
சாத்தான்குளம் ஜெயராஜ் மகளுக்கு அரசு வேலை: ஆணை வழங்கப்பட்டது
சாத்தான்குளத்தில் போலீஸ் விசாரணையின்போது கொல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அறிவித்ததை தொடர்ந்து, ஜெயராஜ் மகளுக்கு பணி நியமன ஆணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கினார்.
தூத்துக்குடி சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தில் தமிழக அரசு நிதி உதவி அளித்திருந்ததோடு குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படுமென ஏற்கனவே அறிவித்திருந்தது.
அதன்படி, ஜெயராஜின் மூத்த மகளும், பென்னிக்சின் சகோதரியுமான பெர்சிக்கு அரசு பணி வழங்கப்பட்டுள்ளது. இளநிலை வருவாய் ஆய்வாளர் பணிக்கான நியமன ஆணையை தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
பணி நியமன ஆணையை பெற்றுக்கொண்ட பெர்சி, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சோதனையில் இருந்து மீள்வதற்காக அரசு தனக்கு பணி வழங்கியிருப்பதாக கூறினார். தன் தந்தை, சகோதரர் மரணத்தில் நீதியை நிலைநாட்ட தமிழக அரசு உதவும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
சாத்தான்குளம் வணிகர்களான ஜெயராஜூம் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் சாத்தான்குளம் போலீசாரால் விசாரனை என்ற பெயரில் கொடூரமாகத் தாக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட நேரத்தில் இருவரும் மரணமடைந்தனர். உயர்நீதிமன்ற உத்தரவுபடி அந்த வழக்கை சி.பி.சி.ஐ.டியினர் விசாரித்து இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.க்களான பாலகிருஷ்ணன் ரகுகணேஷ் உள்ளிட்ட 10 பேர்கள் மீது கொலைவழக்குப் பதிவு செய்தனர். பிறகு அந்த வழக்கு சி.பி.ஐ.யின் விசாரணைக்கு மாற்றப்பட்டு விசாரணையில் இருக்கிறது.
