
உ.பியில் மீண்டுமொரு பயங்கரம்: இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை
உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண், கடந்த 14-ம் தேதி வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்தபோது, அவரை 4 நபர்கள் கடத்திச் சென்று கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் வெளியில் சொல்லிவிடுவார் எனக்கருதிய அந்த கொடூர கும்பல் இளம்பெண்ணை கடுமையாக தாக்கியுள்ளது.
இதில் பலத்த காயமடைந்த அந்த பெண், சிகிச்சை பலனின்றி டெல்லி மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் மாநிலத்தையே உலுக்கி உள்ளது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ஹத்ராஸ் சம்பவம் போன்றே உத்தர பிரதேசத்தில் மற்றொரு பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்துள்ளது. பல்ராம்பூர் அருகே வேலைக்குச் சென்ற 22 வயது இளம்பெண்ணை ஒரு கும்பல் கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. அத்துடன் அந்தப் பெண்ணை கடுமையாக தாக்கி உள்ளனர்.
பலத்த காயமடைந்த அந்த பெண்ணை லக்னோவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். பிரேத பரிசோதனை அறிக்கையில், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
