உறியடி 2 விமர்சனம்

19 Views

தென்மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பூச்சிக்கொல்லி தயாரிக்கும் நிறுவனம் ஒன்று எந்தவித பராமரிப்பு பணிகளும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் சரிவர செய்யப்படாமலேயே இயங்கி வருகிறது.

கெமிக்கல் இஞ்சினியரிங் படித்து விட்டு, இந்த ஆலையில் வேலைக்குச் சேர்கிறார்கள் நண்பர்களான விஜய்குமார், சுதாகர் மற்றும் அப்பாஸ் மூவரும். இந்த ஆலையில் அபாயகராமான வாயு ஒன்று உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த வாயுவின் விபத்தில் அப்பாஸ் உயிரிழக்கிறார்.

ஒரு கட்டத்தில் ஊருக்கே அது பாதிப்பை ஏற்படுத்தும் அளவிற்கு செல்கிறது. இந்த ஆலை முதலாளியோ உள்ளூர் ஆளுங்கட்சி அரசியல்வாதியையும் அந்தப் பகுதியில் ஜாதி அரசியல் செய்யும் அரசியல்வாதியையும் கைக்குள் போட்டுக்கொண்டு பிரச்சனைகளை அமுக்க பார்க்கிறார்.

ஆனால் இளைஞர்களை ஒன்று திரட்டி இந்த உண்மையை வெளி உலகத்திற்கு தெரியப்படுத்த துடிக்கிறார் விஜய் குமார்.. இவரின் முயற்சி வெற்றி பெற்றதா..?? இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

வசனங்கள், காட்சியமைப்புகள் என அனைத்திலும் இயக்குனர் மற்றும் உதவி இயக்குனர்களின் மெனக்கெடல் நன்றாகவே தெரிகிறது.

இப்படத்தில் நடித்த சில நடிகர்கள், இப்படத்திற்கே உதவி இயக்குனர்களாக பணி புரிந்திருக்கிறார்கள். ஹீரோவாகவும் நடிப்பில் உச்சம் தொட்டுள்ளார் இயக்குனர் விஜய்குமார்.

கதைக்கு தேவையான நடிப்பை அளவாக கொடுத்திருக்கிறார். கோலிவுட்டில் தனக்கென ஒரு பாதையை தேர்ந்தெடுத்து அதில் பயணிக்க துவங்கி விட்டார் விஜய்குமார். இதேபோல் இன்னும் பல படங்கள் இயக்கி தமிழ் சினிமாவை தரமான சினிமாவாக மாற்றுங்கள் இயக்குனரே.

படத்தின் நாயகியாக கேரளத்தைச் சேர்ந்த விஸ்மயா மிகச்சரியான தேர்வு. எதார்த்தம் மீறாமல் அழகாக, குறும்புத்தனம் என கச்சிதமாக நடித்துள்ளார். அதிலும், ‘வா வா பெண்ணே…’ பாடலில் கண்களை கவர்கிறார்.

விஜய் நண்பர்களாக வரும் ‘பரிதாபங்கள்’ சுதாகர் மற்றும் அப்பாஸ் காமெடியுடன் குணச்சித்திர கதாபாத்திரங்களாவும் நடித்து தங்களது திறமையை காட்டியிருக்கிறார்கள்.

செங்கை குமார் என்கிற அரசியல்வாதி கதாபாத்திரத்தில் வரும் சங்கர் ஒரு நிஜமான ஜாதி கட்சி தலைவரின் செயல்பாடுகளை கண்முன் நிறுத்துகிறார். இன்னும் பல படங்கள் இவரது வருகைக்காக காத்திருக்கிறது…

படத்தில் நடித்துள்ள மற்ற கதாபாத்திரங்களும் மிக நேர்த்தியாக தங்களது பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

இந்தப்படத்தின் ஒளிப்பதிவாளர் பிரவீன் குமாரும் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இருவரும் படத்திற்கு மிகப்பெரிய பலம்.
படத்தை கட்டாயம் திரையில் காணுங்கள்..

 

மொத்தத்தில் அரசியல்வாதிகள், தப்பான தொழில் அதிபர்களுக்கு செருப்படி… வாக்காளர்களுக்கு நெத்தியடி இந்த உறியடி 2.

கோடங்கி மதிப்பீடு : 3.5/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *