புதன்கிழமை, மே 20
Shadow

தீபாவளி ரிலீசில் களம் இறங்கும் ரிஷியின் “மரிஜுவானா”

 

தீபாவளி ரிலீசில் களம் இறங்கும் ரிஷியின் “மரிஜுவானா”

மரிஜுவானா’  படத்தில் ரிஷி ரித்விக் கதாநாயகனாகவும் ஆஷா பாத்தலோம் நாயகியாகவும் நடித்துள்ளனர். பவர் ஸ்டார் சீனிவாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். எம்.டி.ஆனந்த் இயக்கி உள்ளார். எம்.டி.விஜய் தயாரித்துள்ளார்.

போதை பழக்கத்துக்கு அடிமையான ஒருவனின் சைக்கோ கொலைகளை மையப்படுத்தி தயாராகி உள்ளது இந்த மரிஜுவானா. படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பி யூ சான்றிதழ் கேட்டனர். ஆனால் 52 சர்ச்சை காட்சிகள் இருப்பதாகவும் அவற்றை வெட்டி நீக்கினால் யூஏ சான்றிதழ் தருவதாகவும் தெரிவித்தனர்.  படக்குழுவினர் உடன்படவில்லை. இதையடுத்து படத்துக்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் அளித்துள்ளது.


இதுகுறித்து படத்தின் இயக்குனர் எம்.டி.ஆனந்த் கூறியதாவது:-

“உண்மை சம்பவங்களை வைத்து மரிஜுவானா படத்தை எடுத்துள்ளோம். போதைக்கு அடிமையானவர்களால் சமூகத்தில் நடக்கும் குற்றங்கள், குழந்தைகள் பராமரிப்பில் பெற்றோர்களுக்கு இருக்கும் கடமைகள் ஆகியவற்றை சொல்லி இருக்கிறோம். ஆனால் தணிக்கை குழுவினர் சர்ச்சையான 52 காட்சிகளை நீக்கினால்தான் ஏ சான்றிதழ் கொடுக்காமல் இருப்போம் என்றனர்.

சமூக அக்கறையுடன் பெற்றோர்களுக்கு எச்சரிக்கையூட்டும் படமாக எடுத்திருப்பதை சுட்டிக் காட்டி யூ ஏ சான்றிதழாவது கொடுங்கள் என்று கேட்டும் மறுத்து விட்டனர். இதனால் ஏ சான்றிதழுடன் படத்தை தமிழ் தாய் கலைக் கூடம் சார்பில் எஸ்.ராஜலிங்கம் இந்த படத்தை தீபாவளிக்கு வெளியிடுகிறார். சுமார் 150 தியேட்டர்களில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஹீரோ ரிஷி ரித்விக் பேசுகையில், “’அட்டு’ படத்தில் முழு ஈடுபாட்டுடன் நடித்தேன். அதற்காக எனக்கு ஊடகம் மற்றும் ரசிகர்களிடம் இருந்து தற்போது வரை பாராட்டு கிடைத்து வருகிறது. மக்கள் மனதில் நிற்கும் அப்படிப்பட்ட வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் கவனம் செலுத்தி வந்த போது தான் ‘மரிஜுவானா’ கதை என்னிடம் வந்தது. கதை மற்றும் கதாப்பாத்திரம் வித்தியாசமாகவும், புதுஷாகவும் இருந்தது. இதில் நான் ஒரு போலீஸ் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறேன். கட்டுப்பாடுகளை மதிக்காத ஒரு அதிரடி போலீஸ். சைக்கோ போலீஸ் என்று கூட சொல்லலாம். குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பதில் ஒரு சைக்கோ.

ரெகுலரான போலீஸ் வேடம் என்றால் ஒகே. ஆனால், இந்த போலீஸ் வேடம் சற்று வித்தியாசம் என்பதால், இந்த கதாப்பாத்திரத்திற்காக சில மாதங்கள் பயிற்சி எடுத்தேன். எனக்கு தெரிந்த காவல்துறை நண்பர்கள் சிலரிடம் பயணித்து, போலீஸ் எப்படி இருப்பார்கள், என்பதை தெரிந்துக் கொண்டதோடு இயக்குநர் ஆனந்தின் போலீஸ் கதாப்பாத்திரத்தை மனதில் ஏற்றிக்கொண்டு நடித்தேன். ’அட்டு’ மூலம் எனக்கு எப்படி பாராட்டுகள் கிடைத்ததோடு அதை விட பல மடங்கு அதிகமாக ‘மரிஜூவானா’ போலீஸ் வேடம் பெற்றுத்தரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. பெண்களுக்கும் 40 வயதை கடந்தவர்களுக்கும் பாடமாக இந்த படம் இருக்கும்’ என்று அவர் கூறினார்.

 

408 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன