
திருப்பதி திருமலையில் அமைந்துள்ள ஏழுமலையான் கோயிலுக்கு பிரத்யேகமாக டிவி சேனல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இது ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனல் (SVBC) என்ற பெயரில் இயங்கி கொண்டிருக்கிறது. இதில் 11 மணி நேரம் நேரலை நிகழ்ச்சிகளும், 4 மணி நேரம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இதற்காக 90 ஊழியர்கள் போதும் என்று கூறப்படும் நிலையில், தற்போது 248 பேர் வேலை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 150 பேர் எந்தவித வேலையும் செய்யாமல் வெறுமனே சம்பளம் பெற்று வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
சமீபத்தில் ஹைதராபாத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர் ஏழுமலையான் தொடர்பான பக்தி நிகழ்ச்சி ஒன்றை அனுப்புமாறு SVBC சேனலிடம் கேட்டுக் கொண்டார். இதையடுத்து இ-மெயில் மூலம் லிங்க் ஒன்று பக்தருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதை திறந்து பார்த்தவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அந்த லிங்க் ஆபாச இணையதளத்திற்கானது. இதுபற்றி திருப்பதி தேவஸ்தான உயர் அதிகாரிகளிடம் பக்தர் புகார் அளித்தார்.
இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் ஊழியர் தவறான லிங்கை அனுப்பி வைத்தது கண்டறியப்பட்டது. அவர் மதுபோதையில் பணிக்கு வந்திருந்ததும் தெரியவந்தது. மேலும் SVBC பக்தி சேனல் ஊழியர்கள் தங்களது பணி நேரத்தில் அலுவலக கம்ப்யூட்டரில் திரைப்படங்கள், நாடகங்கள், ஆபாச படங்கள் பார்த்து வந்ததும் கண்டறியப்பட்டது. இந்நிலையில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனலின் மேலாண் இயக்குநர் ஏ.வி தர்மா ரெட்டி அதிரடியான நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.
அதாவது சேனலின் புனிதத் தன்மை, ஆன்மீக செயல்பாடுகள் ஆகியவற்றை உறுதி செய்யும் வகையிலும், பக்தர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயல்படவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசிய தர்மா ரெட்டி, SVBC சேனலின் அனைத்து செயல்பாடுகளும் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவு, நிதித்துறை, சைபர் செல் மற்றும் ஐடி விங் ஆகியவற்றின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
