
அமைச்சர் தங்கமணியுடன் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற முதல்வருக்கு/மீண்டும் வைரஸ் பரிசோதனை செய்ய முடிவு!
தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு இன்று கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டது. சென்னை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் தங்கமணி அனுமதிக்கப்பட்டுள்ளார்
முன்னதாக தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தங்கமணி பங்கேற்றார். தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தால், வைப்பீட்டாளர்கள் நலனிற்காக அதன் செயல்பாடுகளை ஆன்லைன் மூலமாக செயல்படுத்திடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள http://tnpowerfinance.com என்ற புதிய வலைதளம், TNPFCL என்ற கைப்பேசி செயலியை முதலமைச்சர் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கமணி பங்கேற்றார்.
கொரோனா நோய்த் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம் சார்பில், அமைச்சர் தங்கமணி ரூ.5 கோடிக்கான காசோலையை முதலமைச்சரிடம் வழங்கினார்.
முதலமைச்சரை மத்திய எரிசக்தி துறை இணை அமைச்சர் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் அமைச்சர் தங்கமணி கலந்து கொள்ளவில்லை.
அதே நேரம் வைரஸ் தொற்று உறுதி ஆனதால் நாமக்கல்லில் உள்ள அமைச்சர் தங்கமணியின் அலுவலகம் மூடப்பட்டது.

இதற்கிடையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் வைத்தியலிங்கம், முனுசாமி உட்பட ஐவர் குழு அவசர கூட்டம் நேற்று காலை நடந்தது. இந்த ஐவர் குழு கூட்டத்திலும் அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டதால் மீதம் உள்ள 4 மூத்த நிர்வாகிகளும் வைரஸ் பரிசோதனை செய்ய முடிவு செய்து உள்ளனர்.
கொரோனா வைரஸ் பரிசோதனை செய்த பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளில் அமைச்சர் தங்கமணி பங்கேற்றுள்ளார். முதலமைச்சருடன் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றதால், முதலமைச்சருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடந்த மாதம் ஏற்கனவே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, அந்த பரிசோதனை முடிவுகளில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.
இப்போது மீண்டும் இரண்டாம் முறையாக பரிசோதனை நடத்த திட்டம்.
