
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை அணியும், பஞ்சாப் அணியும் மோதின. இதில், சென்னை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. இதனால், பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை பஞ்சாப் அணி இழந்தது.
சென்னை அணியை பொறுத்தவரை ஏற்கனவே பிளே ஆப் வாய்ப்பை இழந்துவிட்டதால், பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வென்றே ஆக வேண்டும் என்ற நெருக்கடியில் பஞ்சாப் அணி இந்த போட்டியை சந்தித்தது.

டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ராகுல் -மயங்க் சிறப்பாக ஆடிய நிலையில், நிகிடி பந்து வீச்சில், இருவரும் ஆட்டமிழந்தனர். இதன்பிறகு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிய, பஞ்சாப் அணியின் ரன், சென்னை அணியின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 153 ரன்களை பஞ்சாப் அணி எடுத்தது.
இதையடுத்து 154 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பேட்டிங் செய்த சென்னை அணி ஒரு விக்கெட் மட்டுமே இழந்து 18.5 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் பஞ்சாப் அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது
