திரைக்கதை மன்னன் என்று பேர் பெற்ற இயக்குனர் பாக்யராஜ் நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் இயக்கி நடிக்கயிருக்கிறார்.
சமீபகாலமாக இயக்கத்திற்கு இடைவெளி விட்டு விட்டு நடிகராக மட்டும் பல படங்களில் நடித்து வந்த இயக்குனர் பாக்யராஜ் மீண்டும் இயக்க திட்டமிட்டிருப்பது ‘சின்னவீடு’ படத்தின் இரண்டாம் பாகத்தை.
ஏற்கனவே தமிழ் சினிமாவில் இரண்டாம் பாக படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் பாக்யராஜூம் இணைந்திருக்கிறார். இவர் இயக்கத்தில் வெளியாகி வெள்ளிவிழா கண்ட படம் சின்னவீடு.

குடும்பத்தில் நடக்கும் யதார்த்தத்தை அப்படியே பிரதிபலித்திருப்பார் அந்த கதையில். சுமார் 30 ஆண்டுகளை கடந்திருந்தாலும் அந்த கதையில் சொல்லப்பட்டிருக்கும் கருத்து போல பல சம்பவங்களும் இப்போதும் நடைமுறையில் பல குடும்பங்களில் விரிசலையும், பிளவையும் ஏற்படுத்தி வருகிறது.
எனவே, இப்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்றார்போல கதையில் சில மாற்றங்களை செய்து சின்னவீடு 2 எடுக்க பாக்யராஜ் திட்டமிட்டிருக்கிறார்.
சின்ன வீடு படம் 1985-ல் வெளியானது. இந்த படத்தை பாக்யராஜ் இயக்கி கதாநாயகனாகவும் நடித்து இருந்தார். ஊர்வசியின் அக்கா கல்பனா கதாநாயகியாக நடித்து இருந்தார். அனு இன்னொரு நாயகியாக வந்தார்.
விருப்பம் இல்லாமல் குண்டான பெண்ணை மணந்து தவிக்கும் இளைஞன் இன்னொரு பெண்ணுடன் தொடர்பு வைப்பதால் ஏற்படும் பிரச்சினைகளை இந்த படம் மையப்படுத்தி இருந்தது. சின்ன வீடு படம் வெற்றிகரமாக ஓடி வசூல் குவித்தது. தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகத்தையும் பாக்யராஜே இயக்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்தமுறை இளம்ஜோடி ஒன்றையும் படத்தில் அறிமுகபடுத்தயிருக்கிறாராம் பாக்யராஜ். பேன்டசி படங்கள் வந்து பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கும் சூழலில் இதுபோன்ற குடும்ப உறவுகளை மையப்படுத்தி படங்கள் வருவது குறைந்திருக்கும் நிலையில் மீண்டும் பாக்யராஜ் தனது திரைக்கதை மூலம் தான் எப்போதும் திரைக்கதை மன்னன்தான் என்பதை நிரூபிப்பார் என்கிறார்கள் அவரை குறித்து விவரம் அறிந்தவர்கள்.
சின்னவீடு 2 படத்திற்கான நடிகர்-நடிகைகள் தேர்வு நடக்கிறது. பட திரைக்கதையை ஏற்கனவே எழுதி முடித்து வைத்திருக்கிறாராம். தேவையான நடிகர் நடிகைகள் தேர்வானதும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கி ஒரே ஷெட்யூலில் படத்தை முடிக்க திட்டமிட்டிருக்கிறாராம் பாக்யராஜ்.
