குக்குரியப் பருவத்தில் இருக்கும் பெண்கள் இங்கு ‎வருவதை தடை செய்யப்பட்டதாலும் மேலும் இதர பல ‎காரணங்களாலும் பொதுவாக பெண்கள் இந்தக் கோயிலுக்கு ‎வருகை புரிவதில்லை என்ற நிலையில் சபரிமலை கோயில் வழிப்பாட்டில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உத்தர்விட்டு பெண்களை கடவுளாக வணங்கும் நாட்டில் பெண்கள் பலவீனமானவர்கள் அல்ல. பெண்கள் ஆண்களுக்கு சமமானவர்கள் எனவும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் பெண்கள் தடை முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் இந்திய இளம் வழக்கறிஞர்கள் அமைப்பு உள்ளிட்ட பலர் வழக்கு தொடர்ந்தனர். அதில் அனைத்து வயது பெண்களையும் சபரிமலை கோயிலுக்குள் அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. பாலினச்சமத்துவத்துக்கு எதிரானது எனக் கோரப் பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதிமுதல் 8-நாட்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.எப் நாரிமன், ஏஎம். கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் கொண்ட அமர்வு விசாரணை நடத்தி அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கை மாற்றி உத்தரவிட்டனர். வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. விசாரணையின் போது, ஏன் அனைத்து வயது பெண்களும் கோவிலுக்குள் நுழையக் கூடாது?

இந்து மதத்தில் தடை ஏதும் உள்ளதா என நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். சபரிமலை கோயிலின் ஆகம விதிகளின்படியே மாதவிலக்கு பருவத்தில் உள்ள பெண்கள் அனுமதிக்கப் படுவதில்லை என்று விளக்கமளிக்கப்பட்டது. அத்துடன் மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் சபரிமலை தேவசம் போர்டு தரப்பில் வாதிடப்பட்டது.இந்த விவகாரத்தில் நீதிமன்றம் என்ன முடிவெடுத்தாலும் தங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்று கேரள அரசு தெரிவித்தது. இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் சபரிமலை வழக்கில் அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்தத்தீர்ப்பில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி கன்வில்கர் ஆகியோர் ஒரு தீர்ப்பை வழங்கினர்.நீதிபதிகள் இந்து மல்கோத்ரா, சந்திரசூட், ரோஹிண்டன் நாரிமன் ஆகியோர் தனித் தனியாக தீர்ப்பு வழங்குகினார்கள். இதில் பெரும்பான்மையான நீதிபதிகள் தீர்ப்பை தலைமை நீதிபதியான தீபக் மிஸ்ரா வாசித்தார், அதில் “சபரிமலையில் நீண்டகாலமாக பெண்கள் மீது பாகுபாடு காட்டப்பட்டு வருகிறது. வழிபாடுகளில் பாகுபாடு காட்டக் கூடாது. பெண்களை கடவுளாக வணங்கும் நாட்டில் பெண்கள் பலவீனமானவர்கள் அல்ல. பெண்கள் ஆண்களுக்கு சமமானவர்கள். கோவிலுக்குள் பெண்கள் செல்ல அனுமதி மறுப்பது சட்ட விரோதம். சபரிமலை கோயில் பக்தர்கள் மட்டும் தனி மதத்தை சேர்ந்தவர்கள் அல்ல.சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும்” என்று தீபக் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.நீதிபதி கன்வில்கருடன் இணைந்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அளித்த தீர்ப்பை ஏற்பதாக நீதிபதிகள் நாரிமன், சந்திரசூட் அறிவித்துள்ளார்.சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என 5 நீதிபதிகள் அமர்வில் 4 நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

இப்படி 5 நீதிபதிகளில் 4 பேர் ஒரே தீர்ப்பை வழங்கி உள்ள நிலையில், பெண் நீதிபதியான இந்து மல்ஹோத்ரா தனி தீர்ப்பு வழங்கி உள்ளார்.இவர், சபரிமலை கோயிலுக்கு பெண்களை அனுமதிக்க கூடாது என்று தீர்ப்பு வழங்கியுள்ளார். அவர் தனது தீர்ப்பில், “இது மதம் என்பது நம்பிக்கை சார்ந்தது. இதில் பல உள்ளார்ந்த மத நம்பிக்கைகளை ஆராய வேண்டும். பெண்களுக்கு கோவிலில் வழிபட, இந்து மதத்தை பின்பற்ற உரிமை உள்ளது. ஆனால் சபரிமலை கோயில் விவகாரம் என்பது இந்து மத நம்பிக்கை தொடர்பானதாகும். இதற்கும் பெண் வழிபாட்டு முறைக்கும் தொடர்பு கிடையாது. குறிப்பிட்ட வயது பெண்களை சபரிமலை கோவிலுக்குள் அனுமதிக்காமல் இருப்பதே சரியானது” என்று நீதிபதி இந்து மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்

358 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன