கனா விமர்சனம்

கனா விமர்சனம்

கல்லடியை விட சொல் அடிக்கு வீரியம் ஜாஸ்தி என்பார்களே அது உண்மைதான்… அருண் ராஜா காமராஜாவின் கனா படத்தில் வசனங்களில் கேட்கும் “வினா” க்களுக்கு விடை கிடைத்தால் இந்தியா உலகை நிச்சயம் ஆளும்.

கிரிக்கெட் வெறியரான அப்பா சத்யராஜ் அழுகையை பார்க்கிற குட்டிப் பெண். அப்பாவின் அழுகைக்கு காரணம் கிரிக்கெட்டில் இந்தியா தோற்றது.
அந்த நொடி அந்த குட்டிப் பெண் எடுக்கிற முடிவு “தான் எப்படியும் கிரிக்கெட் விளையாடி வெற்றி பெற்று அப்பாவுக்கு சந்தோஷம் தரவேண்டும்” என்பதுதான்.
அப்பாவாக சத்யராஜ் மகளாக ஐஸ்வர்யா ராஜேஷ் வாழ்ந்திருக்கிறார்கள்.

இந்த பொண்ணுகிட்ட என்னமோ இருக்குடான்னு படம் பாக்கும் ஒவ்வொருவரும் யோசிக்கிற ஐஸ்வர்யா ராஜேஷ். எந்த இடத்திலும் நடிகையாக தெரியாம கேரக்டராவே இருப்பது பலம்.

அப்பாவி விவசாயியாக அதே நேரம் நாட்டுப்பற்று மிக்க விளையாட்டு ரசிகராக வாழ்ந்திருக்கிறார் சத்யராஜ்.

கிராமத்தில் படிக்கிற விவசாய குடும்பத்து பெண் சாதாரணமாகவே வெளியுலகில் வலம் வருவது அத்தனை சிரமம். அதே நேரம் ஆண்கள் மட்டுமே கோலோச்சிய கிரிக்கெட் விளையாட்டில் ஒரு பெண் சிபாரிசு இல்லாமல் நுழைந்து திறமையால் மட்டுமே ஜெயிக்க முடியுமா எனபதை சீட் நுனியில் ரசிகனை அமர வைத்து அதகளப்படுத்துகிறார் கவுசல்யா முருகேசன்.

ஆண்களோடு விளையாடும் கவுசல்யா முருகேசனை அதே மைதானத்தில் அம்மா ரமா துடப்பத்தால் அடித்து துவைக்கும் போது கவுசல்யா முருகேசன் மீது விழும் ஒவ்வொரு அடியும் பெண்களின் திறமையை ஒடுக்க நினைக்கும் ஆதீக்க சக்தியின்மீது விழும் அடி.

கோடங்கி விமர்சனம்

மொழி எப்படி திறமையை நசுக்குகிறது எனபதை கவுசல்யா முருகேசன் ஆக ஐஸ்வரியா ராஜேஷும், அலட்சியமான அரசாங்கத்தால் விவசாயமும், விவசாயிகளும் படும் துயரங்களை முருகேசனாக சத்யராஜூம் நம் கண் முன் நிறுத்தி கலங்க வைப்பதோடு “கனா” மூலமாக பல “வினா”க்களையும் எழுப்புகிறார் இயக்குனர் அருண்ராஜா காமராஜா.

எப்படியும் கவுசல்யா முருகேசன் வெற்றிக் கோப்பையை வாங்கி விடுவார் என முடிவு முன்பே தெரிந்தாலும் கோப்பையோடு கடைசியில் அவர் பேசும் வசனங்கள் ஒவ்வொன்றும் அதிகார வர்கத்துக்கு சாட்டையடி என்றால் விவசாயத்தை மதிக்கத் தெரியாத மக்களுக்கு செருப்படி…
கொஞ்ச நேரமே வந்தாலும் சிவகார்த்திகேயன் மனசில் நிற்கிறார். தயாரிப்பாளர் ஆக சினிமாவிலும், நல்ல சினிமாவை கொடுத்து மக்கள் மனசிலும் சிவாவுக்கு எப்போதும் இடம் உண்டு.
ஒரு சினிமாவின் வெற்றி என்பது அந்த சினிமா கடும் விமர்சனங்களை சந்திக்க வேண்டும் அல்லது மக்கள் மத்தியில் விவாத பொருளாக மாற வேண்டும்.
கனா படம் எழுப்பும் கேள்விகள் கண்டிப்பாக கடும் விவாதங்களை ஏற்படுத்தும்.
இது போன்ற படங்களை வரவேற்றால் மட்டுமே சமூகத்தில் மாற்றங்களை பார்க்க முடியும்.
முதல் தயாரிப்பிலேயே நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி கொண்டார் சிவா.


கனா குழுவுக்கு வாழ்த்துகள் சொல்லி அப்படியே கடந்து போகாமல் அந்த கனா எழுப்பும் வினாக்களுக்கு பதில் அளிக்க முயற்சிப்போம்.
விவசாயத்தில் தோற்றாலும் விளையாட்டில் மகளை ஜெயிக்க வைக்கும் அப்பா. அதே அப்பாவின் விவசாயத்தை காப்பாற்ற ஜெயிக்க வைக்க யார் இருக்கிறீர்கள் என்ற பெரும் வினாவை எழுப்பும் மகள்.
தினேஷ் ஒளிப்பதிவில் பசுமையான வயலும் நீரின்றி காய்ந்த வயக்காடும் அத்தனை அருமை. சர்வதேச விளையாட்டை பார்ப்பது போல ஒரு நேர்த்தி. தாமஸ் இசை படத்தின் வெற்றிக்கு பெரும் பலம் சேர்க்கிறது. தர்ஷன், இளவரசு, ரமா என ஒவ்வொரு கேரக்டரும் கன கச்சிதம்.
மொத்தத்தில் கனா இந்த ஆண்டின் கடைசியாக வந்து முதலிடம் பிடிக்கும் படம்..!

கோடங்கி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *