சனிக்கிழமை, ஏப்ரல் 27
Shadow

ஜெ.,ரகசியங்களை சொல்ல வருகிறதாம் சசிலலிதா..!

 

தமிழ்நாடு தெலுங்கு யுவசக்தியின் தலைவராக இருக்கும் ஜெகதீஸ்வர ரெட்டி ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக எடுக்கிறார். இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான இவர், ‘ஜெயம் மூவிஸ்’ என்ற பெயரில் பல படங்கள் தயாரித்திருக்கிறார். அனைத்து இந்திய மொழிகளிலும் படங்கள் தயாரித்து வெளியிட்டிருக்கிறார்.

தற்போது அவர் தயாரித்து இயக்கப் போகும் படத்தின் பெயர் ‘சசி லலிதா’. ஜெயலலிதா மீது கொண்ட அன்பினால் அவரின் வாழ்க்கையை படமாக எடுக்கப் போகிறார். ஜெயலலிதாவின் வாழ்க்கையில் நடந்த அத்தனை சம்பவங்களும் இப்படத்தில் இருக்கும். இக்கதையை ஜெயலலிதாவின் ஆத்மா கூறியதன் அடிப்படையில் தான் இந்த படம் அமைந்திருக்கும்.

சிறு வயதில் எப்படி இருந்தார்? எப்படி நடிகையாக ஆனார்? அரசியலில் அடியெடுத்து வைத்தது, அதிமுகவில் அவரது பங்களிப்பு, சசிகலாவின் வாழ்க்கை, அவருடன் ஜெயலலிதாவிற்கு ஏற்பட்ட தொடர்பு என்று மக்கள் அறியாத பல விஷயங்களையும் உள்ளடக்கி கதையாக இப்படம் இருக்கும்.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், டீசரும் இன்று வெளியாகிறது. தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு ஜெயலலிதாவின் வாழ்க்கை பற்றி அறிந்து கொள்ள ஆவல் இருக்கும். அதை நிறைவேற்றும் விதமாக இப்படம் இருக்கும்.

குறிப்பாக, ஜெயலலிதாவின் இறுதி 75 நாட்கள் மருத்துவமனையில் என்ன நடந்தது? என்பது பற்றியும், உச்ச நீதி மன்றத்தில் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது என்பது தொடர்பாக ஒரு வழக்கு பதிவு செய்திருப்பதும், அது பற்றிய முழு விபரத்தையும் உலகிற்கு தெரியப் படுத்தும் விதமாகவும் இப்படம் இருக்கும். சிறுவயது முதல் ஜெயலலிதாவுடன் மிகவும் நெருக்கமாக இருந்தவர்களும், ஜெயலலிதாவின் ஆத்மாவும் கூறியது தான் இப்படம். ஜெயலலிதாவின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களைக் கொண்டிருப்பதால் நிச்சயம் இப்படம் எல்லோர் இதயத்திலும் நீங்காத இடம்பெறும்.

இப்படத்தின் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விபரம் அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்கப்படும்.

இவ்வாறு இயக்குனரும் தயாரிப்பாளருமான ஜெகதீஸ்வர ரெட்டி கூறினார்.

ஏற்கனவே ஜெ.வாழ்க்கையை படமாக்கப் போவதாக பெண் இயக்குனர் பிரியதர்ஷினி “த அயர்ன் லேடி” என்ற தலைப்பை அறிவித்து ஷூட்டிங் ஏற்பாடுகளை செய்து வருகிறார்.

ஏ.எல்.விஜய் “தலைவி” என பெயர் அறிவித்து படவேலைகளை செய்து வருகிறார்.

இயக்குனர் பாரதிராஜாவும் தன் பங்குக்கு ஒரு படம் இயக்க போவதாக அறிவித்திருக்கிறார்.

இந்த நிலையில் ஆந்திராவை சேர்ந்தவர் ஜெ.,வின் ஆன்மா தன்னிடம் பேசியிருப்பதாக கூறி சசிலலிதா என்ற பெயரில் பட அறிவிப்பு வெளியிட்டு கூடவே டீசரும் வெளியிட்டார். அதில் ஜெ., குரலில் படம் பற்றிய அறிவிப்பும் இருந்தது.

அதே நேரம் ஜெ., வாழ்க்கையை படமாக்க அதிகாரப்பூர்வ கடிதம் பெற்றது ஏ.எல்.விஜய் மட்டுமே. அவருக்கு ஜெ., அண்ணன் மகன் தீபக் ஜெயராமன் தடையில்லா கடிதம் கொடுத்திருக்கிறார்.

423 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன