புதன்கிழமை, ஏப்ரல் 24
Shadow

அரை நிர்வாண ஓவிய சர்ச்சையில் சிக்கிய பெண்ணுக்கு முன் ஜாமீன் மறுப்பு!

 

அரை நிர்வாண ஓவிய சர்ச்சையில் சிக்கிய பெண்ணுக்கு முன்  ஜாமீன் இல்லை!

கேரள மாநிலம் கொச்சியை அடுத்த பனம்பிள்ளியை சேர்ந்தவர் ரெகானா பாத்திமா (வயது 34). பி.எஸ்.என்.எல். முன்னாள் ஊழியரான இவர் கேரளாவில் நடந்த முத்த போராட்டத்தில் பங்கேற்றது உள்பட பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவர். 2018-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பையடுத்து சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குள் இருமுடி கட்டி நுழைய முயன்று பரபரப்பை ஏற்படுத்தினார்.

கடந்த மாதம் ரெகானா பாத்திமா தன் மகன் மற்றும் மகளை, தனது அரை நிர்வாண உடலில் ஓவியம் வரைய வைத்தார். அதை வீடியோ மற்றும் புகைப்படங்களாக எடுத்து கொண்டு ‘உடல் மற்றும் அரசியல்‘ என்ற தலைப்பில் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். மேலும் சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் பதிவிட்டு இருந்தார். இந்த வீடியோ மற்றும் கருத்துகள் சமூக வலைத்தளத்தில் வைரலானது. இந்த சம்பவத்திற்கு பெரும்பாலானோர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

பத்தனம்திட்டா மாவட்ட பா.ஜ.க. தலைவர் ஏ.வி.அருண் பிரகாஷ் இதுகுறித்து திருவல்லா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும், மாநில குழந்தைகள் நல உரிமை ஆணையமும் போலீசார் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து ரெகானா பாத்திமா மீது போக்சோ சட்டம், தகவல் தொழில்நுட்பச் சட்டம், மற்றும் சிறார் நீதிச்சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ரெகானா பாத்திமா கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். தனது மனுவில், எனது குழந்தைகளுக்கு பாலியல் கல்வியை கற்றுக் கொடுக்கவே, இவ்வாறு நடந்து கொண்டேன் என்று கூறி இருந்தார்.

ஆனால் ரெகானா பாத்திமாவுக்கு ஜாமீன் வழங்க அரசு வக்கீல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் போலீசார் பறிமுதல் செய்த ரெகானா பாத்திமாவின் மடிக்கணினி, செல்போன் ஆகியவை திருபோனிதுராவில் தடயவியல் ஆய்வகத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வந்தபின்னர்தான் ஜாமீன் மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இந்த வழக்கு குறித்து விசாரித்த நீதிபதி உன்னிகிருஷ்ணன் விசாரணை முடிவில் ரெகானா பாத்திமாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். அவர் கூறுகையில், “மனுதாரர் ரெகானா பாத்திமாவுக்கு வேண்டுமானால் அவரின் கொள்கையின்படி, குழந்தைகளுக்கு கல்வி கற்றுக்கொடுக்க உரிமை இருக்கிறது. ஆனால், அவை அனைத்தும் 4 சுவர்களுக்குள் அவரின் வீட்டுக்குள் நடக்க வேண்டும்.

மனுஸ்மிருதி, புனித குர்ஆன் நூல்களைப் படித்துப் பார்க்கச் சொல்லுங்கள். அதில் குழந்தைகளின் வாழ்வில் தாயின் பங்கு என்ன என்பது விளக்கமாக சொல்லப்பட்டு இருக்கும் என்று கூறி அவரது ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தார்.

 

671 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன